chennai high court

ஏழுபேர் விடுதலைக்கு வாய்ப்பில்லையோ!

slider அரசியல்

  ஏழுபேர் விடுதலைக்கு வாய்ப்பில்லை

நளினி மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்

chennai high court
சென்னை உயர்நீதி மன்றம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறைவாசம் அனுபவித்துவரும் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலை என்பது தமிழகத்தின் நீண்ட நாள் அரசியல் முக்கியத்துவம் கொண்ட பிரச்னை. இந்த விவகாரத்தில் தேசிய கட்சிகளான காங்கிரஸுக்கும், பாரதீய ஜனதாவுக்கும் ஒருமித்த கருத்து உண்டு. மற்றபடி தமிழ்நாட்டில் உள்ள அ.தி.மு.க. தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் அவர்களை விடுதலைக்காக குரல் கொடுப்பவைதான்.

இவர்களை விடுதலை செய்யச் சொல்லி ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது. இப்போது எடப்பாடி பழனிசாமியின் அரசு, இவர்களை விடுதலை செய்யச் சொல்லி, அமைச்சரவை தீர்மானம் ஒன்று நிறைவேற்றியும் தமிழக கவர்னருக்கு அனுப்பியிருக்கிறது. ஏனோ தெரியவில்லை. இந்த விவகாரத்தில் எந்த சட்ட வடிவுக்கு உட்பட்டு பயணித்தாலும் எங்கயாவது ஒரு முட்டுக்கட்டை ஏற்பட்டுக் கொண்டேயிருக்கிறது. உச்சநீதிமன்றம் வரை நீதிமன்றங்களும் இந்த விவகாரத்தில் தெளிவான உத்தரவு பிறப்பிக்க முடியாத நிலையே தொடர்கிறது.

கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான  தமிழக அமைச்சரவை  தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பியதன்பேரில் எந்த நடவடிக்கையும் கவர்னர் எடுக்கவில்லை என்றும், தமிழக  அமைச்சரவை பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என நளினி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இதில் நளினி மனு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ’’அரசியல் சாசன அதிகாரம் கொண்ட ஆளுநர் அமைச்சரவையின் பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எட்டு மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை எதிர்த்தே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆளுநருக்கு சட்டப் பாதுகாப்பு இருந்தாலும் அமைச்சரவை பரிந்துரை மீது எந்த முடிவும் எடுக்காமல் இருக்க முடியாது. அமைச்சரவை பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்காத காரணத்தினால் மனுதாரர் உள்ளிட்ட ஏழு பேரும் சட்டவிரோத காவலில் இருப்பதாகவே கருதப்படும்’’ என்று வாதிட்டார்.

இதற்கு தமிழக அரசு தலைமை வழக்கறிஞர், ‘’ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது. அவருக்கு சட்டப் பாதுகாப்பு இருக்கிறது. ஏழு பேர் விடுதலை விவகாரத்தைப் பொறுத்தவரை அது ஆளுநரின் பரிசீலனையில் நிலுவையில் இருக்கிறது’’ என்று பதிலளித்தார். இந்த வாதங்கள் கடந்த 12-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது.

இந்நிலையில் இன்று (ஜூலை 18-ம்தேதி) “இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல” என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்து இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்திலும் இவர்கள் குறித்த வழக்கு ஒன்று நிலுவையில் இருந்து வருகிறது. அங்கேயும் மனு தள்ளுபடி அளவுக்கு சென்றிருக்கிறது. இதையெல்லாம் வைத்துப் பார்த்தால், அந்த ஏழுபேரும் விடுதலை ஆவது என்பது பலத்த சந்தேகம் என்றே தெரிகிறது. இந்த விவகாரம் அரசியல் செய்யவும், ஓட்டுவாங்க மட்டும் தான் அரசியல் கட்சிகளுக்கு பயன்படும் என்கிற விமர்சனமும் அர்த்தமுள்ள விமர்சனமாகவே தோன்றுகிறது.

குருபரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *