தமிழக ஆளுநர் பன்வாரிலால்

ஏழுபேர் விடுதலை… மௌனம் கலைப்பாரா தமிழக ஆளுநர்?

slider அரசியல்

ராஜீவ் கொலை வழக்கில் ஏழு பேர் விடுதலை….

கவர்னர் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு போடுமா?

தமிழக ஆளுநர் பன்வாரிலால்
தமிழக ஆளுநர்

 

கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு, தமிழக அமைச்சரவையைக் கூட்டி, ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென  தீர்மானம் நிறைவேற்றியது. இதனை உடனடியாக  கவர்னருக்கும்  பரிந்துரை  செய்தது.  இந்த பரிந்துரை  மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறியும், தமிழக அமைச்சரவை பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்க கவர்னருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் சென்னை ஐகோர்ட்டில் நளினி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, சி.சரவணன் ஆகியோர்  முன்பு (ஜூலை 12-ம் தேதி)  விசாரணைக்கு வந்தது.  நளினி தரப்பில் ஆஜரான வக்கீல் ராதாகிருஷ்ணன்,    ‘’அரசியல் சாசன அதிகாரம் கொண்ட கவர்னர், தமிழக அமைச்சரவையின் பரிந்துரை மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கடந்த 8 மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை எதிர்த்து தான் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  கவர்னருக்கு சட்ட பாதுகாப்பு இருந்தாலும் அமைச்சரவை பரிந்துரை மீது எந்த முடிவும் எடுக்காமல் அமைதியாக நீண்ட காலம் இருக்க முடியாது. கவர்னர் இதுவரை ஒப்புதல் அளிக்காததால், மனுதாரர் உள்பட 7 ஏழு பேரும் சட்டவிரோத காவலில் இருப்பதாகவே கருதப்படுகின்றனர்” என்று வாதிட்டார்.

பெரும் அரசியல் முக்கியத்துவம் கொண்ட இந்த விவகாரத்தில், தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி தங்கள் தரப்பு வாதமாக,. ’’அமைச்சரவை பரிந்துரையை பரிசீலிக்க வேண்டும் என்று கவர்னருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட முடியாது. கவர்னருக்கு சட்டப் பாதுகாப்பு இருக்கிறது. ஏழு பேர் விடுதலை விவகாரத்தைப் பொறுத்தவரை தமிழக அரசின் பரிந்துரை கவர்னரின் பரிசீலனையில் உள்ளது’ என்று வாதிட்டார்.

 

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த மனு விசாரணைக்கு உகந்ததா இல்லையா என்பது குறித்த உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.

 

இப்போதைக்கு இந்த ஏழு பேர் விடுதலை என்பது தமிழக ஆளுநர் எடுக்கும் முடிவுக்கு உட்பட்டே இருந்தாலும், அரசியல் சிக்கல்கள் பெருமளவில் இருப்பதால், இவர்களின் விடுதலை விஷயத்தில் தமிழக ஆளுநரின் மௌனம் தொடர்ந்து நீடிக்கவே செய்யும் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

 

எஸ்.எஸ்.நந்தன்

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *