எதிலிருந்து படிப்பது? – மனுஷ்யபுத்திரன் Reviewed by Momizat on . எதிலிருந்து படிப்பது? மனுஷ்யபுத்திரன் ஒரு முறை புத்தகக் கண்காட்சி ஒன்றில் ஏராளமான இளைஞர்களை சந்தித்தேன். இவர்களில் கணிசமானோர் முதன்முதலாக தங்களது பாடப்புத்தகம் எதிலிருந்து படிப்பது? மனுஷ்யபுத்திரன் ஒரு முறை புத்தகக் கண்காட்சி ஒன்றில் ஏராளமான இளைஞர்களை சந்தித்தேன். இவர்களில் கணிசமானோர் முதன்முதலாக தங்களது பாடப்புத்தகம் Rating: 0
You Are Here: Home » கட்டுரைகள் » எதிலிருந்து படிப்பது? – மனுஷ்யபுத்திரன்

எதிலிருந்து படிப்பது? – மனுஷ்யபுத்திரன்

எதிலிருந்து படிப்பது? – மனுஷ்யபுத்திரன்

எதிலிருந்து படிப்பது?

மனுஷ்யபுத்திரன்

ஒரு முறை புத்தகக் கண்காட்சி ஒன்றில் ஏராளமான இளைஞர்களை சந்தித்தேன். இவர்களில் கணிசமானோர் முதன்முதலாக தங்களது பாடப்புத்தகம் அல்லது தொழிற்சார் படிப்புகளுக்கு அப்பால் ஏதாவது புத்தகம் வாசிக்க வேண்டும் என்கிற ஆவலில் கண்காட்சிக்கு வந்தவர்கள். புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு ஊடகங்கள் செய்த பிரச்சாரத்தினாலும், புத்தகங்கள் ஆசிரியர்களை முன்வைத்து சமூக வலைத்தளங்களில் நடந்த சர்ச்சைகளாலும், ஏதாவது ஒரு புத்தகத்தை வாசித்துவிட வேண்டும் என்கிற ஆவலில் உள்ளே வந்து, எங்கெங்கும் குவிந்திருந்த பல்லாயிரக்கணக்கான புத்தகங்களுக்கு நடுவே காட்டில் ஒரு மான் போல அவர்கள் மகிழ்ச்சியுடன் நின்றுகொண்டிருந்தார்கள்.

manushyaputhiran

manushyaputhiran

அவர்களில் பலர் என்னை அணுகி திரும்பத் திரும்பக் கேட்ட கேள்வி ஒன்றே ஒன்றுதான். “சார், நான் முதன்முதலாக புத்தகம் படிக்கப் போகிறேன். என்ன புத்தகத்தை படிக்கலாம் என்று யோசனை சொல்லுங்கள்.’’

 
இப்படி ஒரு கேள்வியை நான் என் வாழ்நாளில் ஒருமுறைகூட யாரிடமும் கேட்டதில்லை. வாசிப்பு என்பது சிறு வயது முதல் ஒருவர் சுயமாக உருவாக்கிக் கொள்கிற பழக்கம். யாராவது சினிமா பார்க்கவோ, டி.வி. பார்க்கவோ முறையாகச் சொல்லிக் கொடுக்கிறார்களா என்ன? ஆனால், புத்தகம் படிப்பதை மட்டும் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்கிற பிரச்சாரம் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. எழுத்தறிவு பெற்ற ஒரு குழந்தை எப்படி ஒரு சுவரொட்டியை வாசிக்கிறதோ, அப்படித்தான் புத்தகங்களையும் இயல்பாக வாசிக்க வேண்டும். அது மிகவும் அந்தரங்கமான ஒரு செயல். மேலும், அந்தந்த வயதில் அந்தந்த பருவத்திற்கென்ற படிப்புகள் உண்டு.
நான் வீட்டிற்கு வரும் வாரப்பத்திரிகைகளில் காமிக்ஸ் தொடர்களை ரகசியமாகப் படிக்கத் தொடங்கினேன். பிறகு மாயாஜாலக் கதைகள், பேய்க் கதைகள், துப்பறியும் கதைகள், குடும்பக் கதைகள், கவிதைகள், மொழிபெயர்ப்புகள், அரசியல் சமூக வரலாறுகள், தத்துவ நூல்கள், இலக்கிய நூல்கள் என ஒவ்வொரு பருவத்திலும் காலத்திலும் வாசிப்பு தன்னியல்பாக நகர்ந்துகொண்டே இருந்தது. இதையெல்லாம் படியுங்கள் என யாரும் கூப்பிட்டு சொல்லவில்லை. ஒவ்வொரு வயதிலும் மனதிலிருந்த கேள்விகளுக்கும் சஞ்சலங்களுக்கும் பதில் தேடியே நான் புத்தகங்களைத் தேடிப் போனேன். பசித்த மனிதன் உணவைத் தேடிச் செல்வது போன்றதுதான் அது.

 
இப்போது இளைஞர்கள் திடீரென வந்து முதல் புத்தகமாக எதைப் படிக்கலாம் என்று கேட்கும்போது, நான் உண்மையிலேயே குழம்பிவிடுகிறேன். இந்த உலகில் அப்படிப் பரிந்துரைக்கக்கூடிய ஒரே புத்தகம் அரிச்சுவடி மட்டுமே. ஆனால், சுயமான வாசிப்பு என்ற ஒன்றிலிருந்து முற்றிலுமாக விலக்கப்பட்ட ஒரு தலைமுறை நம் கண் முன்னால் உருவாகி நிற்கிறது.

 

நான் முதல் புத்தகமாக எதைப் படிக்கலாம் என்று கேட்கும் இளைஞர்களிடம் ஒரு கேள்வியை பதிலுக்கு கேட்பேன். உங்களுக்கு எந்தத் துறையில் ஆர்வம் இருக்கிறது என்று? பல இளைஞர்கள் இந்தக் கேள்விக்கே பதில் தெரியாமல் திணறுவதைப் பார்த்தேன். தாங்கள் செய்கிற தொழிலுக்கு அப்பால் யாருக்கும் சமூகம் சார்ந்தோ, கலாச்சாரம் சார்ந்தோ, தங்களது சொந்த அகத்தேவைகள் சார்ந்தோ என்ன ஈடுபாடு இருக்கிறது என்றுகூடத் தெரியவில்லை. பலருக்கு தாங்கள் பணிசெய்யும் துறைசார்ந்துகூட புதிய விஷயங்களைப் படித்தறிவதில் ஆர்வம் இல்லை.
இவ்வாறு எல்லாவிதத்திலும் வாசிப்பிலிருந்து ஒரு தலைமுறை துண்டிக்கப்படுவதன் மூலமாக ஏற்படும் இழப்பு என்ன? ஒரு சமூகத்தின் ஆதாரமான மனித ஆற்றல் மிகவும் பலவீனமடைந்து வருகிறது. சமூகமும் கலாச்சாரமும் முன்னோக்கிச் செல்வதற்கான அறிவுத்தளம் நசுக்கப்பட்டு விடுகிறது. இதற்கான முழு பலி நமது பெற்றோர்களையும் கல்வியமைப்புகளையுமே சாரும். குழந்தைகளின் பன்முக வாசிப்பிலிருந்து மொழி, கலாச்சாரம், பண்பாடு, கற்பனைத்திறன் சார்ந்த வாசிப்பிலிருந்து அவர்களை முற்றாக துண்டித்ததன் வழியாக ஒரு மூடத்தனமான தலைமுறையையே உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
திடீரென ஒரு நாள் கண்விழித்து நான் எங்கிருந்து தொடங்குவது என்று கேட்டால், அதற்கு எப்படி பதில் அளிப்பது? வாசிப்பதற்கு முதலாவதாக சொற்கள் வேண்டும். இரண்டாவதாக மனப்பழக்கம் வேண்டும். மூன்றாவதாக நேரம் வேண்டும். இது மூன்றுமே பெரும்பாலானோருக்கு இல்லை. தமிழில் இரண்டாயிரம் வருடங்களாக எழுதப்பட்ட பல்லாயிரம் புத்தகங்களை ஒரு தலைமுறை கழித்து யார் படிக்கப் போகிறார்கள் என்கிற கேள்வி மனதை வாட்டுகிறது. உண்மையில் நாம் புத்தகங்களின் சொற்களில¢ மிகப்பெரிய மயானத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம் என்றுதான் தோன்றுகிறது.
புத்தகக் கண்காட்சிக்கு புத்தகங்களைக் கொண்டுவருவதைவிட, புதிதாக வாசகர்களை உருவாக்குவதுதான் நம் முன் இருக்கும் கடினமான சவால்.

About The Author

Number of Entries : 53

Leave a Comment

© 2011 Powered By Wordpress, Goodnews Theme By Momizat Team

Scroll to top