nia

சென்னையில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை

slider அரசியல்

சென்னையில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை ….

     நமது அண்டை நாடான இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பானது தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதலை நிகழ்த்தியது. இதில் 250-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த தற்கொலைப் படைத் தாக்குதலை நிகழ்த்திய பயங்கரவாதிகளுடன் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருப்பதாக அந்நாட்டு உளவுத்துறை சமீபத்தில் இந்திய அரசுக்கு தகவல் கொடுத்தது.

nia
சென்னையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

 

இதன்படி சில வாரங்களுக்கு முன்பு கேரளாவிலும், தமிழகத்திலும் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு பலரைக் கைது செய்தனர். மேலும், பலரிடம் விசாரணையும் மேற்கொண்டனர். இந்த நிலையில் கொச்சியில் உள்ள அலுவலகத்தில் இருந்து ஜூலை 13-ம் தேதி  சென்னை வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவானது, மண்ணடி லிங்கி செட்டி தெருவில் உள்ள இஸ்லாமிக் ஹிண்ட் என்ற அமைப்பின் அலுவலகத்தில் சோதனை நடத்தியது .

அடுத்து  புரசைவாக்கத்தில் இஸ்லாமிய அமைப்பின் மாநில தலைவர் முகமது புகாரி வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு உள்ள ஊழியர் தாஜுதீன் என்கிற உஸ்மானிடம் விசாரணை நடத்தினர்.

இதேபோல நாகப்பட்டினத்தில் மஞ்சக்கொல்லை, சிக்கல் ஆகிய இடங்களில் அசன் அலி, ஹாரீஸ் முகமது ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் சில  ஆவணங்களும், லேப்டாப் மற்றும் பென் டிரைவ்களும் சிக்கியதாக கூறப்படுகிறது. அதில் கிடைத்த விவரங்களின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியிருகிறது.

இவர்கள் தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் இந்து மத தலைவர்களை கொலை செய்வதற்கு அவர்கள் சதி செய்வதாக புகார் கூறப்படுகிறது.  இது தொடர்பாக அவர்களிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த விவகாரத்தில் முன்பு  மதுரையில் ஒரு மாணவரிடமும், கன்னியாகுமரியில் ஒரு மாணவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் கேரளாவிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு சிலரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சென்னை வந்து இந்த சோதனையை நடத்தியுள்ளார்கள்.

விசாரணை வளையத்திலிருக்கும் நபர்களிடம் பல்வேறு கோணங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் துருவி துருவி விசாரித்து வருகிறார்களாம். இன்னும் சில நாளில் இது குறித்து பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவரலாம்.

  • எஸ்.எஸ்.நந்தன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *