குமாரசாமி

என்ன செய்யப்போகிறார் குமாரசாமி?

slider அரசியல்

நம்பிக்கை வாக்கெடுப்பு பலப்பரீட்சையில் குமாரசாமி 

கூட்டணி அரசை காப்பாற்ற காங்கிரஸின் மெகாதிட்டம்!

 

குமாரசாமி
kumaraswamy

கர்நாடகாவில் ஜூலை 18-ம் தேதி சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும்படி அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர், கொறடா உட்பட யாரும் கட்டாயப்படுத்தக்கூடாது என்று சுப்ரீம் கூறிவிட்டது. இதனால் அந்த 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் சட்டமன்றத்திற்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

 

எப்படியும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களில் ஒரு சிலரையாவது சரிக்கட்டி தங்கள் பக்கம் மீண்டும் கொண்டுவர காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த. தலைமை எடுத்த நடவடிக்கைகளுக்கு இதுவரை எந்தப் பலனும் இல்லாமல் போய்விட்டது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு, அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தரப்பில், ’நாங்கள் யாரும் நாளை சட்டமன்றம் செல்லமாட்டோம்’ என்று கூறிவிட்டார்கள்.

 

ஏற்கெனவே வெறும் 101 எண்னிக்கை மட்டும் வைத்திருக்கும் காங்கிரஸ், ம.ஜ.த. கூட்டணி அரசு இதனால் கவிழும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இப்போதைக்கு முதல்வர் குமாரசாமிக்கு இருக்கும்  வாய்ப்புகள் என்றால், கவர்னரை சந்தித்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விடுவது, இல்லையென்றால், நாளை நம்பிக்கை வாக்கெடுப்பில் உரையாற்றிவிட்டு, அங்கேயே தனது ராஜினாமா முடிவை அறிவிப்பது என்பதுதான். இதற்கு மாறாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்று அதில் தோற்றால், அது மிகப்பெரிய அரசியல் பின்னடைவை தரும் என்பதும் முதல்வர் குமாரசாமிக்கு நன்கு தெரியும்.

 

இப்படி ஒரு இக்கட்டான நிலைமையில் முதல்வர் குமாரசாமி மாட்டிக் கொண்டு தவித்துக் கொண்டு இருக்கையில், காங்கிரஸ் தரப்பில் இந்தக் கூட்டணி அரசை எப்படியாவது காப்பாற்ற பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும் தகவல் வருகின்றன. கர்நாடக காங்கிரஸின் முக்கிய தலைவரும், அமைச்சருமான டி.கே.சிவக்குமார், ’’கொறடா உத்தரவு அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு பொருந்தாது என்ற வார்த்தையை சுப்ரீம் கோர்ட் சொல்லவில்லை. சட்டசபைக்கு செல்வதும், செல்லாததும் அவர்கள் விருப்பம், அதை கட்டாயப்படுத்த முடியாது என்றுதான் சொல்லியுள்ளது. இவ்வாறு சொல்லியதையே, அவர்களுக்கு எதிராக கொறடா உத்தரவு பிறப்பித்து சட்டசபைக்கு வரவழைக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறி விட்டதாக அர்த்தம் எடுக்க அவசியம் கிடையாது.

 

மேலும், கொறடா  உத்தரவு அவர்களை கட்டுப்படுத்தாது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவிக்கவில்லை. எனவே, கொறாட உத்தரவை மீறினால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிபோகும். இதனால் அவர்கள் மீண்டும் அமைச்சராக முடியாது. இது தான் சட்டத்தில் உள்ள நிலை. இதை அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் புரிந்து கொள்ள வேண்டும்’’ என்று மறைமுகமாக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை எச்சரிக்கும் தொனியில் பேசியுள்ளார்.

 

மேலும் காங்கிரஸ் ஒரு அதிரடி திட்டத்தை வைத்துள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன. அது என்னவென்றால், நாளை நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை சட்டசபையில் முதல்வர், தாக்கல் செய்துவிட்டு அதன் மீது பல கட்சி உறுப்பினர்களையும் பேச அவகாசம் கேட்டு, நாளை முழுக்க, பேசிப் பேசியே காலத்தை இழுத்தடித்து, வெள்ளிக்கிழமைக்கு சபையை ஒத்தி வைக்க செய்வதும், கால அவகாசம் ஒருவேளை வெள்ளிக்கிழமையன்றும், உறுப்பினர்கள், பேசிக்கொண்டே இருந்தால், அதன் பிறகு திங்கள்கிழமை தான் சட்டசபை கூடும். அதற்குள் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை, எப்படியாவது சமாதானப்படுத்தி, சட்டசபைக்கு அழைத்து வந்து விடலாம் என்பதுதான் காங்கிரஸின் அந்த திட்டம் என்றும் சொல்கிறார்கள்.

 

இதற்கு ஏற்றது போலவே கர்நாடகா சபாநாயகர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘’ நாளையே, நம்பிக்கை  வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று சட்டத்தில் இடம் இல்லை. ஒருவேளை வாத விவாதங்கள் நீண்டு கொண்டே சென்றால், நாளை  நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அதை நான் யூகிக்க முடியாது’’ என்று சொல்லியுள்ளார்.

 

காங்கிரஸின் எந்தமாதிரியான அதிரடி திட்டத்திற்கும் பதிலடி கொடுக்க பா.ஜ.க.வும் எடியூரப்பா தலைமையில் தயாராகவே இருக்கிறது என்கிறது கர்நாடக பா.ஜ.க. வட்டாரம்.

 

ஆக, ஜூலை 18 அன்று கர்நாடக சட்டசபையில் ஒரு பெரிய களேபரம் நடக்கவுள்ளதற்கான முஸ்தீபுகள் இப்போதே தெரிகிறது.

 

  • எஸ்.எஸ்.நந்தன்

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *