அத்தி வரதர்

அத்திவரதர் பற்றி ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயரின் அதிரடி கருத்து

slider அரசியல்
அத்தி வரதர்
அத்திவரதர்

 

 

கடந்த 1-ம் தேதி முதல் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார் அத்தி வரதர். காஞ்சிபுரத்திலுள்ள வரதராஜர் பெருமாள் கோயிலின் தெப்பக்குளத்தில் நீருக்கடியில் சயனம் கொள்ளும்  அத்திவரதரை 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே கொண்டு வந்து, ஆகம பூஜைகள் செய்து 48 நாள்கள் வழிபடுவது ஐதீகம். பின்னர், மீண்டும் அத்திவரதர் குளத்துக்குள் சென்றுவிடுவார். கடைசியாக 1979 –ம் ஆண்டு அத்திவரதர் தரிசனம் தந்தார்.

 

இப்படி காலம் காலமாய் கடைபிடிக்கப்பட்டுவரும் வழக்கத்தை மாற்றச் சொல்லியிருக்கிறார் ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர். இவரது இந்த பேச்சு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அத்திவரதரை தரிசனம் செய்ய கூட்டம் தினமும்  அலைமோதுகிறது. இதில் முண்டியடித்துக் கொண்டு அத்திவரதரை தரிசனம் செய்ததால் ஏற்கெனவே 5 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்தன.  தமிழக முதல்வரும் அத்திவரதரை கோவிலுக்குள்ளே வேறு இடத்தில் வைத்து பக்தர்கள் வசதியாக தரிசிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.

இந்நிலையில்தான் ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர், “காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் உள்ள அத்திவரதரை மீண்டும் பூமிக்கடியில் வைக்கக் கூடாது. கடந்த காலங்களில் திருட்டு பயம் காரணமாக அத்திவரதரை பூமிக்கடியில் வைத்திருந்தனர். தற்போது அது தேவையில்லை என்பதால் முதல்வரை சந்தித்து அனைத்து மடாதிபதிகளும் கோரவுள்ளோம்” என்று கூறிருப்பதால் பெரும் சர்ச்சைகளும், பரபரப்பும் உண்டாகியிருக்கிறது.

இந்த ஜீயர் ஏற்கெனவே கடந்த ஆண்டு ஆண்டாள் குறித்து வைரமுத்து கூறிய ஒரு கருத்துக்கு பதிலடியாக, “எங்களுக்கும் சோடா பாட்டில் வீசத் தெரியும்” எனக் கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியவர்தான். அவர்தான் இப்போது அத்திவரதரை மீண்டும் குளத்தில் வைக்கக்கூடாது, கோவிலிலே வைக்கக் வேண்டும் என்கிற பொருளில் இப்படி கூறியிருக்கிறார்.

இவரது இந்த பேச்சுக்கு ஆன்மீக வட்டாரங்களிலிருந்தே பெரும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. பொதுவாக ஐதீகத்தில், வழக்கத்தில் நடைமுறையில் உள்ளவற்றில் மாற்றம் செய்தால், இயற்கை சீற்றம் ஏற்பட்டு மக்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். மேலும், நாட்டை ஆளும் அரசனுக்கு ஆட்சி வகையிலும் ஆபத்து ஏற்படலாம் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

ஏற்கெனவே செல்லும் இடமெல்லாம் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இந்த ஆட்சி விரைவில் கவிழும் என்று பேசிவரும் பேச்சால் முதல்வரின் தூக்கம் கெட்டு போயிருக்கிறது. இந்தமாதிரியான சூழ்நிலை இருக்கையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் போன்றவர்களின் பேச்சால் முதல்வர் மேலும் நெருக்கடிக்கு உள்ளாவார் என்கிறார்கள் அரசியலாளர்கள்.

 

விசாகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *