கே.எஸ்.அழகிரியுடன் கராத்தே தியாகராஜன் மோதல்

மீண்டும் முருங்கை மரம் ஏறியது தமிழக காங்கிரஸ்!

slider அரசியல்

            கே.எஸ். அழகிரி இடத்துக்கு வருவேன்!

  • கராத்தே தியாகராஜன் அதிரடி
கே.எஸ்.அழகிரியுடன் கராத்தே தியாகராஜன் மோதல்
தமிழக காங்கிரஸில் மீண்டும் குழப்பம்

பாராளுமன்றத் தேர்தலில் தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு பலத்த அடி ஏற்பட்டிருந்தாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு பெரும் வெற்றியைக் கண்டிருக்கிறது. இதனை துருப்புச் சீட்டாக வைத்து தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை மீண்டும் பெரிய கட்சியாக வளர்த்தெடுக்க என்ன செய்யவேண்டும் என்று சிந்திக்காமல், தமிழக காங்கிரஸில் கோஷ்டி சண்டை வழக்கம்போல முருங்கை மரம் ஏறியிருக்கிறது.

நடைபெற்று முடிந்த 17வது பாராளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த திருநாவுக்கரசரை மாற்றிவிட்டு, கே.எஸ்.அழகிரியை தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக டெல்லி மேலிடம் நியமித்தது. இது முதற்கொண்டு காங்கிரஸில் தென்சென்னை மாவட்ட தலைவராகப் பொறுப்பில் இருந்த கராத்தே தியாகராஜனுக்கும், கே.எஸ்.அழகிரிக்கும் ஒத்துப்போகவில்லை. இலைமறைக் காயாக இருந்த அவர்களின் பகை, தேர்தலுக்கு பின்பு முழுப்பூசணிக்காயாக இலைச் சோற்றிலிருந்து வெளியே வந்து விட்டது.

சில வாரங்களுக்கு முன்னர், சென்னையிலுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமுர்த்தி பவனில், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் கராத்தே தியாகராஜன் பேசும்போது, ‘’உள்ளாட்சி தேர்தலில் கண்ணியமான கூட்டணி அமைய வேண்டும். காங்கிரஸ் தலைமை கட்சிக்காக காலம் காலமாக உழைக்கும் தொண்டர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் உரிய வாய்ப்பளிக்க வேண்டும்” என்று பேசினார். இந்தப் பேச்சு தி.மு.க.வை தாக்குவதாக உள்ளதாக விமர்சனங்கள் எழுந்ததால், தென் மாவட்டத் தலைவர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார் கராத்தே தியாகராஜன்.

இந்நிலையில், கடந்த 15-ம் தேதி அன்று (2019 ஜூலை 15) அன்று காமராஜ் பிறந்தநாள் விழா மற்றும் தென் சென்னை காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அடையாறில் உள்ள கராத்தே தியாகராஜன் இல்லத்தில் நடைபெற்றது. அப்போது கராத்தே தியாகராஜன் தனது ஆதரவாளர்கள் மத்தியில், ’’கருணாநிதியை தமிழர் இல்லை என்று கூறியவர் நடிகை குஷ்பு. இதற்கான ஆடியோ என்னிடம் உள்ளது.  கே.எஸ். அழகிரி பொறுப்புக்கு நான் கூடிய விரைவில் வருவேன். அதாவது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு கூடிய விரைவில் நியமிக்கப்படுவேன் ” என்று பேசினார், இது தமிழக காங்கிரஸில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மீண்டும் ஒரு தமிழ் மாநில காங்கிரஸ் போன்ற பிளவுக்கு இது வித்திட்டு விடுமோ என்றும் காங்கிரஸ் வட்டாரம் கவலை அடைந்திருக்கிறது.

-நிமலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *