விருது பெறுபவரின் திறமைகளை துருவி ஆராயவேண்டும்! – பிறைசூடன் Reviewed by Momizat on . விருது பெறுபவரின்  திறமைகளை துருவி ஆராயவேண்டும்! கவிஞர் பிறைசூடன் பாலமுருகன் முப்பது ஆண்டுகாலம் தமிழ்ச் சினிமாவில் பாட்டெழுதிக் கொண்டிருக்கும் கவிஞர் பிறைசூடன் விருது பெறுபவரின்  திறமைகளை துருவி ஆராயவேண்டும்! கவிஞர் பிறைசூடன் பாலமுருகன் முப்பது ஆண்டுகாலம் தமிழ்ச் சினிமாவில் பாட்டெழுதிக் கொண்டிருக்கும் கவிஞர் பிறைசூடன் Rating: 0
You Are Here: Home » இலக்கியம் » விருது பெறுபவரின் திறமைகளை துருவி ஆராயவேண்டும்! – பிறைசூடன்

விருது பெறுபவரின் திறமைகளை துருவி ஆராயவேண்டும்! – பிறைசூடன்

விருது பெறுபவரின்  திறமைகளை துருவி ஆராயவேண்டும்! – பிறைசூடன்

விருது பெறுபவரின்  திறமைகளை துருவி ஆராயவேண்டும்!
கவிஞர் பிறைசூடன்

பாலமுருகன்

முப்பது ஆண்டுகாலம் தமிழ்ச் சினிமாவில் பாட்டெழுதிக் கொண்டிருக்கும் கவிஞர் பிறைசூடன் மிகச் சிறந்த இலக்கிய, பட்டிமன்ற பேச்சாளரும் கூட. வாசிப்புப் பழக்கம் மிகுதி கொண்டவர். படித்த இலக்கியங்களை அப்படியே உள்வாங்கிக் கொள்கிற இவரது ஞாபகத் திறன் நூறு ஜிபி மெமரி கார்டு. 2014ம் ஆண்டு இவருக்கு சென்னையிலுள்ள ஜெருசலேம் நிகர்நிலைப் பல்கலைக் கழகம் முனைவர் பட்டம் கொடுத்துச் சிறப்பித்திருக்கிறது. அதுவும் இலக்கியத்துக்காக! சூரியகதிர் சார்பாக வாழ்த்துகளைச் சொல்லியபடியே பேட்டியைத் தொடங்கினோம்.

கவிஞர் பிறைசூடன்

kavignar pirai soodan

சினிமா பாடலாசிரியராக வருவதற்கு முன்னர் உங்கள் வாழ்வியல் பற்றி சிறு குறிப்பு?

‘‘ எங்க அப்பா காவல்துறையில் ஆய்வாளர். நான்தான் வீட்டிற்கு மூத்த மகன். ஏழு தம்பிகள், இரண்டு தமக்கைகள். பி.காம் படித்தேன். சிறு வயதிலிருந்தே தமிழ் இலக்கியங்களின் மீது தீராக் காதல். படிக்கும்போதே கவி மன்றம், பட்டிமன்றங்களில் கலந்து கொள்வேன். இப்படித்தான் வளர்ந்தது தமிழுக்கும் எனக்குமான காதல். அதன் பின்னர் நடுவராக உயர்த்தப்பட்டேன். கடந்த 35 ஆண்டுகளில் எண்ணிக்கொள்ள  இயலாதபடிக்கு  பட்டிமன்றம், கவி மன்றங்களில் நடுவராகப் பங்கேற்று வருகிறேன். ’’
சென்னைக்கு எப்போது வந்தீர்கள்? முதல் சினிமா பாட்டு வாய்ப்பு?
‘‘ சொந்த ஊர் நன்னிலத்திலிருந்து சினிமா பாடலாசிரியனாகும் ஆவலோடும், தகுதியோடும் 1983ல் சென்னைக்கு வந்தேன். சில மாதங்கள் அலைந்து திரிந்ததில், பணமெல்லாம் காலி. ஒருநாள் தேநீர் கடையொன்றில் வாழ்வியல் கவிதைகளை எழுதிக்கொண்டிருந்ததை பத்திரிகையாளர் ராம்ஜி பார்த்தார்.
நான் எழுதிக் கொண்டிருந்தவற்றை ஓரக்கண்ணால் படித்துப் பார்த்தவர், உடனடியாக ஒரு நிகழ்வைச் சொல்லி, அதுபற்றி கவிதை எழுதச் சொன்னார். ஐந்து நிமிடங்களுக்குள் எழுதிக் கொடுத்தேன். அப்படியே என்னை கையோடு ஓர் ஆட்டோவில் அமர்த்திக்கொண்டு எம்.எஸ்.விஸ்வநாதன் முன் நிறுத்தினார். அப்போதுதான் ராம்ஜி ஒரு பத்திரிகையாளர் என்பது தெரியும். அப்போது ‘சிறை’ என்ற படத்திற்காக எம்.எஸ்.வி இசையமைத்துக் கொண்டிருந்தார். அன்றைய தினமே என் திறமைகளைச் சோதித்தார் எம்.எஸ்.வி. முதல் பாடல் வாய்ப்பு அன்றைக்கே வழங்கப்பட்டது.’’
அந்தப் பாடலுக்காக உங்களுக்கு வழங்கப்பட்ட தொகை?
‘‘ 500 ரூபாய்க்கு காசோலை கொடுத்தார்கள். அந்தக் காசோலையை மாற்ற வங்கிக் கணக்கு வேண்டும். அப்போது எனக்கு வங்கியில் கணக்கெல்லாம் கிடையாது. மேலும், வங்கிக் கணக்கு துவங்குவதற்கு முதலில் 50 ரூபாய் பணம் வேண்டும். அதுவும் என்னிடத்தில் இல்லை. மூன்று  மாதங்கள் கழித்தே அந்தக் காசோலை மாற்றப்பட்டது.’’
இதுவரையிலும் எத்தனை பாடல்கள் எழுதியிருப்பீர்கள்?
‘‘சினிமாவுக்கு இரண்டாயிரத்திற்கும் மேல் போகும். அதுதவிர, ஆன்மிகம், இலக்கியம், வாழ்வியல் என இந்த வகைகளில் 5000க்கும் மேல் இருக்கும’’.
எது இலக்கியம் என்பதில் இன்னமும் சர்ச்சை நீடித்து வருகிறதே?
‘‘ஓர் இலக்கை வரையறுத்துக்கொண்டு எழுதப்படுகிற எல்லாமே இலக்கியம்தான். சொல்லப்போனால், சினிமா பாடல்கள்கூட ஒருவகை இலக்கியம்தான’’.
சென்னைக்கு வருவதற்கு நீங்கள் மீன் வியாபாரம் பார்த்ததாக உங்கள் ஊர்க்காரர் ஒருவர் சொன்னார். உண்மையா?
‘‘மீன் வியாபாரம் மட்டுமல்ல, ஆறு ஆண்டுகளாக டீ கடையும் நடத்தியிருக்கிறேன். காய்கறி வியாபாரம் செய்திருக்கிறேன். புகார் மனுக்களை எழுதிக்கொடுக்கும் பெட்டிஷன் ரைட்டராக இருந்திருக்கிறேன். பெரிய குடும்பத்தின் தலைப் பிள்ளை என்பதால், படித்து முடித்தபோதே பொருளாதாரக் கடமைகள் சூழ்ந்துகொண்டன’’.
வாலி, வைரமுத்துபோல் நீங்கள் பாராட்டப்படவில்லை என்பதை நினைத்து வருத்தப் படுகிறீர்களா?
‘‘இதற்கு நான் ஏன் வருத்தப்படவேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை உண்டு. யார் திறமை யாருக்குத் தேவைப்படுகிறது என்பதை காலம் நிர்ணயிக்கிறது. அதற்காக, திறமையற்றவர் என யாரையும் குறைத்து மதிப்பிடக்கூடாது. உலகின் உயர்ந்த கட்டடத்தை வடிவமைத்த பொறியாளரால் ஒரு சிட்டுக்குருவியின் கூட்டையோ, தேன் கூட்டையோ, சிலந்தியின் வலையையோ வடிவமைக்க இயலாது. கடல் தண்ணீரை வியந்து பார்க்கும் ஒருவனுக்கு தாகம் எடுத்தால், அதை அள்ளிப் பருக முடியுமா? அங்கே மணல் தோண்டி குடித்துதான் தாகம் தீர்த்துக்கொள்ளவேண்டும். நான் எல்லோரையும் மதிக்கிறவன். எல்லோர் திறமையையும் மதிக்கிறவன். ஆளாளுக்கு ஒரு சிறப்பு இருக்கும’’.
உங்களுக்கு மிகப் பெரிய விருதுகள் எதுவும் வழங்கப்படவில்லையே ஏன்?
‘‘விருது என்கிற எழுத்தை மாற்றிப் போடுங்கள். துருவி என வரும். ஒருவருக்கு விருது கொடுக்கப்படுவதற்கு முன்னர், அவரின் திறமைகளை துருவித் துருவி ஆராயவேண்டும். இதற்கு மேல் எதுவும் சொல்வதற்கில்லை. கவிஞன் என மக்களும், இலக்கிய உலகமும் என்னை ஏற்றுக்கொண்டதே பெரிய விருதுதானே’’?
இயக்குநர் பாலச்சந்தர் உங்கள் ஊர்க்காரர்! அவரிடம் வாய்ப்பு கேட்டுச் சென்றிருக்கிறீர்களா?
‘‘ஏதோ காரணத்தால் அவர் என்னைக் கூப்பிடவில்லை. ஏதோ காரணத்தால் நானும் அவரிடம் செல்லவில்லை’’.
உங்களுக்குப் பிடித்த சினிமா பாடலாசிரியர்?
‘‘கண்ணதாசன் மட்டுமே!’’

காதலையும் கவிஞனையும் பிரிக்க முடியாது. உங்களுக்கு காதல் அனுபவம்?
‘‘என் உறவுக்கார பெண் கலா என்பவரைக் காதலித்தேன். அப்போது நிரந்தர வருமானம் இன்றி அலைந்து கொண்டிருந்த காலம். வி.ஏ.ஓ பணிக்காகத் தேர்வு பெற்றிருந்தேன். ஆனாலும், தமிழும், தமிழ் இலக்கியங்களுமே எதிர்காலம் என வி.ஏ.ஓ வேலையில் சேரவில்லை. இவனைக் கட்டிக்கொண்டால் தேறமாட்டோம் என அவளால் என் காதல் புறக்கணிக்கப்பட்டுவிட்டது. ‘நொந்த மனமும் வெந்த சோறும் சூடு தாங்காது’. அப்படித்தான் என் காதலும்.’’
நீங்கள் ஏன் அதிகமாக கவிதைத் தொகுப்புகளோ, இலக்கியங்களோ எழுதவில்லை?
‘‘ நேரமின்மைதான் காரணம். ஏற்கனவே ‘பிறைசூடன் கவிதைகள’¢, ‘உன்னை உன்னால் உயர்த்திக் கொள்’ ‘எம்.ஜி.ஆர் கவிதைகள்’, ‘மூகாம்பிகை அம்மனைப் பற்றிய ஆன்மிக கவிதைத் தொகுப்பு போன்றவற்றை எழுதியிருக்கிறேன். இந்த ஆண்டு நிறைய எழுதவேண்டும் என்பதற்காக, நிறையப் படித்துக் கொண்டிருக்கிறேன். அடுத்த ஆண்டு புத்தகத் திருவிழாவில் என் படைப்புகளும், நானும் நிச்சயம் இடம்பெறுவோம்.!’’

pirai soodan

கவிஞர் பிறைசூடன்

About The Author

Number of Entries : 53

Leave a Comment

© 2011 Powered By Wordpress, Goodnews Theme By Momizat Team

Scroll to top