அசராத ஈரான் – அதிர்ச்சியில் அமெரிக்கா

slider உலகம்

 

அமெரிக்கா- ஈரான் இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரண்டு நாள் முன்புகூட இங்கிலாந்து நாட்டின் எண்ணெய் கப்பலை ஈரான் சிறைபிடித்துக்கொண்டது. இதனால், அமெரிக்காவுடன் இங்கிலாந்தும் கூட்டணி சேர்ந்து ஈரானுக்கு தக்க பாடம் புகட்ட நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறது.

 

இந்நிலையில், இன்று (ஜூலை 22-ம் தேதி), தங்கள் நாட்டில் இருந்த 17 அமெரிக்க சி.ஐ.ஏ. உளவாளிகளை கண்டுபிடித்துவிட்டதாகவும், அவர்களில் சிலரை தூக்கில் போடப்போவதாகவும் ஈரான் அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. இது அமெரிக்காவை மிகவும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

அமெரிக்க  நாட்டுடன் ஈரான் உறவில் மோதலும், பகையும் நாளுக்கு நாள் அதிகமாகத் தொடங்கியதிலிருந்தே ஈரான் தங்கள் நாட்டில் வசிக்கும் அமெரிக்கர் மற்றும் அமெரிக்காவுக்கு ஆதரவானவர்கள் மீது ஒரு கண் வைத்திருந்தது. அந்த கண்காணிப்பில் இப்போது அமெரிக்காவின் 17 சி.ஐ.ஏ. உளவாளிகளை கண்டுபிடித்து கைது செய்துள்ளதாக ஈரான் அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

இது குறித்து ஈரான் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரானில் செயல்பட்டு வந்த இந்த அமெரிக்க உளவாளிகளை சில நாட்களுக்கு முன் ஈரான் ராணுவத்தினர் கண்டுபிடித்து இருக்கிறார்கள். ஒரு குழுவாக செயல்பட்டு வந்த இவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம்.

இவர்கள் ஈரானின் எண்ணெய் கிணறுகள் குறித்த தகவல்கள், அணு ஆயுத உற்பத்தி குறித்த தகவல்கள், அரசுத் திட்டங்கள் குறித்த தகவல்களை திருடி வெளியிட்டு இருக்கிறார்கள். மேலும், இவர்கள் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக  ஈரானில் செயல்பட்டு வந்துள்ளனர். . இவர்களிடம் இருந்து முக்கியமான ஆவணங்கள்  பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதில் சிலருக்கு தூக்கு தண்டனையும், சிலருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்படும்’’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஏற்கெனவே ஈரானுக்கு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துடன் பகை அதிகமாகிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், இந்த விவகாரத்தில் சவுதியும் உள் நுழைந்திருக்கிறது. இங்கிலாந்து எண்ணெய் கப்பல்களை ஈரான் சிறைபிடித்திருப்பதிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சவுதி, ஈரானுக்கு எதிராக அமெரிக்க ராணுவத்தை அனுப்புவோம் என்று கோபமும் காட்டியிருக்கிறது.

இரண்டு மாதங்களுக்கு முன்பே சவுதியில் அமெரிக்க ராணுவ படை  குவிக்கப்பட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது. இன்னமும் அமெரிக்க ராணுவத்தை வரவேற்க தயார். அவர்களை ஈரானுக்கு எதிராக பயன்படுத்தவும் தயார் என்றும் சவுதி கூறியுள்ளது.

’’ஈரான் என்றால் வெறும் தொல்லைதான்’’ என்று சமீபத்தில்கூட கருத்து சொன்ன அமெரிக்க அதிபர் டிரம்புக்கு,  ஈரான் 17 அமெரிக்க சி.ஐ.ஏ. உளவாளிகளை கைது செய்துள்ளதாக அறிவித்திருப்பதும், அவர்களில் சிலர் தூக்கில் இடப்படுவார்கள் என்று சொல்லப்பட்டிருப்பதும் பெரும் அதிர்ச்சியை தந்திருப்பதாக அமெரிக்க வெள்ளை மாளிகையை மேற்கோள் காட்டி தகவல்கள் வந்துக் கொண்டிருக்கின்றன.

மோதலின் உச்சகட்டத்தை எட்டியிருக்கும் இந்த விவகாரத்தில்  அமெரிக்கா அடுத்து என்ன முடிவு எடுக்க போகிறது என்பதை உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.

 

நிமலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *