சசிகலா புஷ்பா ராஜ்யசபா எம்.பி

வைகோ விவகாரத்தில் கொந்தளிப்பு! பா.ஜ.க.வின் ஏஜென்டா சசிகலா புஷ்பா எம்பி?

slider அரசியல்

         வைகோவுடன் மோதும் சசிகலா புஷ்பா…

        பின்னணியில் பா.ஜ.க.வின் பலே ஆபரேஷன் பிளான்!      

சசிகலா புஷ்பா ராஜ்யசபா எம்.பி
சசிகலா புஷ்பா

கடந்த 2009-ம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசும்போது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மீது தேசத்துரோக வழக்கு ஒன்று பதியப்பட்டது.

பத்து ஆண்டுகளாக சென்னை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு, பின்னர்  சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு கடந்த ஆண்டு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் கடந்த ஜூலை 5-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், வைகோ மீதான தேசத்துரோக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டிருப்பதால் அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதனால் வைகோவின் ராஜ்யசபா வேட்புமனு ஏற்கப்படுமா? நிராகரிக்கப்படுமா என்றெல்லாம் பரபரப்பு எழுந்தது. கடைசியில் வைகோ மனு ஏற்கப்பட்டு, அவர் ராஜ்யசபா எம்.பி.யாவது உறுதியாகிவிட்டது.

 

இந்நிலையில்  இன்று (ஜூலை 13-ம் தேதி) ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வைகோ மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில், “தேசத்துரோக வழக்கில் எனக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு சட்ட விரோதமானது. சிறப்பு நீதிமன்றம் சட்டப்படி தீர்ப்பு வழங்காமல் தனக்குத் தெரிந்த விஷயங்களை வைத்து தீர்ப்பு அளித்துள்ளது. எனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு முழுமையான ஆதாரம் மற்றும் சாட்சி இல்லாத நிலையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.  எனவே எனக்கு வழங்கப்பட்டுள்ள ஓராண்டு சிறைத்தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும். மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை முடிவடையும் வரை தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

வைகோவின் இந்த மனு மீதான விசாரணை அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வைகோவுக்கு தேசத் துரோக வழக்கு ஒருவகையில் பயம் காட்டுகிறது என்றால், இன்னொரு பக்கம் சசிகலா புஷ்பா வேறு பயம் காட்ட தொடங்கியுள்ளார். சமீபத்தில் அவர், ‘’ ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வாகிவிட்டார். ஆனால், அவருக்கு ராஜ்யசபா தலைவர் பதவி பிரமாணம் செய்து வைக்கக் கூடாது” என்று கூறினார். இது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் அவர் வைகோவுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கக்கூடாது என்று துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான வெங்கய்யா நாயுடுவுக்கு கடிதம் வேறு எழுதியிருப்பதும் அரசியல் அரங்கில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.

 

அ.தி.மு.க.வின் சார்பாக ராஜ்யசபா எம்பியாக பதவி வகித்து வரும் சசிகலா புஷ்பா இதுவரை பா.ஜ.க.வில் இணையவில்லை. சொல்லப் போனால் இப்போதுவரை இவர் அ.தி.மு..க.வை சேர்ந்தவர்தான். ஆனாலும் வைகோ விவகாரத்தில் இவர் குரல் பா.ஜ.க.வின் பின்னனி குரலாக இருக்க வாய்ப்பிருப்பதாக சொல்கிறார்கள் இதற்கேற்றார்போல, ’’பிரதமர் மோடியை மோசமாக விமர்சிக்கிறார் வைகோ. மோடியை தமிழர் விரோதியாக சித்தரிக்கிறார். மோடியை எதிர்ப்போருக்கு பாடம் கற்றுத்தர வேண்டும் என்றெல்லாம் வேறு பொங்கியிருக்கிறார். மேலும், பா.ஜ.க.வின் தமிழக அதிரடி ஆபரேஷனுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆள்தான் சசிகலா புஷ்பா என்றும், இவர் மூலம்தான் அ.தி.மு.க.வின் ராஜ்யசப எம்.பி.க்களை பா.ஜ.க. வளைக்கும் வலையை விரித்துள்ளதும் என்றும் டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

 

இந்தமுறை தமிழக அரசியலில் பா.ஜக.வின் அணுகுமுறை படு வித்தியாசமாக இருக்கப் போவதற்கான அறிகுறிகள் சசிகலா புஷ்பா எண்ட்ரி மூலம் சற்றே வெளிச்சம் காட்டுகிறது போல்தான் தெரிகிறது.

 

  • தொ.ரா.ஸ்ரீ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *