kamal hassan

வேலூர் தொகுதியில் போட்டியிடாமல் கமல் ஏன் பின்வாங்கினார்?

slider அரசியல்
kamal hassan
கமல் ஹாசன்

 

வரும்  ஆகஸ்ட் 5-ம் தேதி, (05-08-2019) தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் பாராளுமன்றத்  தொகுதிக்கு மறு தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான போட்டியில் அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர், தி.மு.க. வேட்பாளர் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளரோடு நான்காவதாக மக்கள் நீதி மய்யமும் களத்தில் மோதுகிறது என்கிற எதிர்பார்ப்பு நிலவிவந்த நிலையில், வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்றும் ( ஜூலை 18-ம் தேதி) மக்கள் நீதி மய்யம் சார்பில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. ஏற்கெனவே தினகரனின் அ.ம.மு.க.வும் வேலூரிலிருந்து விலகிவிட்ட நிலையில், கமல் கட்சியின் இந்த முடிவால் வேலூரில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

வேலூர் தொகுதியிலிருந்து கமலின் மக்கள் நீதி மய்யம் திடீரென விலக என்ன காரணம்? என்கிற கேள்வி பலரிடம் எழுந்துள்ள நிலையில், இது குறித்து மக்கள் நீதி மய்யம் வட்டாரத்தில் விசாரித்தோம். அவர்கள், ‘’ சென்றமுறையே வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் வெளிப்படையாக பணப்பட்டுவாடா செய்யப்பட்டது. இதன்பேரில்  சட்ட விரோதமாகவும் தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாகவும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக பல்வேறு வழக்குகளும் பதியப்பட்டன.  பின்னர், இந்திய ஜனாதிபதி அவர்கள் ஒப்புதலுடன் தேர்தல் ஆணையத்தால் வேலூருக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. மேலே குறிப்பிடப்பட்ட வழக்குகளில் எவ்வித முன்னேற்றமோ, முடிவுகளோ  இதுவரை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், மீண்டும் அத்தொகுதியில் தேர்தல் நடத்தப்படுவதால், தேர்தல்களின் மீதும் தேர்தல் ஆணையத்தின் மீதும் மக்கள் நம்பிக்கையின்மை அதிகரித்திருக்கிறது. இப்படியான நிலைமையில்,  மக்களின் நம்பிக்கையைக் காப்பது என்பது மிகவும் அவசியம். இதில் மக்கள் நீதி மய்யம் முழுக்கவனம் செலுத்தவிருக்கிறது.  மேலும், எதிர்வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் மிகுந்த ஈடுபாட்டுடன் போட்டியிட்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும்  நோக்கமும் இருப்பதால், வேலூர் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை என்கிற முடிவை நாங்கள்  எடுத்திருக்கிறோம்’’ என்று கூறினார்கள்.

ஆனால், ‘’புதிதாக கட்சியின் ஆலோசகராக இணைந்த பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைப்படிதான் கமல்ஹாசன் வேலூர் தேர்தலை புறக்கணித்து இருக்கிறார். ஒருவேளை கடந்த பாராளுமன்ற தேர்தல் சதவீதத்தைவிட மிகவும் குறைவாக வாங்கிவிட்டால், மக்களிடம் இப்போது இருந்துவரும் மவுசு குறைந்துவிடும். இதனால் பொதுவெளியில் பின்னடைவு ஏற்படும். மேலும், இந்த தேர்தலில் போட்டியிட்டு ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை. என்பதால், தேவையில்லாமல் கட்சிக்கு கிடைத்துள்ள இமேஜை கெடுத்து கொள்வானே என்று கமல் நினைத்ததாகவும், இதனுடன் பிரசாந்த் கிஷோரின் ஆலோசனையும் சரி என்று பட்டதாலும், தேர்தலில் போட்டியிடாததற்கு காரணங்களாக சொல்லப்பட்டுள்ளன’’ என்று நமக்கு கிடைத்த வேறு சில தகவல்கள் மூலம் அறியப்பெற்றோம்.

அப்படியென்றால், கமல் கட்சியின் மீடியா ஆலோசகர் தன் பணியை வேலூரிலிருந்து தொடங்கிவிட்டார் என்பதாகவே கருத வேண்டியிருக்கிறது. ஆகவே, அடுத்து வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இனி கமலின் பேச்சிலும், நடவடிக்கையிலும், கட்சி தொடர்பான காரியங்களிலும் பல புதுமைகள் தோன்றலாம்.

 -தொ.ரா.ஸ்ரீ.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *