டிம்பிள் - அகிலேஷ்

மனைவியை வேட்பாளராக நிறுத்தும் அகிலேஷ் யாதவ்

slider அரசியல்

உத்தரபிரதேச சட்டமன்ற இடைத் தேர்தல்…

காங்கிரஸுடன் கைகோர்க்கும் சமாஜ்வாதி!

 

டிம்பிள் - அகிலேஷ்
அகிலேஷ் யாதவ் – டிம்பிள்

பா.ஜ.க.வின் பாராளுமன்ற வெற்றிக்கு பெரிதும் கைகொடுத்த மாநிலம் உத்தரபிரதேசம். இங்கு எலியும் பூனையுமாக அரசியல் செய்துவந்த அகிலேஷின் சமாஜ்வாதி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், பா.ஜ.க.வை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே கூட்டணி அமைத்து, மொத்தமுள்ள எண்பது தொகுதிகளை சரிபாதியாக பிரித்துக் கொண்டு பாராளுமன்றத் தேர்தலை சந்தித்தன.

ஆனால், பா.ஜ.க.வோ அபார வெற்றியை உத்தரபிரதேசத்தில் பெற்றது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 10 இடமும், அகிலேஷின் சமாஜ்வாதி கட்சிக்கு 5 இடங்கள்  மட்டுமே கிடைத்தது. இந்தப் படு தோல்வியால், தேர்தல் முடிவு வந்த சில நாளிலே இவர்கள் கூட்டணி உடைந்தது.

பாராளுமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி வெற்றிபெற்ற 5 தொகுதிகளில் ராம்பூர் பாராளுமன்றத் தொகுதியும் ஒன்று. இந்தத் தொகுதியில் போட்டியிடுவதற்காக சமாஜ்வாதியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆசம்கான் தனது ராம்பூர் சட்டப்பேரவையின் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதற்குதான் இப்போது விரைவில் இடைத்தேர்தல் நடக்கப்போகிறது. குறிப்பாக ராம்பூர் தொகுதி சமாஜ்வாதிக்கு செல்வாக்குள்ள தொகுதிகளில் முக்கியமானது.

இந்தத் தொகுதியில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ், தனது மனைவி டிம்பிளை நிறுத்த முடிவு செய்துள்ளாராம். இந்த இடைத்தேர்தலில் மனைவியை போட்டியிட வைத்து வெற்றிபெறுவதன் மூலம் மீண்டும் உத்தரபிரதேச அரசியலில் தனது செல்வாக்கை நிலைநாட்ட என்ணியுள்ளாராம்.

இந்நிலையில் இந்த இடைத்தேர்தலை வைத்து உத்தரபிரதேசத்தில் புதிய அரசியல் கூட்டணிகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறதாம். முக்கியமாக காங்கிரஸுடன், சமாஜ்வாதி மீண்டும் கூட்டணி அமைக்கலாம் என்றும் பேச்சு கிளம்பியிருக்கிறது. இதற்காக உத்தரபிரதேச காங்கிரஸ் பொறுப்பாளர் பிரியங்கா – அகிலேஷ் சந்திப்பும் விரைவில் நடக்கலாம் என்றும் சொல்கிறார்கள். இந்த அரசியல் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கிறதாம் உத்தரபிரதேச பா.ஜ.க. தலைமை.

  • நிமலன்

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *