ac shanmugam and kathir anand

அந்த மூன்று லட்சம் ஓட்டுக்கள் யாருக்கு? குழப்பத்தில் அ.தி.மு.க – தி.மு.க

slider அரசியல்
வேலூர் தொகுதிய
ac shanmugam and kathir anand

 

வேலூர் தொகுதி  நாடாளுமன்றத் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவினாலும், அ.தி.மு.க மற்றும் தி.மு.க இடையேதான் உண்மையான மோதல் நிலவுகிறது. எப்படியாவது வெற்றி பெற்றாகவேண்டும் என்கிற முனைப்போடு இந்த இரு கட்சிகளும் மிகக் கவனமான திட்டமிடல்களுடன் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இக் கட்சிகளின் பிரசாரங்களும், அந்தந்த கட்சிகளின் முன்னணி தலைவர்களின் வருகையும், வேலூர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற சட்டமன்றத் தொகுதிகளையும் ஏகத்துக்கும் பரபரப்புக்குள்ளாக்கியிருக்கிறது.

 

இப்போதைய நிலவரப்படி தி.மு.க.வின் கதிர் ஆனந்துக்கா வெற்றி? அ.தி.மு.க.வின் கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கா வெற்றி? என்பது மதில்மேல் பூனையாக இருக்கிறது என்கிறது அங்குள்ள அரசியல் வட்டாரம்.

குறிப்பாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் என்று வேலூரில் திரும்பிய பக்கமெல்லாம் கட்சித் தலைவர்களின் தலைதான் தென்படுகிறது.   தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்தைவிட பரபரப்பாகவும் படபடப்பாகவும் இருப்பது, அவரின் தந்தை துரைமுருகன்தான். மகனின் வெற்றிக்காக பம்பரமாக சுழன்று வேலை செய்கிறார்.

இந்தத் தொகுதியில் பெரும்பான்மையாக இருப்பவர்கள் வன்னியர் மற்றும் முதலியார் சமூகத்தினர்தான். துரைமுருகன், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். ஏ.சி.சண்முகம், முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர். தங்கள் சமூக வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் தங்களுக்குக் கிடைத்துவிட வேண்டும் என்று இரண்டு தரப்புகளும் தீவிரமாகச் செயல்படுகின்றன.

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆம்பூர், குடியாத்தம் தொகுதிகளை தி.மு.க. கைப்பற்றியது, தி.மு.க.வுக்குப்  பிளஸ்ஸாக கருதப்படுகிறது என்றாலும், மற்ற நான்கு தொகுதிகளிலும் அ.தி.மு.க வலுவான நிலையில் காணப்படுவது தி.மு.க.வுக்கு பயத்தை வரவழைத்திருக்கிறுது.

வேலூர் பாராளுமன்றத் தொகுதியை பொறுத்தவரை 3 லட்சம் முஸ்லீம் ஓட்டுக்கள் இருக்கிறது. ஒரு காலத்தில் இந்த ஓட்டுக்களில் 90 சதவீதம்  தி.மு.க.வுக்கு விழுந்தன. ஆனால், கடந்த பத்து ஆண்டுகளில் அ.தி.மு.க இந்த வாக்கு வங்கியை உடைத்துவிட்டது.

மேலும், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நிலோபர் கபில் அமைச்சராகவும் இருந்துவருவதும் அ.தி.மு.க.வுக்கு பிளஸ்ஸாக வாய்ப்புண்டு. இதே மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஜானுக்கு அ.தி.மு.க. தலைமை சமீபத்தில் மாநிலங்களவை எம்.பி.யாக்கியதும் இந்த 3 லட்சம்  ஓட்டுக்களை குறிவைத்துதான் என்றும் சொல்கிறார்கள்.

ஆனால், தி.மு.க.வின் கணக்கு எல்லாம் பா.ஜ.க.வோடு கூட்டணி உறவு வைத்திருக்கும் அ.தி.மு.க.வுக்கு முஸ்லிம்கள் ஓட்டு போடமாட்டார்கள் என்பதுதான். இது எந்தளவு ஓர்க்அவுட் ஆகும் என்று சொல்ல முடியாது. வெற்றியை தீர்மானிக்கும் காரணியாக இருக்கும் இந்த 3 லட்சம் ஓட்டுக்கள் மீதான குழப்பம்தான் வேலூர் தொகுதியின் வெற்றி தி.மு.க.வின் கதிர் ஆனந்துக்கும், அ.தி.மு.க.வின் கூட்டணி வேட்பாளரான ஏ.சி.சண்முகத்துக்குமான மதிமேல் பூனையாக இருக்கிறது என்கிற கருத்தை வலுப்படுத்துகிறது.

எம்.டி.ஆர்.ஸ்ரீதர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *