pichaikaran story

தீக்குச்சியும் சிறுமியும் – மொழிபெயர்ப்பு சிறுகதை –

கதைகள்

மொழிபெயர்ப்பு சிறுகதை

தீக்குச்சியும் சிறுமியும் –
ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் ( டென்மார்க் )  

 தமிழில் – பிச்சைக்காரன்

தாங்கமுடியாத அளவுக்கு மிகக் கடுமையான குளிர் மட்டுமல்ல, பனிப் பொழிவும் இருந்த காரிருள் நேரம். அந்த ஆண்டின் கடைசி மாலைப் பொழுது அது. அந்த இரவு நேரத்தில், தாங்க முடியா குளிரையும் பொருட்படுத்தாமல் ஓர் ஏழைச் சிறுமி நடந்து செல்கிறாள். தலையிலோ, காலிலோ எதுவும் அணிந்திருக்கவில்லை. அவள் வீட்டை விட்டு கிளம்பும்போது செருப்பு அணிந்திருந்தாள் என்பது உண்மைதான். ஆனால் என்ன பயன்?

pichaikaran story
தீக்குச்சியும் சிறுமியும்

அவளுடைய கால்களின் அளவைக் காட்டிலும் மிகப்பெரியது அந்தச் செருப்புகள். அவளது அம்மா அணிந்திருந்தவை. அந்த செருப்புகளில் ஒன்று  வரும் வழியில் காலைவிட்டு விலகி பள்ளத்தாக்கில் விழுந்துவிட்டது. இன்னொரு செருப்பை ஒரு தெருப்பொறுக்கி எடுத்துக்கொண்டு ஓடுவதைப் பார்த்தாள். அந்த ஒரு கால் செருப்பு அவனுக்கு எப்பொழுதாவது பயன்படும் என அவள் நினைத்திருக்கலாம். ஆகவே, அவனிடமிருந்து பிடுங்க மனமில்லை.
வேறு வழியில்லை!  தன் பிஞ்சுப் பாதங்களை தரையில் அழுத்தியபடியே  அவள் நடக்க வேண்டியதாயிற்று. வெற்றுப் பாதங்களுடன் நடந்து நடந்து, சிவந்து போய், பனியால் நீலம் பூத்துப்போய் இருந்தன அந்த பாதங்கள். அவளின் ஆடை மடிப்புக்குள் நிறைய தீப்பெட்டிகள் இருந்தன. கைகளிலும் கொஞ்சம் இருந்தன.
அந்த நாள் முழுக்க அவளுக்கு யாரும் எதுவும் வாங்கித்தரவில்லை. அவளின் பசி போக்குவதற்கு எவரும் பத்து பைசாக்கூட கொடுக்கவும் இல்லை. பசியாலும் குளிராலும் நடுங்கியபடியே நடந்து கொண்டிருந்த அந்த காட்சி, ஒரு சோக ஓவியம் போல இருந்தது. சின்னஞ்சிறுமியின் அவல சித்திரம் என்றுகூட சொல்லலாம்.
கருநிற அருவி கொட்டுவது போலிருந்த அவளின் நீளமான கூந்தலில் பனி படர்ந்திருக்க, வெள்ளி நிறத்தில் விண்மீன் கூட்டமொன்று அவள் கழுத்தைச் சுற்றிலும் அழகாக சுருண்டிருந்ததுபோல் இருந்தது. ஆனால், அவள் அதைப்பற்றியெல்லாம் யோசிக்கவில்லை. அவள் நடந்து வரும் தெருவின் அனைத்து ஜன்னல்களிலும் மெழுகுவர்த்திகள் ஒளி விட்டன. சில வீடுகளிலிருந்து நறுமண சமையலுக்கான வாசம் வீசியது. ‘‘ஓ.. நாளை புத்தாண்டு பிறக்கிறதே!’’. தனக்குத் தானே பேசிக்கொண்டாள்.
அந்தத் தெருவின் மூலையில் இரண்டு வீடுகள் இருந்தன. அதில் ஒரு வீடு கொஞ்சம் முன் தள்ளி இருந்தது. அவள் அந்த வீட்டின் முன் உடலை குறுக்கிக்கொண்டு அமர்ந்தாள். அமர்ந்தபடியே தன் கால்களை உடம்புக்கு பக்கத்தில் கொண்டு வந்து தன்னைத்தானே இறுக்கிக்கொண்டாலும், குளிர் அதிகரித்துக்கொண்டே சென்றது. வீட்டுக்குப் போக அவள் முயலவில்லை. காரணம் அவள் ஒரு தீப்பெட்டியைக்கூட விற்கவில்லை. காசு எதுவும் சம்பாதிக்கவில்லை. கண்டிப்பாக அவளது அப்பாவிடம் அடி கிடைக்கும். மேலும், வீட்டுக்குப் போனால் அங்கும் குளிரடிக்கத்தான் செய்யும். அவள் வீட்டின் நிலை அப்படித்தான்.
அவளது சின்னஞ்சிறு கைகள் குளிரைத் தாங்கமுடியால் கிட்டத்தட்ட உணர்விழந்து போய் விட்டன. ஒரே ஒரு தீக்குச்சி அவளுக்கு மிகப்பெரிய ஆறுதலை இப்போது வழங்கக்கூடும். அந்த பொதியில் இருந்து ஒரே ஒரு தீக்குச்சியை எடுத்து பற்ற வைத்து விரல்களை சூடு செய்தால் போதும். ஒரு தீக்குச்சியை எடுத்தாள். பற்ற வைத்தாள். ஸ்க்க்க்க்.. என்ற மெல்லிய சத்தத்துடன் அது எரிய தொடங்கியது. கதகதப்பாகவும் பளிச் என்ற ஒளியுடனும் ஒரு மெழுகுவர்த்திபோல அது எரியத் தொடங்கியது. தன் கரங்களை அந்த தீயின் ஒளிவட்டத்தின் மீது காட்டினாள் . அது அற்புதமான சுடர்.

 

இப்போது, அவளுக்கு ஒரு பெரிய அடுப்பின் முன் தான் அமர்ந்திருப்பது போல தோன்றியது. பித்தளை அடிப்பாகமும், பித்தளை அலங்காரத்துடன் கூடிய மேல் பாகமும் கொண்ட ஒரு பெரிய இரும்பு அடுப்பின் முன்னால் இருப்பதாக நிஜமாகவே தோன்றியது. மிக அழகாக நெருப்பு சுடர் விட்டு எரிந்து, இதமான கதகதப்பை வழங்கியது. தன் பாதங்களையும் அதன் மீது வைத்து சூடாக்கினாள். ஆனால், திடீரென அந்த தீ அணைந்து விட்டது. அந்த அடுப்பும் மறைந்து விட்டது. எரிந்து போன தீக்குச்சியுடன் அவள் அமர்ந்திருந்தாள்.
இப்போது, இன்னொரு தீக்குச்சியை பற்ற வைத்தாள். அது பளிச்சிட்டு எரியத் தொடங்கியது. அந்த ஒளி சுவர் மீது பட்டதும் அந்த சுவர் மெல்லிய திரைச்சீலை போல மாறி உள்ளே இருப்பவை தெரிய ஆரம்பித்தன. மேஜையில் பனி போன்ற வெண்ணிற மேசை விரிப்பு விரிக்கப்பட்டு இருந்தது. அதன் மீது பீங்கான் தட்டுகளும், சாப்பிடத் தயாராக உணவு வகைகளும் இருந்தன.  நாவூறும் சுவையுடன் வாத்து இறைச்சி. அதன் மார்பில் கத்தியும் முள் கரண்டியும் சொருகப்பட்டு இருந்தன. அவள் அதை பார்த்துக்கொண்டிருந்தபோதே தீக்குச்சி அணைந்து விட்டது. அனைத்து காட்சிகளும் மறைந்து விட்டன.  குளிர்ந்துபோன கடினமான சுவரைத்தவிர எதுவும் இப்போது இல்லை. அடுத்த தீக்குச்சியை பற்ற வைத்தாள். இப்போது அவள் உலகத்திலேயே மிக அழகான ஒரு கிறிஸ்துமஸ் மரத்தடியில் அமர்ந்திருந்தாள். அந்த பணக்கார வீட்டில் பார்த்த மரத்தை விட இது மிகப்பெரிது. அலங்காரமிக்கது.

 
அந்த கிறிஸ்துமஸ் மரத்தின் பச்சைக்கிளைகளில் ஆயிரக்கணக்கான விளக்குகள் ஒளி விட்டன. வண்ணமிகு ஓவியங்கள் கடை ஜன்னல்களில் அவள் ஏற்கெனவே பார்த்திருந்ததை போன்றே காணப்பட்டன. தீக்குச்சி அணைந்ததும், அவற்றைப் பிடிக்க அவள் கைகளை நீட்டினாள். அந்த மரத்தின் ஒளி உயர உயர சென்று எங்கோ நட்சத்திரமாக மாறி  மறைந்தது. ஒரு நட்சத்திரம் தீம்பிழம்பாக கீழே விழுந்தது.
‘‘யாரோ இறந்து விட்டார்கள்போல’’ என்று நினைத்தாள்.  அவளை நேசித்த ஒரே மனுஷியான அவள் பாட்டி சொல்லி இருக்கிறாள். ‘‘நட்சத்திரம் விழுந்தால் யாரோ இறைவனிடம் செல்கிறார்கள்’’. அந்த பாட்டி இப்போது இல்லை.
இன்னொரு குச்சியை பற்ற வைத்தாள். மீண்டும் ஒளி. அந்த ஒளி வெள்ளத்தில் தன் பாட்டியை பார்த்தாள். மிக மிக ஒளி பொருந்தியும் பிரகாசமாகவும், அன்பின் உருவமாகவும் பாட்டியை பார்க்க முடிந்தது.
‘‘பாட்டி’’ என்று கதறுகிறாள். ‘‘என்னையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள். தீக்குச்சி அணைந்ததும் நீங்களும் போய் விடுவீர்கள். அடுப்புபோல, விருந்து போல, கிறிஸ்துமஸ் மரம் போல மறைந்து விடாதீர்கள்’’  என்று சொல்லிக்கொண்டே அனைத்து தீக்குச்சிகளையும் பற்ற வைத்தாள்.  பாட்டி மறைந்து விடக்கூடாது என தன் பக்கத்திலேயே வைத்துக்கொண்டாள்.  மதிய வேளையை விட அதிக பிரகாசத்துடன் தீக்குச்சிகள் எரிந்தன. பாட்டியை இதற்கு முன் இவ்வளவு அழகாக உயரமாக அவள் பார்த்ததே இல்லை.
பாட்டி சிறுமியை தன் கரங்களில் ஏந்திக்கொண்டாள். இருவரின் மகிழ்ச்சியும் எல்லைகள் இல்லாமல் சிறகடித்தது. உயர உயர சென்றனர். அங்கே குளிரோ பசியோ சோகமோ இல்லை.அவர்கள் கடவுளுடன் இருந்தனர்.
அந்த மூலை வீட்டின் முன்பாக, அதிகாலை குளிரில், அந்த ஏழைச் சிறுமி ரோஜா நிற கன்னங்களுடன், இதழ்களில் சிரிப்புடன் சுவரில் சாய்ந்தபடியே இறந்து, பனியில் உறைந்து போய் இருந்தாள். இறந்த அவள் சடலத்தை சுற்றி எரிந்து போன தீக்குச்சிகள் கிடந்தன.
‘‘பாவம், குளிரில் இருந்து தப்பிக்க தீ மூட்டி இருக்கிறாள்’’ என மக்கள் பேசிக்கொண்டனர். அவள் கண்ட அற்புதமான காட்சிகள் குறித்து யாருக்கும் எதுவும் கொஞ்சம்கூட தெரியவில்லை. புத்தாண்டு கொண்டாட்டத்தில் தன் பாட்டியுடன் எவ்வளவு மகிழ்ச்சியான ஆனந்தமான ஓர் உலகத்தை அந்த சிறுமி தரிசித்தாள் என்பதை அங்குள்ளவர்கள் யாரும் கனவில்கூட யூகிக்க முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *