படைப்பாளியின் வளர்ச்சிக்கு எதிர்மறை விமர்சனங்கள் நிச்சயம் தேவை!- எழுத்தாளர் அருணாராஜ் Reviewed by Momizat on . [caption id="attachment_677" align="alignnone" width="768"] எழுத்தாளர் அருணாராஜ்[/caption]       தனது முதல் படைப்பிலேயே அறியப்படுகிற எழுத்தாளர்கள [caption id="attachment_677" align="alignnone" width="768"] எழுத்தாளர் அருணாராஜ்[/caption]       தனது முதல் படைப்பிலேயே அறியப்படுகிற எழுத்தாளர்கள Rating: 0
You Are Here: Home » இலக்கியம் » படைப்பாளியின் வளர்ச்சிக்கு எதிர்மறை விமர்சனங்கள் நிச்சயம் தேவை!- எழுத்தாளர் அருணாராஜ்

படைப்பாளியின் வளர்ச்சிக்கு எதிர்மறை விமர்சனங்கள் நிச்சயம் தேவை!- எழுத்தாளர் அருணாராஜ்

எழுத்தாளர் அருணாராஜ்

 

 

 

தனது முதல் படைப்பிலேயே அறியப்படுகிற எழுத்தாளர்களின் வரிசையில் தனக்கென ஓர் இடத்தை தக்க வைத்திருக்கிறார் திருமதி அருணாராஜ். 2017ம் ஆண்டு வெளிவந்த இவரின் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘கருப்பி’ கடல் கடந்தும் வாசகர்களைப் பெற்ற நிலையில், 2018 டிசம்பரில் தனது அடுத்த படைப்புக்கு, ‘இரண்டாவது புத்தகம்’ என்றே தலைப்பிட்டு, ‘வாசகசாலை’ பதிப்பகம் மூலமாக வெளியிட்டிருக்கிறார். இரண்டாவது புத்தகமும் இவருக்கு பரவலான வாசகர் வட்டத்தைத் தந்திருக்கிறது.

 

1991ம் ஆண்டு பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவி என்கிற சாதனைக்கு சொந்தக்காரரான இவர், பல் மருத்துவரும்கூட. அருணாராஜ் அவர்களோடு ‘சூரியகதிர்’ சார்பாகப் பேசினோம்.

 

உங்கள் முதல் படைப்பான ‘கருப்பி’ சிறுகதைத் தொகுப்பு வாசகர் வட்டத்தில் குறிப்பிடும்படியான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இதை முன்கூட்டியே எதிர்பார்த்தீர்களா?

“இந்தளவு பேசப்படும் என்று எதிர்பார்க்கவில்லை. ஃபேஸ்புக்கில் எனக்கு கொஞ்சம் ‘ஃபாலோயர்ஸ்’ உண்டு. அவர்களிடம் ‘கருப்பி’க்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், ‘ஃபேஸ்புக்’ ரசிகர்களையும் தாண்டி ‘கருப்பி’ பரவலாகப் பேசப்பட்டதும், இப்போது வரை பேசப்படுவதும் எனக்கு ஆச்சர்யத்தை தந்த ஒரு விஷயம்தான்.”

 

‘பிறரை ரசிக்கத் தூண்டும் விதமாக வரக்கூடிய எழுத்தாற்றல் என்பது இறைவன் கொடுத்த வரம்’ என்று சொல்கிறவர்களுக்கு உங்கள் பதில்?

“எனக்கு இறை நம்பிக்கை கிடையாது. கலைகள் வாய்க்கப் பெறுவது அறிவியல் கூற்றுப்படி ஒவ்வொருவருடைய ‘ஜெனடிக்- மேக்கப்’ சம்பந்தப்பட்ட விஷயம். எந்தவித வம்சாவழிப் பழக்கமும் இல்லாமல் தானாக பாடவோ, வரையவோ, ஆடவோ கற்றுக்கொண்டவர்கள் ஏராளமானோர் உள்ளனர். அது அவரவர் திறமை, ஆர்வம், முயற்சி சம்பந்தப்பட்ட விஷயமாகவே பார்க்கிறேன். மற்ற கலைகளைப் போலவே எழுத்தும் ஒரு கலை. ஒருவரை ஈர்க்கும் பாடல் மற்றவரை ஈர்க்காமல் போவது சகஜம் தானே? அது போலவே எழுத்தும். வாசகர்கள் நிறைய இருப்பதனால் அவருக்கு கடவுளின் ஆசி அதிகம், மற்றவருக்கு ஆசி குறைவு என்பதில் எனக்குத் துளியும் உடன்பாடில்லை.”

 

எழுத்து என்று வரும்போது, உலகம் முழுக்கவே ஆண் படைப்பாளிகள்தான் அதிகமாய் அறியப்படுகிறார்கள். வாசகர்களிலும் ஆண்களே மிகுதியாக இருக்கிறார்கள். ஏன் இப்படி?

“பெண் படைப்பாளிகள் குறைவு என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால், பெண் வாசகர்களும் குறைவு என்பதை இன்றைய நிலையில் ஒத்துக்கொள்ள மாட்டேன். அந்தக் காலத்தில் பெண்களுக்குக் கல்வியறிவு எளிதில் கிடைக்கவில்லை. பெண் என்பவள் தனக்கான கல்வி கிடைக்கப்பெற்று, வேலைக்குச் செல்ல ஆரம்பித்த போதும் அவளுக்கான சமூக, குடும்ப சூழ்நிலைகளில் பெரிதும் மாற்றம் வந்துவிடவில்லை. வேலைக்கும் சென்று, வீட்டையும் பராமரிக்கும் இரட்டை சுமைதான் பெண்கள் தலையில் ஏற்றப்பட்டது. வாசிக்கவோ, படைக்கவோ ஆண்களைப் போல் அல்லாமல் பெண்களுக்கு கிட்டும் நேரம் மிக மிகக் குறைவு. நினைத்த மாத்திரத்தில் ஏதாவது ஓர் ஊருக்குச் சென்று விட்டு வந்து, அதைப் பற்றி ஒரு பத்தி எழுத ஒரு குடும்பத் தலைவனால் முடியும். ஒரு குடும்பத் தலைவியும் அதே வேலையை செய்யக்கூடிய காலத்தில், உங்கள் கேள்வி அர்த்தமற்றதாகியிருக்கும்.”

 

ஓர் எழுத்தாளராக எப்போது அதிக சுதந்திரத்தோடு வார்த்தைகளைப் பயன்படுத்த முடிகிறது? உங்களது சுய அனுபவத்தைக் கொண்டு எழுதும்போதா, அல்லது மற்றவருக்கு நேர்ந்த அனுபவத்தைக் கொண்டு எழுதும்போதா?

“தன்னுடைய சொந்தக் கதையோ, அல்லது மற்றவருக்கு நேர்ந்த சம்பவமோ, அதை எழுத்து வடிவில் கொண்டுவரும் பொழுது, அது அந்த எழுத்தாளரின் படைப்பாகவே பார்க்கப்பட வேண்டும். எல்லோரையும் திருப்திபடுத்த எந்த எழுத்தாளராலும் முடியாது. ஆனால், ‘யாரையுமே பாதிக்காமல் எழுத வேண்டும், யாரும் நம்மை வசைப்பாடி விடக்கூடாது’ என்ற எண்ணத்தில் எழுதப்படும் எதிலும் உண்மை முழுமையாக இருக்க வாய்ப்பே இல்லை. தன் கதையோ அல்லது பிறர் கதையோ, நேர்மையாக எழுதப்படும் எதற்கும் சுதந்திரமும் அதிகம், வீச்சும் அதிகம்.”

 

படைப்பு என்றாலே எதிர்மறையான விமர்சனங்கள் தவிர்க்க இயலாது. உங்கள் படைப்புகளைப் பற்றியும் எதிர்மறை விமர்சனங்கள் குறைந்த அளவிலாவது நிச்சயமாக வந்திருக்கும். இந்த விமர்சனங்களை முன் வைக்கும் வாசகர்களுக்கு உங்கள் பதில்?

“எதிர்மறையான விமர்சனங்கள் ஒரு படைப்பாளி தன்னைத் தானே சீர் தூக்கிப் பார்க்க உதவும் ஒரு கருவி. ஒரு படைப்பாளியின் வளர்ச்சிக்கு எதிர்மறை விமர்சனங்கள் நிச்சயம் தேவை. எதிர்மறை விமர்சனங்களற்ற படைப்புகள் ஒரே நிலையில் தேங்கி விடுகின்றன என்பதே என் கருத்து. ‘கருப்பி’ புத்ததகத்திற்கு வந்த விமர்சனங்கள் எனக்கு பலதரப்பட்ட வாசகர்களின் மனநிலையை அறிய உதவியாகவே இருந்தது. தவறுகள் சுட்டிக்காட்டப்படாதவரை அவற்றை திருத்திக்கொள்ள வாய்ப்பே இல்லாமல் போய்விடும் அல்லவா?”

 

உங்களுடைய ‘இரண்டாவது புத்தகம்’ படித்தேன். முதல் புத்தகமான ‘கருப்பி’ சிறுகதைத் தொகுப்பிலிருந்த எழுத்து நடை இரண்டாவது புத்தகத்தில் முற்றிலுமாய் மாறுபட்டு, ரசித்து, சிரித்து வாசிக்கும்படியாய் இருந்தது. இந்த எழுத்து நடை மாற்றத்திற்கு என்ன காரணம்?

“உண்மையைச் சொன்னால் ‘கருப்பி’தான் எனது எழுத்து நடை மாற்றம் எனலாம். ஏனென்றால், நான் முதன் முதலில் ‘ஃபேஸ்புக்’கில் எழுத ஆரம்பித்தது இரண்டாவது புத்தகத்தில் உள்ள கட்டுரைகளைப் போன்ற பதிவுகளைத் தான். அதற்குப் பின்னரே சிறுகதை எழுதும் ஆர்வமும் வந்தது. ஆனாலும், ‘கருப்பி’ முந்திக்கொண்டாள். சிறுகதைகளையும் ‘இரண்டாம் புத்தகம்’ போல கொஞ்சம் நகைச்சுவையுடன் எழுத இப்போது முயற்சித்து வருகிறேன்.”

 

விவரிப்பைக் காட்டிலும், பொருத்தமான வசனங்களைக் கொண்டே கதையை நகர்த்திச் செல்கிறீர்கள். ஏன் இப்படி?

“பொதுவாகவே நிறைய விவரணைகள் உள்ள புத்தகங்களை படிக்காமல் தவிர்த்துவிடுவேன்.  வசனம் அதிகமாகவும், விவரிப்புகள் குறைவாகவும் எழுதும் பழக்கம் அதிலிருந்து வந்த பழக்கமாகக் கூட இருக்கலாம்-. ஒவ்வொருவருக்கும் ஓர் எழுத்து நடை இருக்கும். இது எனக்கு அமைந்த எழுத்து நடை. ஆனால், அதிகமான வசனங்களும் வாசகனை சலிப்படையச் செய்யும் என்பதையும் உணர்ந்துள்ளேன்.”

 

சினிமாவில் வசனம் எழுதும் வாய்ப்பு வந்தால்?

“கத்துக்குட்டியான என்னிடம் எப்படி இது போன்ற பெரிய கேள்விகள் கேட்கத் தோன்றுகிறது? எனக்கு எழுத வரும் என்பதே சில வருடங்களுக்கு முன்பு வரை எனக்குத் தெரியாது. அதனால், ஏதாகிலும் வாய்ப்பு வரும்போது பார்த்துக்கொள்ளலாம்.”

 

நீங்கள் நன்றாகப் பாடுவீர்கள் என்று கேள்விப்பட்டோம். உண்மையா?

“ஹாஹா… ‘நன்றாக’ அப்படிங்கறது எல்லாம் பொய். பாடுவேன், அவ்வளவு தான். வாசிப்பைப் போல பாடுவதும் மிகப் பிடிக்கும். முறையான பயிற்சி ஏதும் எடுத்துக்கொண்டதில்லை. என்னுடைய பாட்டி, சித்தி, அக்கா எல்லோருமே ஓரளவு பாடக்கூடியவர்கள். முன்பே கூறியதைப் போல ‘ஜெனடிக்ஸ்’தான். எழுதுவதற்கு ‘ஃபேஸ்புக்’ எப்படி ஒரு ப்ளாட் ஃபார்மோ, அதைப்போல பாடுவதற்கு ‘ஸ்மூல்’ ஒரு நல்ல ‘ப்ளாட்ஃபார்ம்’. பொழுது போகாத போது, அங்கே கொஞ்சம் பாடுவேன். அவ்வளவே.”

 

ஓர் எழுத்தாளரின் முழுமையான ஆற்றல் நாவல் எழுதும்போதுதான் வெளிப்படும் என்பது வெகுஜன வாசகர்களில் சிலரின் கருத்து. இது பற்றி உங்கள் கருத்து?

“உண்மை.  நாவல் எழுதுவது சாதாரண விஷயமல்ல. சிறுகதைகளில் நான்கு பக்கங்களுக்குள் ஏதோ ஓர் உணர்வை வாசகனுக்கு கடத்திவிட முடியும். ஆனால், ஒரு வரலாற்று சம்பவத்தை நிறுவ நிறைய தரவுகள் தேவைப்படும். ஒரு கதாபாத்திரத்தை வடிவமைக்க நிறைய விவரணைகள் தேவை. சிறுகதையைப் போல வெறும் வசனத்தாலேயே ஆழமில்லாமல் எழுத முடியாது. நாவல் எழுதுபவருக்கே முதலில் ஆழ்ந்த வாசிப்பு வேண்டும் என்பது என்னுடைய கருத்து.”

 

வெகுஜன வாசகர் வட்டம், ஜனரஞ்சக வாசகர் வட்டம்! இதுபற்றி?

“இரண்டும் வெவ்வேறா? நான் இலக்கியவாதி கிடையாது. என்னுடைய ‘கருப்பி’ சிறுகதைத் தொகுப்பும் தீவிர இலக்கிய வகையறாக்களில் வராது. உங்கள் கூற்றுப்படி ‘கருப்பி’ வெகுஜன வாசகர்களுக்கானது என்று நம்புகிறேன். வெகுஜன வாசகனை தீவிர இலக்கியங்களை வாசிக்க வைப்பது கடினம். ஜனரஞ்சகமாக எழுதும் எழுத்தாளர் கேள்விபட்டுள்ளேன். ஜனரஞ்சக வாசகர்கள் என்று தனியாக இருக்கிறார்களா?”

 

சந்திப்பு : பாலமுருகன்

 

About The Author

Number of Entries : 171

Leave a Comment

© 2011 Powered By Wordpress, Goodnews Theme By Momizat Team

Scroll to top