இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் யார்?

slider விளையாட்டு

 

உலகப் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரையிறுதி ஆட்டத்தோடு நாடு திரும்பிய இந்திய கிரிக்கெட் அணி குறித்து பல்வேறு தகவல்கள் நாளும் வந்துக் கொண்டிருக்கிறது. இந்தத் தகவல்களில் புதிய பயிற்சியாளர் யார் என்பதுதான் முதன்மை இடம் வகிக்கிறது.

தற்போது பயிற்சியாளராக இருந்துவரும் ரவிசாஸ்திரியின் பதவிக் காலம், விரைவில் நடக்கவிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் தொடரோடு முடிவடைகிறது. இதனால், அடுத்த பயிற்சியாளரைத் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் பி.சி.சி.ஐ.க்கு ஏற்பட்டிருக்கிறது. இப்போதைய பயிற்சியாளர் ரவிசாஸ்திரியை மீண்டும் பயிற்சியாளராக கொண்டுவர பி.சி.சி.ஐ. விரும்பவில்லையாம். பெரும்பாலும், வெளிநாட்டு முன்னாள் வீரர் ஒருவரை புதிய பயிற்சியாளராக கொண்டுவரும் திட்டமே பி.சிசி.ஐ.யிடம் இருக்கிறதாம்.

பி.சி.சி.ஐ.யின் முதல் சாய்ஸ்ஸாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கோச்  மற்றும் முன்னாள் நியூஸிலாந்து அணியின் கேப்டனுமான ஸ்டீபன்  தேர்வு செய்யப்படலாமாம். இவர் சென்னை அணியின் பயிற்சியாளராக இருந்து அணியை சிறப்பாக வழி நடத்தி வருகிறார். 2009ல் இருந்து இவர் சென்னை அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார்.  இவரின் பயிற்சிக்குக் கீழ் சுமாரான வீரர்களை வைத்துக் கொண்டு கூட சென்னை அணி ஐ.பி.எல் கோப்பையை வென்றுள்ளது. மொத்தம் மூன்று முறை சென்னை அணி இவரின் பயிற்சிக்கு கீழ் ஐ.பி.எல்  கோப்பையை வென்றுள்ளது. இவர் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் தேசிய அளவில் தகுதி பெற்ற சில அணிகளுக்கு வெற்றிகரமாக கிரிக்கெட் பயிற்சி அளித்துள்ளார்.  மேலும், பி.சி.சி.ஐ. அதிகாரிகளுடன் நெருக்கமாகவும் இருந்து வருகிறார். இவையாவும், இவர் இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளராக ஆக்கப்படலாம் என்பதை உறுதிபடுத்துகிறது.

பி.சி.சி.ஐ.யின் இரண்டாவது சாய்ஸ்ஸாக இருப்பவர் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டாம் மூடி. இவருடைய பயிற்சியால், கடந்த சீசனில் சன் ரைசர்ஸ் அணி பிளே-ஆஃப் சுற்று வரை சென்றது குறிப்பிடத்தக்கது. 2016-ம் ஆண்டு ஐ.பி.எல். கோப்பையையும் வென்றது. இவரும் பி.சி.சி.ஐ.யுடன் நல்ல தொடர்பில் இருந்து வருகிறார். சமீபத்தில் சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி,  டாம் மூடியை நீக்கிவிட்டு, உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் ட்ரெவர் பேலிஸ்ஸை பயிற்சியாளராக நியமித்துள்ளது. இந்த நடவடிக்கைகூட இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக டாம் மூடியை கொண்டுவரும் திட்டத்தின் பின்னணியில் நடந்திருக்கலாம் என்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

மேலும், முன்னாள் இந்திய பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன், மகிளா ஜெயவர்தனே ஆகியோர் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்து இருக்கிறார்கள்.  கடைசிகட்ட தகவலாக, இந்திய முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் பெயரும் இடம்பெயருகிறது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையில் அடங்கிய குழுதான் இந்தமுறை பயிற்சியாளர் யார் என்பதை தேர்வு வைத்து வெளியிட இருக்கிறது.

விசாகன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *