மோடியுடன் ட்ரம்ப்

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் பதிலடி – பயத்தில் பின்வாங்கிய அமெரிக்கா!

slider அரசியல் உலகம்
மோடியுடன் ட்ரம்ப்
மோடி ட்ரம்ப்

 

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மூன்று நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு வெள்ளை மாளிகையில் டிரம்பை சந்தித்தார் இம்ரான். இந்த சந்திப்பு முன்னிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ’’காஷ்மீர் பிரச்சினையில் இந்தியா- பாகிஸ்தானுக்கு மத்தியஸ்தராக இருந்து தீர்த்து வைக்குமாறு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஓசாகாவில் நடந்த ஜி-20 மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் கோரினார்’’ என்று கூறினார். இந்தப் பேச்சு இந்திய அரசியலில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

காஷ்மீர் விவகாரம் என்பது இரு நாடுகளுக்கிடையேயான விவகாரம். இதில் மூன்றாவது நாடு தலையிடக் கூடாது என்பதே சிம்லா ஒப்பந்தமாகும்.  தெற்காசியாவில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த விவகாரத்தில் பரபரப்புக்கு பேர்போன அமெரிக்க அதிபர், இந்த பிரச்னையிலும் உளறிக் கொட்டவே, அது இந்திய அரசியலில் மட்டுமல்ல உலக அரசியலிலும் பெரும் சூறாவளியாக புறப்பட்டிருக்கிறது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “இந்த விவகாரத்தில் நடந்த உண்மையினை நாட்டு மக்களுக்கு மோடி தெரிவிக்க வேண்டும்” என்றும், “மோடி காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு துரோகம் இழைத்துவிட்டதாகவும்” பேசியுள்ளார். பா.ஜ.க.வுக்கு எதிரான வேறு சில எதிர்க் கட்சிகளும் பா.ஜ.க.வையும், மோடியையும் இந்த பிரச்னையில் கடுமையாக பேசிவருகின்றன.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறுகையில், ‘’மோடி குறித்து டிரம்ப் வெளியிட்ட கருத்து உண்மை கிடையாது. பிரதமர் மோடி டிரம்ப்பிடம் எந்த விதமான உதவியும் கேட்கவில்லை. நாங்கள் அமெரிக்க அரசின் உதவியை எப்போதும் கேட்கவில்லை. பாகிஸ்தான் பிரச்சனையில் மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது. சிம்லா ஒப்பந்தம் மற்றும் லாகூர் ஒப்பந்தம் இரண்டையும் பாகிஸ்தான் மதிக்க வேண்டும். அப்போதுதான் நாங்கள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து செய்வோம். அதிலும் பாகிஸ்தானுடன் இந்தியா தனியாக மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தும். இதில் அமெரிக்காவின் உதவியை இதுவரை கேட்கவில்லை. இனியும் கேட்க மாட்டோம்’’ என்று ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இந்திய தரப்பிலிருந்து டிரம்ப் பேச்சுக்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பியதால்,  உடனடியாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம், ‘’பாகிஸ்தானில் இயங்கும் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக அந்நாடு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தீவிரவாத இயக்கங்களை ஒடுக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் முக்கியமானதொன்றாகும். காஷ்மீர் பிரச்சினை என்பது இந்தியா- பாகிஸ்தான் இரு தரப்பு உறவுகளால் மட்டுமே தீர்க்கப்பட வேண்டிய ஒன்று என்பதை நாங்கள் நம்புகிறோம். அமெரிக்கா மற்றும் முக்கிய நாடுகளின் நட்பு நாடு இந்தியா. அந்த வகையில் உலகம் முழுவதும் தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை எதிர்க்க பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம். இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தினால் அதை வரவேற்க தயார்’’ கூறியுள்ளது.

ஈரான், ஆப்கானிஸ்தான் போன்று காஷ்மீர் விவகாரத்திலும் இந்தியாவை சீண்டிப் பார்த்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு வெளியுறவு அமைச்சகம் மூலம் மோடி அரசு தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறது. இது குறித்து பாராளுமன்றத்தில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் விலாவாரியாக விளக்கமளித்துள்ளார். என்னதான் இந்தியா நட்பு நாடு என்று அமெரிக்க சொல்லி வந்தாலும், தெற்காசியாவில் இந்தியாவும், சீனாவும் வலிமை பெறுவதை சகிக்க முடியாத நாடுதான் அமெரிக்கா. இதற்கு காஷ்மீர் விவகாரம் மூலம் மத்தியஸ்தர் வேடத்தில் உள்நுழைய பார்க்கிறது டிரம்பின் அமெரிக்க அரசு. ஆனால், மோடி அரசு இந்த விவகாரத்தில் ஆரம்பத்திலே வெகுண்டெழுந்து எதிர்ப்பு காட்டியதால், உடனடியாக பின்வாங்கியிருக்கிறது அமெரிக்கா.

 

தொ.ரா.ஸ்ரீ.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *