கர்நாடக அரசியலின் நிஜ ஹீரோ!

slider அரசியல்
டி.கே.சிவக்குமார்

 

கர்நாடக மாநிலத்தில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க மற்றும் குமாரசாமியின் ம.ஜ.த. ஆகிய கட்சிகள் தனித்தனியாகத்தான் போட்டியிட்டன. தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 105 இடங்களும், காங்கிரஸுக்கு  78 இடங்களும், குமாரசாமியின் ம.ஜ.த.வுக்கு 37 இடங்களும் கிடைத்தன. ஆட்சி அமைக்க பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை என்றாலும் பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும், அதை ஆட்சிக்கு வரவிடக்கூடாது என்கிற நோக்கில் காங்கிரஸ் கட்சி முடிவு எடுக்க, 37 இடங்களில் மட்டுமே வென்ற ம.ஜ.த.வின் குமாரசாமி முதல்வரானார். காங்கிரஸ்க்கு துணை முதல்வர் பதவி உட்பட சில அமைச்சர்கள் பதவி கொடுக்கப்பட்டது.

தன் கட்சியின் 37 எம்.எல்.ஏக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் 78 எம்.எல்.ஏக்கள் ஆதரவு என்கிற ஒப்பந்தப்படி குமாரசாமி ஆட்சி 120 நாட்களுக்கு மேல் கடந்துவிட்ட நிலையில்தான், இரண்டு வாரங்களுக்கு முன்னர்  16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களால் குமாரசாமி ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட அரசியல் குழறுபடிகளால், கர்நாடக சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டடார் குமாரசாமி.

 

16 எம்.எல்.ஏக்கள் விலகிச் சென்றுவிட்டாலும்கூட, குமாரசாமி தலைமையிலான ஆட்சி முடிவுக்கு வராமல் தப்பித்துக்கொண்டே இருக்க, சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் தள்ளிப்போதல், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு, சட்டசபையில் பி.ஜே.பி. தர்ணா போராட்டம் என்று கர்நாடக அரசியல் விவகாரம் பரபரப்பான திசையிலேயே போய்க் கொண்டிருக்கிறது. எந்த அரசாக இருந்தாலும், இதுபோன்ற நெருக்கடியை சமாளிக்க முடியாமல் கவிழ்ந்திருக்கும்.

 

105 எம்.எல்.ஏக்கள் மற்றும் 16 அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ஆதரவு பெற்ற எடியூரப்பா முதல்வராக பதவியேற்க முடியாமல், குமாரசாமியின் அரசு இன்னும் தப்பித்துக்கொண்டே இருக்க என்ன காரணம்? குமாரசாமியின் திறமையா அல்லது காங்கிரஸ் கட்சியின் தந்திரமா? வேறு யார்?

 

அவர் தான் கர்நாடக அரசியலில் ஜெயின்ட் கில்லர் என்று அழைக்கப்படும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், தற்போதைய அமைச்சருமான டி.கே.சிவக்குமார். வலிமையான மனிதர்கள் வலிமையான இடத்தில் இருந்துதான் வருவார்கள். இது கர்நாடகாவில் எடுக்கப்பட்ட படமான கே.ஜி.எப்.பில் வரக்கூடிய வசனம். இந்த வசனம் அப்படியே பொருந்தக் கூடிய கர்நாடக அரசியல்வாதிதான் டி. கே. சிவக்குமார்.

இவருக்கு பெரிய அரசியல் குடும்ப பின்னணி எல்லாம் கிடையாது. காங்கிரஸ் கட்சியில் சாதாரண உறுப்பினராக சேர்ந்த டி. கே. சிவக்குமார், கொஞ்சம் கொஞ்சமாக கட்சிக்குள் வளர ஆரம்பித்தார். 1989ல்தான் இவரை எல்லா அரசியல் தலைவர்களும் கவனிக்க தொடங்கினார்கள். எப்படியும் தோல்வி அடைவார் என்று தெரிந்து காங்கிரஸ் கட்சி சிவக்குமாரை சதான்பூர் தொகுதியில் ம.ஜ.த. தேசிய தலைவர் தேவ கவுடாவை எதிர்த்து நிற்க வைத்தது.    ஆனால், அப்போது வந்த தேர்தல் முடிவு, இந்திய அரசியலையே உலுக்கியது. ஆம். அந்த தேர்தலில் தேவ கவுடா சிவக்குமாரிடம் படுதோல்வி அடைந்தார்.  அந்த நாள் முதல் கர்நாடக அரசியலில் இன்னொரு புது ஹீரோவாக  உருவானார் டி.கே.சிவக்குமார்.

இதுவரை  இரண்டு முறை தேவ கவுடாவை வீழ்த்தி இருக்கிறார் டி.கே.சிவக்குமார். அதன்பின் குமாரசாமியை சதான்பூர் தொகுதியிலும், அவரின் மனைவி அனிதா குமாரசாமியை கனகபுரா தொகுதியிலும் வீழ்த்தியுள்ளார். அப்போதிலிருந்து இவரை கர்நாடக அரசியலில் ”ஜெயிண்ட் கில்லர்” என்றுதான் எல்லோரும் அழைக்கிறார்கள். இவரின் அரசியல் ராஜ தந்திரங்களுக்கு நிறைய எடுத்துக்காட்டுகள் கூறலாம். கடந்த லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. ஆனால் டி.கே. சிவக்குமாரின் சகோதரர் மட்டும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.. இந்த வெற்றி பா.ஜ.க  முகாமை ரொம்பவே அதிர்ச்சியடைய செய்துவிட்டது. குறிப்பாக, பா.ஜ.க. தலைவரும், உள்துறை அமைச்ச்சருமான அமித்ஷா, இதற்காக கர்நாடக பா.ஜ.க. தலைவர்களை கூப்பிட்டு கடிந்து கொண்டதாகவும் தகவல் உண்டு.

இப்போதைய நிகழ்வின்போதுகூட, கர்நாடகாவில் ராஜினாமா செய்த 16 எம்.எல்.ஏ.க்கள் இருந்த மும்பை ரிசார்ட்டில் தனி ஆளாக போய் சண்டை போட்டவர்தான் டி.கே .சிவக்குமார். அப்போது வரை தென் இந்தியாவில் மட்டும் வைரலாக இருந்த டி.கே.சிவக்குமார், பா.ஜ.க.விற்கு எதிரான தேசிய முகமாக மாறினார்.  இவ்வளவுக்கு இன்னும் கர்நாடக காங்கிரஸ் கட்சித் தலைவராககூட ஒருமுறையும் பதவி வகிக்காதவர் தான் இந்த டி.கே.சிவக்குமார்.

இவர் குறித்து, “டி.கே.சிவக்குமார் எண்ணமெல்லாம் கர்நாடக முதல்வர் ஆவதுதான். அதற்காகதான் இவ்வளவு ராஜதந்திர வேலைகளும், அதிரடி வேலைகளும் செய்து வருகிறார். ஒருவேளை இந்த ஆட்சி கவிழ்ந்து எடியூரப்பா முதல்வரானால் கூட அவரால் நிம்மதியாக ஆட்சி செய்யமுடியாதபடி, அனைத்து அரசியல் தகிடுதித்தங்களிலும் ஈடுபடுவார் சிவக்குமார். அடுத்துவரும் சட்டமன்றத் தேர்தலில் இவரை முதல்வர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சி அறிவிக்குமானால், காங்கிரஸை வெற்றிபெற வைத்து முதல்வராகியும் விடுவார். அந்தளவு அரசியலில் மாயஜாலங்கள் செய்யத் தெரிந்தவர். தேசிய அளவில்கூட, பா.ஜ.க.வின் அமித்ஷாவை சமாளிக்க காங்கிரஸ் இவரை பயன்படுத்தலாம். அந்தளவுக்கு திறமையானவர், துணிச்சல் கொண்டவர். அதனால் தான் கர்நாடகாவில்  ‘ஜெய்ண்ட் கில்லர்’ என்று இவர் அழைக்கப்படுகிறார்’’ என்கிற தகவல் கர்நாடகாவில் தலைப்பு செய்தியாக ஓடிக் கொண்டிருக்கிறது.

 

எம்.டி.ஆர்.ஸ்ரீதர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *