உள்ளாட்சித் தேர்தல்

இனி தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்க முடியாது! மத்திய அமைச்சர் அதிரடி

slider அரசியல்

“தமிழக உள்ளாட்சிக்கு இனி நிதி தரமாட்டோம்!”

மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அதிரடி பதில்!

உள்ளாட்சித் தேர்தல்
தமிழக உள்ளாட்சித் தேர்தல் ஆணையம்

முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா மறைந்த பின்னர், எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்தே, ஏதோ ஒரு காரணத்திற்காக உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப்போட்டுக்கொண்டே வருகிறது தமிழக அரசு. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளாட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள் என்று கடந்த மூன்றாண்டு காலமாக தொடர்ந்து  குரல் கொடுத்து வருகிறார். ஆனால், அ.தி.மு.க. பல்வேறு காரணங்கள் சொல்லி உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தள்ளிப்போட்டுக்கொண்டே வருகிறது.

சில தினங்களுக்கு முன்புகூட உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கு மாநிலத் தேர்தல் ஆணையம் சார்பில் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது. அதில் அக்டோபர் 31-ம் தேதி வரை மேலும் கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கையும் வைத்திருக்கிறது தமிழக அரசு.

இந்தத் தகவலால் வெகுண்டெழுந்த தி.மு.க. தலைவர் ஸ்டாலின், ’’உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநிலத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் கால அவகாசம் கேட்டிருப்பதற்கு தி.மு.க சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதை மாநிலத் தேர்தல் ஆணையம் என்றழைப்பதை விட, மாநில அவகாச ஆணையம் என்றே அழைக்கலாம் போலிருக்கிறது. அவகாசம் கேட்டுக் கொண்டே இருப்பதற்கு ஓர் ஆணையம் தேவைதானா? ஒன்றும் செய்யாமல் மக்கள் வரிப் பணத்தைச் செலவிட்டுக் கொண்டிருப்பதற்கு ஓர் ஆணையமா? என்ற கேள்விகள் எழுகின்றன. அக்டோபர் 2016-ல் நடத்தி முடிக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் மாநில அரசும், மாநிலத் தேர்தல் ஆணையமும் மாறி மாறி, கால அவகாசம் கேட்டுக் கொண்டிருப்பது பஞ்சாயத்து ராஜ் சட்டத்தையே கேலிக்குரியதாக்கும் கேடு கெட்ட செயல் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

‘உள்ளாட்சி அமைப்பின் பதவிக்காலம் ஐந்து வருடங்கள்’ என்றும், உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் முடிவதற்கு முன்பே தேர்தலை நடத்தி முடித்துவிட வேண்டும் என்று அரசியல் சட்டப்பிரிவு 243-E மிகத் தெளிவாகக் கூறுகிறது. ஆனால், வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் ஒவ்வொரு காரணங்களாகக் கண்டுபிடித்து மாநிலத் தேர்தல் ஆணையமும் சொல்கிறது. அ.தி.மு.க அரசும் அதை ஆமோதிக்கிறது என்றால், இருவரும் கூட்டணி அமைத்து உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல், தொடர்ந்து ,அரசியல் சட்டத்தை மீறுகிறார்கள் என்பது தெளிவாகிறது. மாநிலத் தேர்தல் ஆணையம் ஒன்று, இப்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்து விடாமல் முனைப்புடன் செயல்படுவது வரலாற்றுப் பிழை. அந்த அமைப்பை, தான் ஆட்டுவித்த பொம்மை போல் ஆட வைக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் நடவடிக்கை அரசியல் சட்டத்தையே தோற்கடிக்கும், சட்டவிரோத நடவடிக்கை” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், இன்று (ஜூலை 16-ம் தேதி) நடைபெற்ற மக்களவை கேள்வி நேரத்தின்போது தி.மு.க. உறுப்பினர் ஆ.ராசா பேசுகையில், “உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை என்றால் வெளிப்படைத்தன்மை எப்படி நிலவும்? பல ஆண்டுகளாகவே தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை.  உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவதை உறுதி செய்ய தனிச்சட்டம் இயற்ற வேண்டும். தமிழகத்தில் எந்தத் திட்டம் என்றாலும் கமிஷன், வசூல், ஊழலே காணப்படுவதாக’’ குற்றம்சாட்டி பேசினார்.

தி.மு.க. உறுப்பினர் ஆ.ராசாவின் கேள்விக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர், “உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கும் விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தாவிட்டால், உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை விடுவிக்க மாட்டோம்’’ எனக் கூறினார்.

பா.ஜ.க.வைச் சேர்ந்த மத்திய அமைச்சரின் இந்த பதிலால், இனி உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி கிடைப்பது என்பது தமிழக அரசுக்கு கிடைக்க வாய்ப்பில்லை. அதேநேரத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்திடவும் அ.தி.மு.க. அரசுக்கு மனமில்லை. இனி உள்ளாட்சி மன்றங்களில் மக்கள் பயன்பாட்டுக்கான திட்டங்கள் எப்படி நடக்கப் போகிறதோ என்கிற கேள்வி பொதுஜனங்கள் மத்தியில் எழத் தொடங்கியிருக்கிறது.

 

-நிமலன்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *