சந்தியா பெற்றெடுத்த சரித்திரம் Reviewed by Momizat on . சந்தியா பெற்றெடுத்த சரித்திரம்   பாபநாசம் குறள் பித்தன் [caption id="attachment_330" align="alignnone" width="660"] jayalalitha[/caption] செயலில் நேர்மையும சந்தியா பெற்றெடுத்த சரித்திரம்   பாபநாசம் குறள் பித்தன் [caption id="attachment_330" align="alignnone" width="660"] jayalalitha[/caption] செயலில் நேர்மையும Rating: 0
You Are Here: Home » அரசியல் » சந்தியா பெற்றெடுத்த சரித்திரம்

சந்தியா பெற்றெடுத்த சரித்திரம்

சந்தியா பெற்றெடுத்த சரித்திரம்

 

பாபநாசம் குறள் பித்தன்

selvi jayalalitha

jayalalitha

செயலில் நேர்மையும், அரசியலில் துணிவும், பன் மொழி அறிவும், நிர்வாகத்தில் ஆளுமையும் கொண்டவர் நமது முதல்வர் செல்வி ஜெயலலிதா.  மக்கள் நலனுக்காக அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளும், செய்து முடித்த திட்டங்களும் கணக்கில் அடங்காதவை.

அருவி நீரில் பாசி பிடித்ததில்லை.. அதுபோல் செல்வி ஜெயலலிதா அவர்களின்  மக்கள் தொண்டில் மாசுபட்டதில்லை!  ஆதரவற்ற குழந்தைகளுக்கும் இதயத்தில் தொட்டில் கட்டிய தும்பை மலர் தாய் அவர். குழந்தைகளை நிலத்தின் நித்திலங்களாகக் கருதியவர். நிகரற்ற பூக்களென நினைத்தவர்.  அதனால்தான் ஆதரவற்ற குழந்தைகளை அன்பால் அணைத்தெடுத்து பூந்தொட்டில் அமைத்து, தொட்டில் குழந்தைகள் திட்டம் தந்தார்.

ஆற்று நீர் முன்னோக்கி ஓடுவதுபோல், ஏழைகளின் துயர் துடைக்க அல்லும், பகலும் ஓடியவர். ஒலியையும் ஒளியையும் மண்ணில் குழி தோண்டி புதைத்து வைக்க முடியாது! அதுபோல் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் உழைப்பையும் புகழையும் யாராலும் மறைத்து வைக்க முடியாது. அழித்துவிட முடியாது.

papanasam kuralpithan

papanasam kuralpithan

தமிழகம் எனும் தேரை, வளர்ச்சிப் பாதையில் வடம் பிடித்து இழுத்துச் சென்றவர். ஈயும், வண்டும் மழையில் பறக்காது, மயில் தன் தோகையை வெயிலில் விரிக்காது. ஆனால், எல்லாக் காலங்களிலும் தன் சுயம் மறந்து மக்கள் பணியாற்றியவர் நம் முதல்வர் அம்மா.

பிறரிடம் நான் ஆறுதல் தேடுதலைவிட, பிறர் என்னைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதைவிட, பிறரை நான் புரிந்து கொள்ளவும், அடுத்தவர்கள் மீது அன்பைப் பொழிந்திடவும், பிறர் என்னில் அன்பு செய்திடவும் நீர் அருள் தருவீராக! இப்படி உலக மக்களுக்காக இறைவனிடம் இதயம் கசிய வேண்டியவர்.

பள்ளம் நோக்கி செல்வதுதான் நீரின் தன்மை! ஏழைகளின் இல்லம் நோக்கி செல்வதுதான்அம்மாவின் மேன்மை! இல்லம் இல்லார், உறவு இழந்தோர் அனைவருக்கும் நிழலாய் இருந்து காத்த தெய்வம்.

எல்லோரும் ஒவ்வொருவருக்காக, ஒவ்வொருவரும் எல்லோருக்குமாக வாழ வேண்டும் என்கிற உயரிய சிந்தனையோடு வாழ்ந்தவர். குன்றாத ஊக்கம், ஓயாத உழைப்பு, முனைமுறியா முயற்சி, நங்கூரமாய் நம்பிக்கை, நாளும் பொழுதும் ஏழை, எளியோர் உயர் வாழ்வு பற்றிய சிந்தனை! இதுதான் அவருடைய இதயத்தின் துடிப்பு, இருப்பு! பொன்னைத் துறந்தார், மணியைத் துறந்தார், தனக்கென்றெதுவும் தனதாக்க மறந்தார்! நமக்கெல்லாம் அம்மாவாக உயர்ந்தார்.

அவருக்கு நடனம் தெரியும். நயமான இசையும் தெரியும். கட்டுரையும் எழுதுவார். தொடர் கதையும் எழுதுவார். நாடகமும், திரையும் அறிந்தவர். இத்தோடு நல்லாட்சி புரியவும் தெரிந்தவர்.  மற்றவர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் இழைக்கத் தெரியாதவர். தன்னை நம்பியவர்களை நடுவழியே விடத் தெரியாதர்.

எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, தடம் மாறிப் போனது கட்சி! ஆம்.. அந்த வேளையில் எதிரிகள் அணி திரண்டு, “அரசியலில் தாக்குப் பிடிக்க முடியுமா, அந்த அம்மையாரால்?” என்று ஏளனம் செய்தோர் ஏராளம்! ஏராளம்! ஏளனம் செய்தோர் எதிர்த்து நின்றோர் அத்தனை பேரும் மொத்தமாய் முடங்கிப் போக, இரட்டை இலையை மீட்டு, இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக அ.தி.மு.கவை வளர்த்தெடுத்தவர்.

ஏழைகளின் வீடுகள்தோறும் தாயாய் இருந்து கவனித்தவர். மூத்த மக்கள் நல்வாழ்வை மனதில் கொண்டு அவர்கள் பேருந்தில் சென்றுவர இலவசப் பயணச் சீட்டை தந்துதவி அவர்களின் வாழ்க்கைப் பயணம் செம்மையாய் அமையச் செய்தவர்.

காவிரிப் பிரச்சினைக்காக சென்னை கடற்கரையில் தனித்தே உண்ணா நோன்பிருந்த தனிப்பெரும் தலைவி அவர். மூன்றாவது முறையாக முதல்வராக ஆனபோது, திரை உலகமே திரண்டு வந்து அவருக்குப் பாராட்டு விழா நடத்த அனுமதி கேட்டபோது, அன்போடு மறுத்தவர்.

அதிகாலை அதிரிச்சியாய் தமிழகத்தை சுனாமி தாக்கியபோது, அந்த ஆழிப் பேரலையில் பல உயிர்கள் மாண்டு போயின. மறைந்தும் போயின! உறவுகளைத் துறந்தோர் உடமைகளை இழந்தோர் கண்ணீர் வழியக் கலங்கி நின்றபோது, அம்மாவின் கருணைக் கரம் நீண்டது. தமிழகத்தின் தேவையை தமிழகமே நிறைவேற்றும் என்கிற முனைப்போடு, மத்திய அரசின் நிதி உதவியை வேண்டாம் என அன்போடு மறுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அத்தனை உதவிகளையும் துரித கதியில் கச்சிதமாக நிறைவேற்றிக் காட்டியவர்.

800கி.மீ தூரம் ஆழிப்பேரலையின் பேயாட்டாம் அழிவு சேதம் ஏராளம்! ஆயிரம் கி.மீ தூரம் வரை நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய சூழல். சேதமடைந்த படகுகளை, மீன்பிடி வலைகளை, மோட்டார் இயந்திரங்களை பழுது பார்க்க நிதி உதவி. இதனால் பயன்பெற்ற மீனவர்கள் பல்லாயிரம் பேர். எப்படிப் பிழைப்பது? யார் உதவியால் வறுமையைப் போக்குவது? என்று நலிந்தோர் ஏங்கித் தவித்த வேளையில் அனைத்துத் தரப்பினருக்கும் பல்லாயிரம் தையல் இயந்திரங்கள்!

மற்றவர்களுக்கு தீங்கு தரக்கூடிய காரியங்களையோ, பின்னால் வெட்கப்படத் தக்க செயல்களையோ ஒருபோதும் செய்யாதவர். இதற்கு மாறாக சமூகம் புகழும்படியான செயல்களை மட்டுமே செய்தவர். இதுதான் நல்லொழுக்கத்தின் சாரம்!  எந்த செயலும் பிறருக்கு பயன்பெறும் வகையில் கற்ற அறிவோடு கணக்காய் சிந்தித்து, கனிந்த மனத்தோடு வெற்றிக் கொடியை விரைந்து பற்றியவர். தீண்டாமை ஒழிப்பிற்கென்றே காவல்துறையில் தனிப்பிரிவை ஏற்படுத்தியவர். வன்கொடுமை தடுப்புச் சட்டம் என்று கொண்டு வந்தவர். பெண்களின் கல்விக்கு ஊக்கமளிக்கும் பல்வேறு நலத்திட்டங்கள், ஊக்கத் தொகை வழங்கியவர்.

