இந்திய விமானங்கள் பறப்பதற்கு தடை விவகாரம்….
மீண்டும் தடையை நீட்டித்து முரண்டு பிடிக்கும் பாகிஸ்தான்!

இந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் காஷ்மீர் மாநிலம் புல்வாமாவாவில் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட கோரத் தாக்குதலில் இந்திய ராணுவத்தின் ஒரு பிரிவான சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் 41 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு அதிரடியாக இந்தியா சில நாளிலே பாகிஸ்தானுக்குள் நுழைந்து அங்கு முகாமிட்டிருந்த தீவிரவாதிகள் முகாம் மீது வான்வழி தாக்குதலை நடத்தியது. இதனால் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூளும் சூழல்கூட ஏற்பட்டது. இந்த மோதலுக்கு பிறகு பாகிஸ்தான் தனது வான் எல்லையில் இந்திய விமானங்கள் பறப்பதற்கு தடை விதித்தது.
பாகிஸ்தான் விதித்த இந்த தடையால் பிரதமர் மோடி பயணம்கூட ஒருமுறை சிரமத்திற்கு உள்ளானது. ஆனாலும் பாகிஸ்தான் தடையை விலக்கிக் கொள்ளவில்லை. இபோதுவரை அந்த நிலையே தொடர்கிறது. இதற்காக இந்திய அரசு தரப்பில் பாகிஸ்தானுடன் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது. மேலும், இந்திய – பாகிஸ்தான் இடையே மற்ற முக்கியத்துவம் விஷயங்களில் நடக்கவுள்ள பரஸ்பர பேச்சுவார்த்தைகளும், இந்த காரணத்தினால் நின்று போயிருக்கிறது. இதனால் தூதரக ரீதியாக இரு நாட்டுக்கும் பல சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், ஜூலை 13-ம் தேதி பாகிஸ்தான் அரசு தரப்பில் இருந்து “எல்லைப் பகுதிகளிலிருந்து போர் விமானங்களை திரும்ப பெறாத வரை இந்திய விமானங்களை தங்கள் வான் எல்லைக்குள் செல்ல அனுமதிக்க முடியாது” என்றும், “இந்திய விமானங்கள் செல்வதற்கு விதிக்கப்பட்ட தடை வரும் 26-ம் தேதி வரை நீடிக்கப்படுகிறது” என்றும் ஒரு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இத்துடன் ஐந்தாவது தடவையாக இந்த தடை நீடிக்கப்பட்டுள்ளதும் கவனிக்கத்தக்கது.
இது குறித்து பாகிஸ்தான் விமான போக்குவரத்து செயலாளர் நஸ்ரத் கூறுகையில், ’’எல்லைப் பகுதியில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள இந்திய விமான படைக்கு சொந்தமான விமானங்களை திரும்ப பெறுமாறு இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டோம். அதுவரை இந்திய விமானங்களை பாகிஸ்தான் வான் பகுதியில் நுழையவிட மாட்டோம்” என்று கூறியுள்ளார்.
இந்தத் தடை நீடிப்பால், இந்தியாவிலிருந்து புறப்படும் விமானங்கள் வேறு வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் இந்தியர்கள் மட்டுமல்ல, பல்வேறு வெளிநாட்டினரும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த விவகாரத்தை மோடி அரசு சமாதான வழியில் பேச்சுவார்த்தை மூலம் முடிக்குமா? அல்லது வேறு ஏதேனும் யுக்தியை கையாளுமா என்பது சிதம்பர இரகசியம்தான்.
- நிமலன்