கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் விவகாரம். உச்சநீதிமன்றம் அதிரடி

அரசியல் உலகம்

கர்நாடகா அரசியலில் புதிய திருப்பம்…

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பால் காங்கிரஸ் – ம.ஜ.த. மகிழ்ச்சி

 

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆதரவுடன் மதச்சார்பற்ற கட்சியைச் சேர்ந்த குமாரசாமி முதல்வராக இருந்து வருகிறார். கடந்த 10 தினங்களுக்கு முன்பு, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 16 பேர் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் குமாரசாமி அரசு மெஜாரிட்டி இழந்துவிட்டது எனக்கூறி பா.ஜ.க. தரப்பிலிருந்து குமாரசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்கிற அழுத்தம் கொடுக்கப்பட்டது.

 

karnataka mlas
கர்நாடகாவில் ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்கள்

16 பேர் ராஜினாமாவைத் தொடர்ந்து கர்நாடக அரசியலில் ஒவ்வொரு நாளும் பல்வேறு திருப்பங்களும் ஏற்பட்டன. ராஜினாமா செய்த 16 எம்.எல்.ஏ.க்களும் மும்பையிலுள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கினர். இவர்களுடன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் சிவக்குமார் பேச்சுவார்த்தை நடத்தச் சென்றபோது, மும்பை காவல்துறை தடுக்க, இதனால், அவ்விடத்தில் பெரும் களேபரமே ஏற்பட்டது. இந்த ராஜினாமாவின் பின்னணியில் பா..ஜ.க. இருப்பதாக ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்பட பல்வேறு காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பா.ஜ.கவுக்கு எதிரான கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டினார்கள். இதனால் தேசிய அளவிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

“ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களின் விவகாரத்தில் நான் சட்டப்படிதான் நடந்து கொள்வேன்” என்று கர்நாடக சட்டசபை சபாநாயகர் ரமேஷ்குமார், தெரிவித்தார். ஆனால், சபாநாயகரின் முடிவில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றுக்கூறி, ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானோர் சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றனர்.

 

இதனிடையே கர்நாடக சபாநாயகர் வரும் 18-ம் தேதி அன்று குமாசாமி அரசுக்கு நம்பிக்கை வாக்கெடுப்புக்கு நாள் குறித்தார். இந்நிலையில் ராஜினாமா எம்.எல்.ஏ.க்களின் மனு மீதான தீர்ப்பை இன்று (ஜூலை 16-ம் தேதி) சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வழங்கினார். அவர் தன் தீர்ப்பில், ‘’எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா குறித்து முடிவு எடுக்க வேண்டும் என சபாநாயகருக்கு தங்களால் உத்தரவிட முடியாது’’  என்று உத்தரவு பிறப்பித்தார். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

தற்போதைய நிலையில்,  கூட்டணி அரசின் பலம் சட்டசபையில் 101 ஆக குறைந்துள்ளது. அதே வேளையில் பா.ஜ.க.வின்  பலம் 107 ஆக அதிகரித்துள்ளது. எப்படியும் ஆட்சி கவிழும், தாங்கள் ஆட்சியமைக்கலாம் என்று எண்ணியிருந்த பா.ஜ.க.வுக்கு உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஒரு பின்னடைவை தந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். அதே நேரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பால், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளத் தலைவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நம்பிக்கை வாக்கெடுக்கு விரைவில் நடைபெற இருக்கும் ஒரிரு நாளுக்குள், அதாவது எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்குள் வரும்வரை அவர்களை தங்கள் பக்கம் மீண்டும் கொண்டுவரமுடியும் என்று முதல்வர் குமாரசாமியும், கர்நாடக காங்கிரஸ் முன்னாள் முதல்வர் சித்தராமையாவும் திடமாக நம்பியுள்ளனர். இதற்காக ராஜினாமா செய்துள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி கொடுப்பது உட்பட பல சலுகைகள் வழங்கப்படும் என்று ரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், சபாநாயகர் எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளாமல் தகுதி  நீக்கம் செய்ய முயற்சிக்கிறார் என்கிற ஒரு பேச்சும் புதிதாக கிளம்பிருக்கிறது. ஒருவேளை இப்படி தகுதி நீக்கம் செய்யப்பட்டால், தமிழக நிலைதான் கர்நாடகாவுக்கும் ஏற்படும் என்றும் சொல்கிறார்கள்.

எது எப்படியோ, தேசிய அளவில் பெரும் விவகாரமாக வெடித்திருக்கும் கர்நாடகாவின் இந்த பிரச்னைக்கு வரும் 18-ம் தேதி நண்பகலில் ஒரு முடிவு தெரிந்துவிடும்.

 

-தொ.ரா.ஸ்ரீ.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *