தினகரன்

தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை? டி.டி.வி.தினகரன் விளக்கம்

slider அரசியல்

             தேர்தல்களை தவிர்க்கும் டி.டி.வி. தினகரன்..

               பெரும் அதிர்ச்சியில் அ.ம.மு.க.வினர்! 

தினகரன்
டி.டி.வி.தினகரன்

சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல்களில் எந்த தொகுதியிலும் டெபாசிட் கூட வாங்காமல் தோல்வியைத் தழுவியதால் டி.டி.வி. தினகரனின் செல்வாக்கு அக் கட்சியினர் மத்தியில் குறைந்திட  தொடங்கியது. இதில் இன்னும் பேரிடியாக முக்கிய தளபதியாக விளங்கிய தங்க.தமிழ்ச்செல்வன் உட்பட பலரும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வில் போய்ச் சேர்ந்தனர். இந்தப் பின்னடைவுகளிலிருந்து சுதாரித்துக் கொள்வதற்குக்கூட நேரமில்லாமல் இருக்கும்போது, நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை அ.ம.மு.கவுக்கு வந்து சேர்ந்தது.

இப்படி நெருக்கடிகளுக்கு மத்தியில் மாட்டிக் கொண்ட தினகரன், சில நாட்களுக்கு முன்பு யாரும் எதிர்பாராதவிதமாக, வேலூரில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு அ.ம.மு.க. தொண்டர்களுக்கு அதிர்ச்சியையும், அ.தி.மு.க. தொண்டர்களுக்கு மகிழ்ச்சியையும் அளித்தது. இந்த அதிர்ச்சியிலிருந்தே அ.ம.மு.க. தொண்டர்கள் விடுபடாத நிலையில், இப்போது மேலும் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களிலும் அ.ம.மு.க. போட்டியிடாது என்றும் அறிவித்திருக்கிறார்.

இது குறித்து, தினகரன் கூறுகையில், “இப்போது நடைபெறுகிற தேர்தலில் போட்டியிட்டால் 3 தொகுதிகளுக்கும் 3 சின்னம் வழங்குவார்கள் என்பதால் தேர்தலில் போட்டியிடவில்லை. கட்சியை பதிவு செய்த பிறகு ஒரே சின்னத்தை தேர்தல் கமி‌ஷன் வழங்கும். அதன் பிறகு தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவோம்” என்று தினகரன் விளக்கம் அளித்தார்.

ஆனால், அ.ம.மு.க. வட்டாரங்களில் இதுபற்றி வேறுவிதமாக சொல்கிறார்கள். வேலூர் தொகுதியைச் சேர்ந்த அ.ம.மு.க.வின் முக்கிய பிரமுகரும், முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான ஞானசேகரன் தி.மு.க.வில் ஸ்டாலின் முன்னிலை சேர்ந்துவிட்டார். அடுத்து முன்னாள் அமைச்சர் பழனியப்பனும் தி.மு.க.வுக்கு போகப் போகிறார். இவையாவும் தினகரனை ரொம்பவே பாதித்துவிட்டது. ஆனால், இதை மறைத்து தேர்தலில் போட்டியிடாததற்கு வேறு காரணங்களும் சொல்லப்படுகின்றன என்கிறார்கள்.

கொஞ்சநாளாகவே தான் தங்கியிருக்கும் அடையாறு வீட்டின் வாஸ்து சரியில்லை என்று தினகரன் நினைக்கிறாராம். வெகுவிரைவில் சென்னையிலே வாஸ்து மற்றும் தனக்கு ஏதுவான இடத்திற்கு குடிபுக எண்ணியுள்ளாராம். அநேகமாக அது எம்..ஜி.ஆர். வாழ்ந்த ராமாபுரம் தோட்டம் அருகில் இருக்க வாய்ப்பிருப்பதாகவும், இதன்பிறகே அடுத்தகட்ட அதிரடி அரசியலில் இறங்க தினகரன் முடிவு செய்திருப்பதாகவும், நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளிவரத் தொடங்கியிருக்கிறது.

  • எம்.டி.ஆர்.ஸ்ரீதர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *