Ragul Ghandhi

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் யார்?

slider அரசியல்

காங்கிரஸின் புதிய தலைவர் யார்?

அசோக் கெலாட் மற்றும் திக் விஜய் சிங் இடையே பலத்த போட்டி!

Ragul Ghandhi
ராகுல் காந்தி

 

பதினேழாவது பாராளுமன்றத் தேர்தல் முடிந்து, அமோக வெற்றி பெற்ற பா.ஜ.க. அரசு பட்ஜெட்டும் தாக்கல் செய்துவிட்டது. ஆனால், தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்த ராகுலின் முடிவுக்கு மட்டும் இன்னும் ஒரு பதிலும் கிடைத்தபாடில்லை. ஏறக்குறைய 50 நாளுக்கும் மேலாகிவிட்டது. இது காங்கிரஸின் பலவீனத்தை காட்டுகிறது என்கிற ரீதியில்தான் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்றத் தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்தது ராகுலின் பெருந்தன்மையைக் காட்டுகிறது என்றாலும்,  அதேநேரத்தில் பாரம்பரியமிக்க கட்சியாகவும், பலமான எதிர்க் கட்சியாகவும் இருந்துவரும் காங்கிரஸ் கட்சிக்குத் தலைவர் இல்லாமல் இருப்பது என்பது, ஒரு வகையில் ஜனநாயகத்துக்கு பங்கம் விளைவிக்கும் ஒன்றாகத்தான் அரசியல் நோக்கர்கள் சொல்லி வருகிறார்கள்.

இதன் எதிராலி பல மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு நாளும் பின்னடைவை தந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, கர்நாடகத்தில் காங்கிரஸ் உதவியுடன் நடைபெறும் ஆட்சிக்கு சிக்கல் வந்துள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க. தன் பக்கம் இழுத்து வருகிறது. பஞ்சாபில் சித்து அப்செட்டாகியுள்ளார். மந்திரி பதவியையும் ராஜினாமா செய்து விட்டார். மேலும், கோவாவில் காங்கிரஸ் காலியாகி விட்டது. பா.ஜ.க. தன் பக்கம் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுத்து அமைச்சர் பதவியையும் கொடுத்து அழைத்துக் கொண்டு போய்விட்டது. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். ஆனால் காங்கிரஸ் தலைமையோ, கட்சிக்கான புதிய தலைவரை நியமிக்காமல் உட்கார்ந்திருக்கிறது. இது தொண்டர்களை மேலும் சோர்வடையவே செய்யும்.

 

காங்கிரஸ் கட்சியில் அனுபவமிக்க  தலைவர்கள் பலர் உள்ளனர். ஆனாலும், கூட அவர்களும் இப்போது மௌனமாக உள்ளனர். ராகுலின்  யோசனைப்படி இளம் தலைவரை நியமிப்பதா அல்லது மூத்த தலைவர்களில் யாரையாவது நியமிப்பதா என்று யோசிப்பதாகவும் சொல்கிறார்கள். நாடு முழுமையும் ஏற்றுக் கொள்ளக் கூடிய முகமாக இருக்க வேண்டும் என்பதும் காங்கிரஸ் தலைமை முன்பு உள்ள பெரும் சவாலாக உள்ளது. தற்போது கர்நாடகாவில் நிலவும் குழப்பத்தை சரி செய்யும் பொறுப்பு கே.சி.வேணுகோபாலிடம் தரப்பட்டுள்ளது. அவர் பெங்களூரில் உட்கார்ந்து பிரச்னையை சரி செய்ய முயன்று வருகிறார். கர்நாடக குழப்பம் தீர்ந்த பிறகே புதிய தலைவர் நியமனத்தில் காங்கிரஸ் தீவிரம் காட்டும் என்றும் பேச்சு அடிபடுகிறது.

விரைவில் மகாராஷ்டிரா, சட்டிஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. எனவே விரைவாக தலைவரை நியமித்து கட்சிப் பணிகளை துவக்க வேண்டிய கட்டாயம் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டிருக்கிறது. அநேகமாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், அடுத்த காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்க அதிக வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் கேரள முன்னாள் முதல்வர் ஏ.கே.அந்தோணியிடம் தலைவராக பொறுப்பேற்கும்படி கேட்டதாகவும், அவர் உடல்நிலையை காரணம் காட்டி மறுத்துவிட்டதாகவும், இரண்டாவது வாய்ப்பாக மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் திக் விஜய் சிங் பெயர் அடிபடுவதாகவும், மேலும் இவர்கள் இருவருக்குமிடையே பலத்த போட்டி நிலவுவதாகவும், விரைவில் இவர்களில் ஒருவர்  காங்கிரஸ் கட்சி தலைவராக அறிவிக்கப்படலாம் என்று டெல்லி வட்டாரங்களை மேற்காட்டி தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

 

  • எம்.டி.ஆர்.ஸ்ரீதர்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *