புத்தகக் கண்காட்சி Reviewed by Momizat on . புத்தகக் கண்காட்சி புத்தகச் சந்தை மற்றும் கண்காட்சி என்றாலே எழுத்தாளர்களிடமும், பதிப்பாளர்களிடமும் இதைப் பற்றிய பல்வேறு பதற்றங்களும், கனவுகளும் சூழ்ந்துகொள்ளத் புத்தகக் கண்காட்சி புத்தகச் சந்தை மற்றும் கண்காட்சி என்றாலே எழுத்தாளர்களிடமும், பதிப்பாளர்களிடமும் இதைப் பற்றிய பல்வேறு பதற்றங்களும், கனவுகளும் சூழ்ந்துகொள்ளத் Rating: 0
You Are Here: Home » கட்டுரைகள் » புத்தகக் கண்காட்சி

புத்தகக் கண்காட்சி

புத்தகக் கண்காட்சி

புத்தகச் சந்தை மற்றும் கண்காட்சி என்றாலே எழுத்தாளர்களிடமும், பதிப்பாளர்களிடமும் இதைப் பற்றிய பல்வேறு பதற்றங்களும், கனவுகளும் சூழ்ந்துகொள்ளத் தொடங்கிவிடுகின்றன. ஆயிரக் கணக்கான புத்தகங்களுக்கு நடுவே தன்னுடைய புத்தகம் ஒரு தனித்த அடையாளத்தைப் பெறும் என்று ஓர் எழுத்தாளன் நம்புவது உண்மையிலேயே ஒரு கனவுதான். ஆனால், தொடர்ந்து எழுதுவதற்கு அந்தக் கனவு தேவையாக இருக்கிறது.

chennai book fair

chennai book fair

ஒரு கண்காட்சியோடு ஒரு மொழியின் இலக்கியச் செயல்பாடுகள் இணைக்கப்படுவது கொஞ்சம் விநோதம்தான். ஆனால், தமிழில் அது அப்படித்தான் நடக்கிறது. காரணம், எழுத்தாளனுக்கென்று பெரிய களங்களோ, அரங்குகளோ இங்கு இல்லை. சென்னை புத்தகக் கண்காட்சியின் சில நாள் ஜனக்கூட்டத்தின் நடுவே, தானும் தன் புத்தகங்களும் நின்றுகொண்டிருப்பது எழுத்தாளனுக்கு அந்த மயக்கத்தைக் கொஞ்சம் தரவே செய்கிறது. அந்த பத்து நாட்களுக்குப் பிறகு ஜனங்களின் பார்வையிலிருந்து எழுத்தாளனும் புத்தகங்களும் தலைமறைவாகிவிடுவதை ஒவ்வொரு ஆண்டும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

 

 

உண்மையில் புத்தகங்கள் நம் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இல்லை. ஆண்டுக்கொருமுறை நடக்கும் கொண்டாட்டத்தின் சிறு சலசலப்பு மட்டுமே.

 

manushyaputhiran

manushyaputhiran

கடந்த 14 ஆண்டுகளாக சென்னை புத்தகக் கண்காட்சியைப் பார்த்து வருகிறேன். அது எப்படி சிறுகச் சிறுக வளர்ந்து இன்றைய ஒரு பிரம்மாண்டமான தோற்றத்தை அடைந்திருக்கிறது என்பதைக் கண்டிருக்கிறேன்.

 

நான் முதலில் 2002இல் சென்னை புத்தகக் கண்காட்சியைக் கண்டபோது அது அண்ணாசாலை, காயிதே மில்லத் கல்லூரி மைதானத்தில் நடந்துகொண்டிருந்தது. கார்ப்பெட்டுகள் கிடையாது. புல்வெளியில் ஆங்காங்கே எழுத்தாளர்களும் வாசகர்களும் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். இவ்வளவு கடைகள் இல்லை. கொஞ்சம் கூட்டம் வந்தாலே ஒரு பெரிய கூட்டம் இருப்பது போல மூச்சு திணறும். பின்னர் அமைந்தகரை செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்திற்கு கண்காட்சி மாறிய பிறகு பெரிய இடம் கிடைத்தது. பார்க்கிங் வசதிகள் கிடைத்தன.  சில புதிய சௌகரியங்கள், சில புதிய அசௌகரியகங்கள்.

 
ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடந்துவரும் சென்னை புத்தக கண்காட்சி என்பது உண்மையில்  மிகப்பெரிய வளர்ச்சிதான். பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் புத்தகக் கண்காட்சியை மக்களிடம் கொண்டுசெல்வதற்கு பெரும் பங்களிப்பைச் செய்து வருகின்றன. காட்சி ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும் மக்களுடைய கலாச்சார வாழ்க்கையை முற்றாக ஆக்ரமித்துக்கொண்டுவிட்ட இந்தக் காலத்தில் ஒரு புத்தகக் கண்காட்சியில் மக்கள் கூட்டமாக நின்றுகொண்டிருக்கக்கூடிய அனுபவத்தை விரும்புகிறார்கள் என்பது கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

 
ஒரு புத்தகக் கண்காட்சிக்குக் கிடைக்கும் இந்த முக்கியத்துவத்தை, அந்தக் கண்காட்சியில் இருக்கக்கூடிய புத்தகங்கள் பிரதிபலிக்கின்றனவா என்பது ஒரு முக்கியமான கேள்வி. ஒரு புத்தகக் கண்காட்சியை முழுமையாகச் சுற்றிப் பார்க்கும்போது, அங்கு புதிய புத்தகங்களும், நாம் நீண்ட நாட்களாக தேடிக்கொண்டிருந்த அரிதான புத்தகங்களும் கிடைக்கின்றன என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அர்த்தமற்றமுறையிலும் பொறுப்பற்ற முறையிலும் எழுதப்பட்டு தயாரிக்கப்பட்ட புத்தகங்கள் நிரம்பி வழிகின்றன என்பதும்.

 
குறிப்பாக, கவிதை நூல்கள், அன்றாட பயன்பாட்டிற்குரிய தொழில்நுட்ப நூல்கள் போன்றவற்றில் முறையாக எழுதப்படாத புத்தகங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். மிகவும் மேம்போக்காக எழுதப்பட்ட தன்னம்பிக்கை நூல்களையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம். மேலும், குழந்தைகளுக்கான இலக்கியம் என்பது பொது அறிவு தகவல்களாகவோ, அல்லது மோசமான மொழியில் எழுதப்பட்ட நீதிக்கதைகளாகவோ தொடர்ந்து தமிழில் உற்பத்தி செய்யப்படுகின்றன. என்ன புத்தகத்தை வாங்குவது என்று தெரியாமல் ஓர் ஆர்வத்தில் புத்தகக் கண்காட்சிக்குள் நுழையும் வாசகர்கள் பலர் இதுபோன்ற அதிகம் உபயோகமில்லாத புத்தகங்களில் சிக்கிக்கொள்கிறார்கள்.

 
பொதுவாக, ஆங்கில நூல்களுக்கு இருப்பது போல தமிழ் நூல்களை அறிமுகப்படுத்துவதற்கு, அவற்றை விவாதிப்பதற்கு நமது ஊடங்களில் இடம் இல்லை. இதனால், ஒவ்வொரு ஆண்டும் வெளிவரும் சிறந்த நூல்கள்கூட வாசகர்களுடைய எந்த கவனத்தையும் பெறாமலேயே போய்விடுகின்றன. ஏதேனும் ஒரு மோசமான புத்தகத்திற்கு அந்த வருடம் சாகித்ய அகாதமி விருது கொடுத்தால் வாசகர்கள் பலர் அந்த புத்தகத்தை கண்ணை மூடிக்கொண்டு வாங்கிச் செல்வதைப் பார்த்திருக்கிறேன். புத்தகங்களைப் பற்றிய எந்த முன்னறிவுமின்றி புத்தகங்களை வாங்குவது என்பதும் ஒருவிதத்தில் பயனற்ற ஒரு செயல்தான்.

 
எது எப்படியோ புத்தக வாசனையே இல்லாதவர்கள் புத்தகக் கண்காட்சிக்கு ஒரு முறை வருவது அவர்களது சுவாசத்திற்கு நல்லது.

About The Author

Number of Entries : 53

Leave a Comment

© 2011 Powered By Wordpress, Goodnews Theme By Momizat Team

Scroll to top