உலகத் தமிழ் மாநாட்டை எழிலாய் எடுத்ததோடு, முதுபெரும் தமிழறிஞர்களின் மாத ஓய்வூதியத் தொகையை உயர்த்தியவர்! தமிழ்ப் பதிப்பாளர்களுக்கு அரசு நூலகங்களுக்கு நூல்களை விநியோகிக்க நிதி ஒதுக்கீடு செய்தவர். ஆரம்பப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும், நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும் ஆக்கியதோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளையும் அமைத்தவர்!

உதட்டில் உறவாடி, நெஞ்சில் நஞ்சை வைத்து, மறைமுகமாய் இருந்து முதுகில் குத்தியவர்களையும், மனிதாபிமானத்தோடு மன்னித்த மகான் நமது முதல்வர் செல்வி ஜெயலலிதா.  அதே நேரத்தில், உற்றார், உறவினர், அமைச்சர், சபாநாயகர் அதிகார வர்க்கத்தினர் என எவர் தவறு செய்தாலும், தவறுக்கேற்ற தண்டனையை தயவு தாட்சணையின்றி உடனே வழங்கிடும் நீதி தேவதை அவர்.

உலக மக்கள் அனைவருக்கும் நீரே ஆதாரம் என்பதை உணர்ந்ததால் வீடுகள் தோறும் மழைநீர் சேகரிப்பைக் கொண்டு வந்தவர். அதன் வழியே நிலத்தடி நீரைக் காத்தவர்! இந்தத் தொலைநோக்குப் பார்வையால் உலகோர்க்கிடையே வெளிச்சப்பட்டவர்.  “உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோர்” என்பதை அறிந்ததினால் விவசாய தொழிலாளர்கள், சிறு விவசாயிகள் குடும்பத்தினர் அனைவருக்கும் இலவசத் திருமணம், மகப்பேறு நிதி உதவி, தரமான கல்வி ஒய்வூதியம் போன்ற நல்திட்டங்களைக் கொண்டு வந்து வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தியவர்.

மனித வாழ்க்கையை நமக்குத் தந்தவர்களும் அதை மணம் பெறச் செய்பவர்களும் பெண்களே என்பதை அறிந்து, மூன்று இலட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்களில் ஐம்பது இலட்சம் பெண்கள் பயன் பெறும் வகையில், ரூபாய் 889 கோடியிலிருந்து ரூபாய் 1563 கோடியாக கடனுதவித் தொகையை உயர்த்தியவர். குடும்ப அட்டைதாரருக்கு மாதந்தோறும் இருபது கிலோ அரிசியும் ”அன்னயோஜனா” திட்டத்தின் மூலம் 35 கிலோ அரிசியும் இலவசமாக வழங்க வழி செய்த அன்னை.

பலமுள்ளவர்க்குள்ள உரிமைகளை எல்லாம் பலமில்லாதர்வளும் பெற வேண்டும். அதுதானே உண்மையான ஜனநாயகம்! பெண்களுக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீட்டை அமுல்படுத்த வேண்டுமென்று தமிழக சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் உரிமைக் குரல் கொடுக்க வைத்தவர். ஐனநாயகம் காத்தவர். தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்ட திட்டங்களைத் திறம்பட நிறைவேற்றுவதற்கு, அரசியல் வரலாற்றிலேயே முதன் முறையாக சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத்துறை எனும் புதிய அமைச்சகம் உருவாக்கப்பட்டதும் அம்மாவின் பொற்கால ஆட்சியில்தான்.

பள்ளி செல்லும் மாணவர்க்கு இலவச சைக்கிள் மற்றும் சீருடைகள், அரசு பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு மருத்துவ விடுப்பாக ஆறு மாத காலம், ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நான்கு கிராம் தங்கம், திருமண செலவிற்காக இருபத்தைந்தாயிரம் ரூபாய், குடும்ப அட்டைதாரர்களுக்கு  இலவச மின்விசிறி மிக்ஸி, கிரைண்டர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், ஆதாரவற்ற மற்றும் விதவைப் பெண்களின் மாத உதவித் தொகையாக வழங்கப்பட்டு வந்த ஐந்நூறு ரூபாயை ஆயிரம் ரூபாயாக உயர்த்திய அன்புத் தாய்.

இவை மட்டுமே! நாட்டில் சுகாதாரத்தைக் காக்கும் பொருட்டு இந்தியாவிலேயே முதன் முதலாக பத்து இலட்சம் பாமரப் பெண்களுக்கு இலவச நாப்கின் திட்டத்தை கொண்டு வந்தவர்.  ஏழை, எளியோரின் வாழ்வு தழைக்க  விலையில்லா கறவை மாடுகள், விலையில்லா ஆடுகள்,  பிளஸ் டூ பயிலும் மாணவர்களுக்கு இலவச மடிக் கணினி கொடுத்தவர். கடலில் மீன் பிடிக்க தடை செய்யப்படும் வேளையில் வழங்கப்படும் நிவாரணத் தொகையை ரூபாய் ஆயிரத்திலிருந்து ரூபாய் இரண்டாயிரமாக உயர்த்தியவர்.

தமிழகத்தை தானே புயல் தாக்கிய வேளையில் போர்க்கால நடவடிக்கையாக 1640 கோடி ரூபாயை உடனடியாக ஒரே நேரத்தில் ஒதுக்கி பாதிக்கப்பட்டவர்களின் துயர் துடைத்தவர். அது மட்டுமா? நூறு கோடி ரூபாய் செலவில் பாதிக்கப்பட்டோருக்கு ஒரு இலட்சம் வீடுகள் கட்டப்படும் என்று உறுதியளித்து செயல்படுத்தியவர்.

நூற்றுபத்து கோடியே ஒன்பது இலட்சம் ரூபாய் செலவில் “முதல்மைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் வழியே பயன் பெற்றவர்களின் எண்ணிக்கை 42848 பேர்! பல் மருத்துவக் கல்லூரியின் மேம்பாட்டிற்கு பத்து கோடி நிதி ஒதுக்கீடு செய்தவர். புதிய தலைமை செயலகக் கட்டடத்தை சிறப்பு பல்நோக்கு மருத்துவ மனையாக சர்வதேச தரத்துடன் உருவாக்க உத்தரவிட்டவர்.

நில அபகரிப்பு மற்றும் ஆக்கிரமிப்பாளர்கள் மீதான வழக்கை விசாரிக்க முதன் முதலில் அதற்கென்று தனிப்பிரிவை ஏற்படுத்தியவர். இதற்கென்று பத்து கோடியே எழுபத்தாறு இலட்சம் மதிப்பீட்டில் சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன! இதில் பெறப்பட்ட 34703 புகர் மனுக்கள் மூலம் 1200 பேர் கைது செய்யப்பட்டு 758 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது வரலாற்றுக்கு சொந்தக்காரர்.

‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்று பாடிய கருணையின் வடிவம் வள்ளலாரின் வழியிலேயே ஏழை எளியோர் பசித் தீயில் எரியாமலிருக்க, மலிவு விலையில் இட்லி ஒரு ரூபாய், சாம்பார் சாதம் ஐந்து ரூபாய், தயிர் சாதம் மூன்று ரூபாய், என்று மாநகராட்சியின் வழியே வழங்கச் செய்து எளியோர் பசியை தாயன்போடு போக்கிய வள்ளல். 2015 டிசம்பர் மாதம் பெய்த பெரு மழையில் உருவான மழை வெள்ளத்தில் தமிழகம் மிதந்தபோது, குடும்பம் குடும்பமாக அழுது புரண்டு தவித்தபோது, கருணைக் கரம் நீட்டி, உணவுப் பொருள்களும் ஆடைகளும்,  படுக்கப் பாயும் நிவாரணப் பொருள்களும் கொடுத்து, வீடு இழந்தோருக்கும் நடைபாதைக் கடை இழந்தோருக்கும் பொருள் உதவி செய்தவர்.

“பெண்கள், இளம் வயதில் தகப்பனாரைச் சார்ந்திருப்பார்கள். பெரியவர்களான பிறகு கணவரைச் சார்ந்திருப்பார்கள். வயதான பிறகு பிள்ளைகளைச் சார்ந்திருப்பார்கள். ஆனால், என்னைப் போன்ற சில பெண்மணிகளும் இருக்கிறார்கள். நான் யாரையும் சார்ந்திருக்கக்கூடிய வாய்ப்பு எனக்கு வாழ்க்கையில் அமையவில்லை. நல்லது என்றாலும், கெட்டது என்றாலும், எனக்கு நானே தான் முடிவுகளை எடுத்துக் கொண்டு, வாழ்க்கையில் எது வந்தாலும் நனே தனித்து நின்று, சந்தித்துக் கொண்டு இப்படியே நான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். இது என்னுடைய தனித்திறமை என்று நான் சொல்ல மாட்டேன் இது விதி… தலையெழுத்து..” என்று மனம் திறந்து வெளிப்படையாகச் சொன்னவர் நம் முதல்வர் செல்வி ஜெயலலிதா. அவருடைய  வாழ்க்கை ஒரு  மகோன்னத சரித்திரம்.

About The Author

Number of Entries : 53

Leave a Comment

© 2011 Powered By Wordpress, Goodnews Theme By Momizat Team

Scroll to top