வனமகன் விமர்சனம் – vanamagan review Reviewed by Momizat on . நாகரீகம், அறிவியலின் வளர்ச்சி எதுவுமே அறியாமல், காட்டுக்குள்ளேயே வாழ்ந்து பழகிய ஒருவன், எதிர்பாராத நிகழ்வால் நவநாகரீக மனிதர்கள் வாழும் நகரத்திற்கு இடம் பெயர்ந்த நாகரீகம், அறிவியலின் வளர்ச்சி எதுவுமே அறியாமல், காட்டுக்குள்ளேயே வாழ்ந்து பழகிய ஒருவன், எதிர்பாராத நிகழ்வால் நவநாகரீக மனிதர்கள் வாழும் நகரத்திற்கு இடம் பெயர்ந்த Rating: 0
You Are Here: Home » சினிமா » வனமகன் விமர்சனம் – vanamagan review

வனமகன் விமர்சனம் – vanamagan review

வனமகன் விமர்சனம் – vanamagan review

நாகரீகம், அறிவியலின் வளர்ச்சி எதுவுமே அறியாமல், காட்டுக்குள்ளேயே வாழ்ந்து பழகிய ஒருவன், எதிர்பாராத நிகழ்வால் நவநாகரீக மனிதர்கள் வாழும் நகரத்திற்கு இடம் பெயர்ந்தால், அவனுடைய நிலை என்னவாகும் என்பதைச் சொல்கிறது ‘வனமகன்’.

வனமகன்

வனமகன்

அந்தமான் காட்டுப் பகுதிக்குள் தன் பூர்வகுடி இனத்தோடு, வெளியுலகத் தொடர்பு ஏதும் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் ஜெயம் ரவி. பூர்வகுடியின மக்கள் வாழ்ந்து வரும் அந்தக் காட்டுப் பகுதிக்குள் காற்றாலைகளை நிறுவத் திட்டமிடுகிறது ஒரு கார்ப்பரேட் நிறுவனம். இதற்காக காவல்துறையினரின் உதவியோடு பூர்வகுடி மக்களை விரட்டி அடிக்கிறது. இதை எதிர்த்துப் போராடும் பூர்வகுடி மக்கள் காவல்துறையினரின் அராஜகங்களுக்கு உள்ளாகிறார்கள். சிலர் உயிரிழக்கிறார்கள். கருணையுள்ளம் கொண்ட ஒரு காவல் துறை அதிகாரி ஜெயம் ரவியை தப்பிக்க வைக்கிறார்.

அப்போது அதே காட்டுப் பகுதிக்குள் தன் நட்புகளுடன் சுற்றுலா வரும் நாயகி சயிஷாவின் காரில் அடிபட்டு பலத்த காயம் அடைகிறார் ஜெயம் ரவி. இது காவல்துறையினருக்கு தெரிந்தால் சட்டச் சிக்கல்கள் ஏற்படும் என்பதை உணர்ந்து, சயிஷாவும் அவரது நட்புகளும் ஜெயம்ரவியை சென்னைக்கு அழைத்துவந்து சிகிச்சையளிக்கிறார்கள். உயர்தர சிகிச்சையால் குணமடையும் ஜெயம்ரவியை சயீஷா தன் வீட்டிலேயே வைத்திருக்கிறார். காட்டுக்குள்ளேயே வளர்ந்து பழகிய ஜெயம் ரவிக்கு நகரத்து மனிதர்களின் மொழியும், வாழ்வியலும் புரியவில்லை. ஆனால், இவர்களிடத்து இருக்கும் வன்மமும், களங்கமும் புரியவருகிறது. சயீஷாவின் மீது நேசம் வைக்கிறார். இந்த நேசம் காதலாக மாறும்போது, அந்தமானிலிருந்து காவல்துறையினர் இவரைத் தேடிவந்து மீண்டும் அந்தமானுக்கே அழைத்துச் செல்கிறார்கள். அங்கே அவர் என்னவானார், மீண்டும் தன் கூட்டத்தோடு சேர்ந்தாரா? என்பதைச் சொல்கிறது மீதித் திரைக்கதை.

மனிதனாக வாழ்வதற்கு பணம், பொருள், ஆடம்பரம், அறிவியல் எல்லாம் தேவையே இல்லை. அன்பும், நேசமும், இயற்கையோடு இணைந்து வாழக்கூடிய மனப்பாங்கும் இருந்தால் மட்டும் போதும் என்பதை ‘வனமகன்’ மூலமாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் விஜய்.

ஜெயம் ரவிக்கு சவாலான பாத்திரம். படம் முழுவதும் கணக்கிட்டால் அவர் பேசும் வசனங்கள் ஒரு சில வார்த்தைகளே. அதுவும் பூர்வகுடி மக்கள் பேசும் புரியாத மொழியில். என்றாலும், நல்ல திரைக்கதைக்கு வசனங்கள் தேவையில்லை என்பதை தன் நடிப்பாலும், முக பாவணையாலும், உடல் மொழியாலும் பார்வையாளர்களுக்கு உணர்த்துகிறார். அதே போல் சண்டைக் காட்சிகளிலும், மரத்திற்கு மரம் தாவுவதிலும், அரையாடை உடுத்தி நடனமாடுவதிலும், நாயகி சயீஷாவை பெயர் சொல்லி அழைக்கும்போதும், முக பாவணையிலேயே தன் காதலைச் சொல்லும்போதிலும், தான் ஒரு தேர்ந்த நடிகன் என்பதை நிரூபித்திருக்கிறார்.

நாயகி சயீஷா நடிப்பிலும், நடனத்திலும் முத்திரை பதித்திருக்கிறார். அறிமுக நாயகியிடம் இத்தனை அசத்தலான நடிப்பை வாங்கியிருக்கும் இயக்குநர் விஜய்க்கு பாராட்டுகள்.

நாயகன் ஜெயம் ரவியின் முகபாவணைகள் இதைத்தான் உணர்த்துகின்றன என்று குறிப்பால் உணர்ந்து, அதற்கேற்ற வசனங்களைப் பேசி, பார்வையாளர்களுக்கு புரியவைக்கும் தம்பி ராமையா, சில இடங்களில் சிரிக்கவும் வைக்கிறார். பிரகாஷ்ராஜ்க்கு வழக்கமான பாத்திரம். எழுத்தாளர் வேல ராமமூர்த்தி, சண்முகராஜா பாத்திரங்கள் கன கச்சிதம்.

இயற்கையின் அழகை மட்டுமல்ல, செயற்கையின் அழகையும்  தன் கேமரா கண்களால் அழகுபடக் விளித்திருக்கும் திருவின் ஒளிவண்ணம் அருமை. ‘யம்மா அழகம்மா’ பாடல் ரசிக்கத்தக்கது.

இயற்கையை, மனிதத்தை நேசிக்கிறவர்களுக்கு இந்தப் படம் ஆறுதல்.

நல்ல நோக்கத்தோடு எடுக்கப்பட்ட திரைப்படத்தில், எதார்த்தமில்லாத சினிமாத்தனமான காட்சிகள் ஆங்காங்கே நிரம்பி வழிவதை இயக்குநர் தவிர்த்திருந்தால் இந்த ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்றாக ‘வனமகன்’ இடம்பெற்றிருக்கும். என்றாலும், சமூக அக்கறையோடு எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதால், வனமகனை வாழ்த்துவோம்.

மதிப்பெண்கள் 43%

About The Author

Number of Entries : 53

Leave a Comment

© 2011 Powered By Wordpress, Goodnews Theme By Momizat Team

Scroll to top