அன்புமணியுடன் ராமதாஸ்

அன்புமணிக்கு மீண்டும் பதவி – பா.ம.கவில் புகையும் அதிருப்தி

slider அரசியல்

அன்புமணி ராமதாஸுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி…

பா.ம.க.வில் வெடிக்கும் மோதல்?

 

ராஜ்யசபா எம்.பி. பதவியை தன் மகன் அன்புமணி ராமதாஸுக்கு கொடுத்தது குறித்து பா.ம.க.வின் மூத்த தலைவர்கள் சிலர் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். இதனால் கட்சியில் விரைவில் ஒரு மோதல் வெடிக்கும் அறிகுறி தென்படுவதாக பா.ம.க. வட்டாரத்தில் பேச்சு கிளம்பியிருக்கிறது. இதனால் அக் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் குழப்பத்தில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

 

அன்புமணியுடன் ராமதாஸ்
ராமதாஸூடன் அன்புமணி

கடந்த பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க.வுடன் செய்துகொண்ட கூட்டணி உடன்படிக்கையின்படி பா.ம.க.வுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டை அ.தி.மு.க. எந்தவித தயக்கமுமின்றி தற்போது வழங்கியது. ஆனால், தர்ம்புரி பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு, தேர்தலில் தோல்வியைத் தழுவிய அன்புமணிக்கே மீண்டும் ராஜ்யசபா எம்.பி.பதவியை ஒதுக்கியதை, பா.ம.க.வின் மூத்த தலைவர்கள் சிலர் விரும்பவில்லையாம். இதில் குறிப்பாக, முன்னாள் மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலுக்கு ரொம்பவே அதிருப்தியாம்.

‘’ஏன் எப்போதும் அன்புமணியே எல்லாவற்றுக்கும் முன்னிறுத்தப்படுகிறார். வேறு தலைவர்களே கட்சி தலைமைக்கு கண்ணில்படவில்லையா? இப்படியே ஒவ்வொரு முறையும் அன்புமணியையே தேர்ந்தெடுத்து கொண்டிருந்தால், மக்கள் என்னதான் நினைப்பார்கள்? ராஜ்யசபாவுக்கு செல்ல அன்புமணிக்கு எல்லா தகுதிகளுமே உள்ளன. திறமைசாலி. படித்த அறிவாளி. ஆனால், இவர் ஏற்கனவே ராஜ்யசபாவுக்கு போய் விட்டார். லோக்சபாவிலும் இருந்து விட்டார். அமைச்சர் பதவியும் வகித்து விட்டார். அதற்காக தொடர்ந்து டெல்லிக்கு போய்க் கொண்டே இருக்க வேண்டுமா? அன்புமணியையும் தாண்டி வேறு தலைவர்களே பா.ம.க.வில் இல்லையா? அல்லது அனுபவம், திறமை வாய்ந்த மற்ற தலைவர்களை உயரத்தில் வைத்து பார்க்க வேண்டிய பெருந்தன்மையும் பா.ம.க. தலைமையிடம் குறைந்துள்ளதா?” என்று நீள்கிறதாம் இந்த அதிருப்தியாளர்களில் குரல்கள்.

பா.ம.க. தொண்டர்களின் இந்த உணர்வினை  டாக்டர் ராமதாஸும் உணர்ந்துள்ளதாகவும், அதனால் எப்படியும் முன்னாள் மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு அல்லது கட்சி தலைவர் ஜி.கே. மணி இவர்களில் ஒருவரை டெல்லிக்கு அனுப்பலாம் என்றுகூட யோசித்தாராம். ஆனால், அன்புமணியும், அவரது குடும்பத்தினரும்தான் ராஜ்ய சபா சீட் வேண்டும் என்று அடம்பிடித்து வாங்கினார்களாம்.

“பா.ம.க. என்றாலே ராமதாஸ், அன்புமணி என்றால், பின்னர் நாங்களெல்லாம், கடைசிவரை  தொண்டர்களாகத்தான் இருக்க வேண்டுமா?” என்கிற பா.ம.க.வின் அடிமட்டத் தொண்டனின் குரலை சமாளித்தாக வேண்டிய கட்டாயத்துக்கு டாக்டர் ராமதாஸ் தள்ளப்பட்டிருக்கார். தேர்தல் ரீதியாக தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்து வரும் பா.ம.கவுக்கு இப்போதைய சூழல் மேலும் நெருக்கடி தருவதாகவே இருக்கிறது என்றாலும், மருத்துவர் ராமதாஸ் எல்லாத்தையும் சமாளிப்பார் என்கிறார்கள் அவரது நெருங்கிய வட்டாரங்கள்.

 

  • நிமலன்

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *