பால சரஸ்வதி அம்மையார்

என்னைக் கவர்ந்த பெண்கள் – விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

slider உலகம்
பால சரஸ்வதி அம்மையார்
பால சரஸ்வதி அம்மையார்

 

 

 

நிலவும் பெண்ணும் கவிஞர்களை உருவாக்கும் மாயம், உலகம் அறிந்த இரகசியம். இங்கே ஒரு சிறு மாற்றமாய் ஒரு கிராமத்தானை அறிவியலாளானய் உருவாக்கிய உண்மை உங்களுக்குத் தெரியுமா?  

 

அம்மா:

தெருவிளக்கில்லா கோதாவாடிக் கிராமத்தின் இரவு வானத்தில் நிலவையும், நட்சத்திரங்களையும் பற்றி அந்தப் பால்ய பருவத்தில் எனக்குப் பாலும் சோறுமூட்டி அம்மா அறிமுகப்படுத்தினார்.  உயரங்கள் தொடும் நாட்களுக்கு உரம் போட்ட நாட்களவை.  ஆற்று மணலில் கோவில்கட்டி, குளத்துக் களிமண்ணில் வண்டிகள் செய்து ஓடவிட்டுப் பார்த்து, உடம்பெல்லாம் புழுதியும் சகதியுமாய் வந்த பள்ளிப் பருவத்தில், முகம் கோணாமல் கைகால் அலம்ப வைத்து, உணவுக்குப் பின் சமர்த்தாய் படிக்கவைத்த அம்மாவின் சாமார்த்தியம் படிப்புடன் ஒரு படைப்பாளியையும் என்னுள் முளைக்கச் செய்தது.

தலை முடியைத் தூக்கி வாரிவிட்டு, பாண்ட்ஸ் பவுடர் பூசி, இஸ்திரி போட்ட சட்டையும், கால்சட்டையும்  அணிவித்து அண்ணன் தம்பி, தங்கைகளாய் எங்கள் ஐவரையும் பள்ளிக்கு அனுப்பி வைத்து அழுகு பார்த்த அம்மாவின் கண்களில் இன்று நாங்கள் பல்கலைக்கழக வளாகங்களில் பட்டமும் பரிசும் வாங்கும் காட்சிகள் அன்றே கனவாய்த் தெரிந்ததோ? சளையாத உழைப்பாளி அப்பா, இருந்தும் சங்கிலியாய் பீடி குடிப்பார்; இராமாயணத்தின் வாலி கதை கூறி. ‘‘அப்பாவின் நல்ல குணங்களை எடுத்துக்கொள் மற்றதைத் தவிர்’’ என்று அம்மா சொன்ன அறிவுக் கதைகள் என்னையும் என் தம்பிகளையும் அப்படியே உருவாக்கிய மாயம் இன்று தைரியமாக இங்கு எழுதும் ஆண்மகனாய் என்னை ஆளாக்கியதோ!

ஐந்தாம் வகுப்புக் கூடத் தாண்டாத அம்மா, எங்களுடன் சேர்ந்து அம்புலிமாமாவில் ஆரம்பித்து மு.வ.நாவல் வரை படிக்குமளவு முன்னேறிய போது, புத்தகம் படிக்கும் பழக்கம் எங்களுள் ஒட்டிக் கொண்டதோ!   எல்லாவற்றிற்கும் மேலாக நான் தவிர்க்க முயலும் அந்த பிடிவாதம், சாடாரென்று வரும் கோபம், அசைவ உணவில் மோகம், மெல்ல எட்டிப் பார்க்கும் முன் வயிறு எல்லாம் கூட அம்மாவின் சீதனமாய் இந்த ஆண்மகனுக்கு!   எனது ஊரில் ஒரு பெண்கள் பள்ளியில் பெண்களாகச் சேர்ந்து வைத்திருந்த ஒரு வரவேற்பு பலகையில், ‘‘பாலசரஸ்வதி மயில்சாமி அண்ணாதுரை வருக வருக’’ என்று எழுதியிருந்தது. அண்ணாதுரையின் வளர்ச்சியில் அப்பா, அம்மா இருவர் பங்கும் இருக்கும் போது எப்படி அப்பாவின் பெயரை மட்டும் முன்னால் எழுதுவது என்று எனது அம்மாவின் பெயரை முன்னிறுத்தி எழுதியிருந்தார்கள் பெண்குழந்தைகள்.

 

தங்கைகள்: அப்பாவை உரித்து வைத்த வடிவில் ஒரு தங்கை மணிமேகலை. அம்மா வடிவில் மறு தங்கை மகாலட்சுமி, அம்மையும் அப்பனுமாய்.   அடுத்தடுத்த குழந்தைகள், குறைப்பிரசவங்கள் என்று அம்மாவின் உடல் நிலை குன்றியதால், அம்மாவின் சமையல்கட்டு வேலைகள் முடங்கின. வீட்டு வேலைகளைத் தங்கைகள் எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம். பள்ளிப் படிப்புடன் வீட்டு வேலைகள் என அவர்கள் படும் சிரமத்தைக்கண்டு, நானும் வீட்டு வேலைகளில் பங்கெடுக்க ஆரம்பித்தேன்.  வீட்டுக் கிணற்றிலிருந்து நீரிறைப்பது, இட்லிக்கு மாவு ஆட்டுவது என்று பெண்கள் செய்ய வேண்டிய வேலை என்றிருந்த சில பணிகளை நான் தயங்காது எடுத்துச் செய்தேன். பின்னாளில் இந்திய விண்வெளி ஆய்வகத்தில் சிறு சிறு பணிகளையும் தயங்காது செய்யக் காரணம் அந்த அணுகுமுறைதான், என்னை நிலவு வரை தூக்கிவிட்டு, இன்று செவ்வாய் கிரகம் நோக்கித் திருப்பியுள்ளதோ!

இரண்டு தங்கைகளும்கூட நன்றாகப் படித்தார்கள்தான். இருந்தாலும், பள்ளிப் படிப்பை அவர்கள் தாண்டாததற்குக் காரணம், ஆண்பிள்ளைகளான எங்களின் உயர்கல்விச் செலவு பற்றிய பயம்; ஆரம்பப் பள்ளி ஆசிரியரான அப்பாவிற்கு அவர்களையும் கல்லூரியில் சேர்த்துப் படிக்க வைக்க முடியாது போனது. நானும் எனது தம்பியும் இன்று பி.எச்.டி முடித்திருக்கிறோம் என்றால் அதற்கு எனது தங்கைகள் அன்று தங்கள் கல்லூரிப் படிப்பைத் தியாகம் செய்ததும் ஒரு காரணம்தான். அண்ணன் தங்கைகளுக்குத் திருமணம் செய்து வைப்பது வழக்கம். எங்கள் வீட்டிலும் அது நடந்தது. ஆனால், தங்கை அண்ணனுக்குத் திருமணம் நடக்கக் காரணமான அதிசயம் என் வீட்டில் நிகழ்ந்தது.

திருமணத்தில் ஒரு சிரத்தையின்றி பெங்களூர் விண்வெளி ஆய்வகத்தில் இருந்த காலம் அது. தாடியுடன் திரிந்த எனது உருவம் அந்தக் கதையைச் சரியாகச் சொல்லும் என நினைக்கிறேன். உறவில் யாரும் பெண் கொடுக்கத் தயாராக இல்லை. தங்கையின் பங்களிப்பால் ஒரு இடத்துக்கு எனக்கேற்ற பெண் என்று காண்பிக்கக் கூட்டிச் சென்றார்கள். நம்பிக்கையில்லாமல் நான் சென்றேன். தங்கையின் நம்பிக்கை பலித்தது. என் வாழ்வின் ஒரு பெரிய திருப்பு முனை அது. தங்கைகள், எனது அமைதியையும் ஆற்றாமையையும் புரிந்து கொள்ளும் உள்ளங்கள். அண்ணனின் சீதனத்தை விட, அண்ணன் என்பதற்காகவே பெருமைப்படுபவர்கள். அண்ணனைக் காட்டியே அவர்களின் குழந்தைகளை உயரம் தொட ஊட்டி வளர்த்தவர்கள். எனது உயரங்களின் எல்லைகளை நான் உயர்த்திக் கொள்ள உத்வேகமூட்டிய அஸ்திரமதுவோ? மனைவி: முப்பது வயது முடிந்து எனது முப்பத்தோராவது வயதில், மூன்றுமாத ஜெர்மன் பயணத்துக்கு முன்பாக, அவசர அவசரமாக பெண்பார்க்கும் சடங்கில் நான் பார்த்த ஒரே பெண் வசந்தி. அடுத்து மூன்றாவது மாதத்தில் நான் வெளிநாட்டிலிருந்து திரும்பிய நான்காம் நாள், திருமணத்தில் வசந்தியே என் மனைவியானார். இருப்பத்தாறு வருடத் திருமண வாழ்வில் எனது உடல் எடை கூடவும், சதை போடவும், சமையல் செய்யத் தெரியாதிருந்த புது மனைவி எனக்காக அசைவச் சமையலில் இராணி ஆனதே காரணமக இருக்குமோ! வேலை, வேலையென்றே இருந்தவனை வேலையைத் தாண்டிய வெளியுலகமும் உண்டு என்று உணர்த்திய மனைவி. ஆடையில் அதிகம் கவனம் செலுத்தாத எனக்கு, மூக்குக் கண்ணாடி முதல் ஷூ விற்கான சாக்ஸ் வரை தேடித் தேடி தேர்ந்தெடுத்து வாங்கும், எனது பள்ளிக்காலத்து அம்மாவை நினைவூட்டும் மனைவி. சந்திரயான் திட்டம் என் கைக்கு வந்த அதே தருணத்தில், வீடு தேடி வந்த வெளிநாட்டுப் பணியை உதறித்தள்ள, உத்வேகம் ஊட்டிய மனைவியாய் இல்லாதிருந்தால், இப்படிப்பட்ட சரித்திரம் படைத்த சந்திரயான் வாய்ப்பை நான் இழந்திருப்பேனோ? வீட்டில், இந்த இடத்தில் இந்தப் பொருள், இந்த நேரத்தில் இந்தப் பணி என்ற அந்த ஒழுங்கு, எனது கவனம் எனது பணிகளை விட்டு விலகாது காக்கக் காரணமாக உள்ளதோ? உலகறிந்தவனாய் நான் வளர்ந்திருந்தாலும், தனது உலகம் என என்னை எண்ணும் ஓருயிர். எனது நிழலாய் என்னுடன் பயணிக்கும் ஜீவன். தன்னால் என்னுடன் வரமுடியாத போது எனது உதவியாளர்களை நிமிடத்திற்கு நிமிடம் அழைத்து எனது உடை, உணவு, ஓய்வு என்று எல்லாம் பார்த்துக் கொள்ளும் பாங்கு, எல்லாம் எனக்குத் கிடைத்த வரமோ?

ஒரு சமயம் எழுத்தாளர் அமரர் சுஜாதா சொன்னார், ‘‘ஹீரோக்கள் எல்லாம் பெரும்பாலும் அவரவர் வீட்டில் ஜீரோக்கள்தான்’’ என்று! மற்ற வீட்டில் எப்படியோ எனது வீட்டில் எனது நடை, உடை, பேச்சு, எழுத்து, பணி என்று எனது ஓவ்வொரு அசைவின் இரசிகை எனது மனைவி வசந்தி. என்னைப்பற்றிய ஊடகப் பதிவுகள் எல்லாவற்றையும் வீட்டில் சேர்த்து வைத்திருக்கும் பாங்கே ஓர் அழகு. என்னை மேலும் மேலும் புதிதாய் ஜனிக்கச் செய்யக் காரணிகள் இவையோ? எனக்கே எனக்காய் எனது மனைவி எழுதிய கவிதைகள், தோழனாக வளர்த்து விட்டிருக்கும் எங்கள் ஒரே மகன் கோகுல், கோவில் போல் வைத்திருக்கும் எங்கள் வீடு ‘‘கோகுலம்’’, நான் தனியே அமர்ந்து எழுதவும் படிக்கவும் கொடுக்கப்பட்ட அமைதியான அன்றாட மாலைப் பொழுதுகள், என்று விரியும் வரிசை வசந்தியினால் கிடைத்த பரிசுகள் எனக்கு! கங்கை ஜீவ நதி என்றால் வெள்ளமாய் ஓடி வரும் நீரே ஞாபகம் வரும். ஆனால் வெள்ளம் பொங்கிப் பிரவகிக்கும், நீர் நதியாவது அதன் இருபுறம் நீளும் கரைகளால். நாம் பார்க்கும் காட்சி கண்களினால், அந்தக் கண்களைக் காப்பது இமைகள்தானே? கரைகளாய், கண் இமைகளாய் தாயும், தமக்கைகளும், மனைவியும் எனக்கு!

 

மதுமிதா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *