தமிழக முதல்வர்

வேலூர் பாராளுமன்றத் தேர்தல் – தமிழக முதல்வர் எடப்பாடியாரின் வியூகங்கள்

slider அரசியல்

 

வேலூர் தொகுதி பாராளுமன்றத் தேர்தல்

வெற்றிக் கனியை பறிப்பாரா ஏ.சி. சண்முகம்?

 

நடந்து முடிந்த 17வது பாராளுமன்றத் தேர்தலிலின்போது பணப் பட்டுவாடா காரணத்திற்காக நிறுத்தி வைக்கப்பட்ட தமிழகத்தின் வேலூர் பாராளுமன்றத் தொகுதிக்கு  ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி (05-08-2019) அன்று தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்கிற முனைப்போடு  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  பல்வேறு வியூகங்களை வகுத்திருப்பதாக அ.தி.மு.க. வட்டாரத்திலிருந்து தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன.

தமிழக முதல்வர்
தமிழக முதல்வர்

அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த ஏ.சி. சண்முகம் மீண்டும் வேட்பாளராக, அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார் என்பதால்,  வேலூர் தொகுதி வெற்றிக்காக தனிக் கவனம் எடுத்து தேர்தல் பொறுப்பாளர்களாக கட்சியின் முக்கிய மூத்த தலைவர்களை நியமனம் செய்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

தமிழகத்தின் வடக்கு மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள வேலூர் தொகுதியில் பா.ம.க.வுக்கு செல்வாக்கு நிறையவே உண்டு. இதை கருத்தில் கொண்டுதான் பா.ம.க.வின் அன்புமணிக்கும் ராஜ்யசபா சீட் தரப்பட்டது. வேலூர் தொகுதியில் ஏ.சி. சண்முகத்தை வெற்றி பெற வைத்து டெல்லிக்கு அனுப்பினால், அது பலவகையில்  அ.தி.மு.க.வுக்கு சாதகமாக அமையும் என்றும், இந்த வெற்றியின் மூலம் பா.ஜ.க.வின் உயர் மட்டத் தலைவர்களின் அதிருப்தியில் இருந்து தப்பித்து, பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணிக்குள் மேலும் வலிமை உண்டாக்கலாம் என்பதும் முதல்வரின் தற்போதைய வியூகங்களாக உள்ளன என்கிற தகவல்களும் வந்தவண்ணம் உள்ளன.

 

குறிப்பாக, கடந்த முறை வேலூர் தொகுதியில் போட்டியிட்ட அ.ம.மு.க. தற்போது போட்டியிலிருந்து விலகிக்கொண்டிருப்பதால், அ.தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு இப்போதே பிரகாசமாக உள்ளது கூடுதல் ப்ளஸ். மேலும், வேலூர் தொகுதியைச் சேர்ந்த நிறைய அ.ம.மு.க. நிர்வாகிகள் இப்போது அ.தி.மு.க.வில் இணைந்துள்ளனர்.

அ.தி.மு.க.வின் கூட்டணியில் இடம்பெற்றுள தே.மு.தி.க.வுக்கும் வேலூர் தொகுதியில் கணிசமான செல்வாக்கு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.. முக்கியமாக, லோக்சபா தேர்தல் கூட்டணி சமயத்தில் தி.மு.க.வின் துரைமுருகன் தங்களது ரகசியப் பேச்சுக்களையும், பேரத்தையும் போட்டு உடைத்து விட்டதால்,  தி.மு.க.வின் வேட்பாளராக களமிறங்கும் துரைமுருகன் மகனை அல்லது மருமகளை தோற்கடிக்க தே.மு.தி.க.வினர் முழு முனைப்போடு தீவிரம் காட்டுவார்கள் என்கிற நம்பிக்கையும் முதல்வருக்கு இருக்கிறது.

 

மேலும், நீட் தேர்வு விலக்கு, விவசாயக் கடன் தள்ளுபடி, ஒரு கோடி பேருக்கு சாலைப் பணியாளர்கள் வேலை என பல்வேறு பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து பெரும் வெற்றியைப் பெற்றுள்ள தி.மு.க.வின் முகத்திரையைக் கிழிக்க இந்த வேலூர் தொகுதி பாராளுமன்றத் தேர்தல் சரியான தருணமாக இருக்கிறது. இதை கோட்டைவிடக்கூடாது. அப்படிக் கோட்டைவிட்டால், தமிழகத்தின் ஆட்சிக் கோட்டைக்குள் தி.மு.க. நுழைவதற்கு கூடுதல் பலம் கிடைத்துவிடும். ஆகவே, இந்த வேலூர் பாராளுமன்றத் தொகுதியின் வெற்றியின் மூலம்  அ.தி.மு.க.வின் பலத்தை நிரூபித்து, தனக்கான அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ள நிறையவே மெனக்கெட்டு வருகிறாராம் எடப்பாடியார்.

  • நிமலன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *