புதையல் புத்தகம் Reviewed by Momizat on . புதையல் புத்தகம் வெல்லும் தமிழ் ரசிகமணி டி.கே.சி. உலகத்தில் வேகமாக மாறிவருவதில்  முதலிடம் பெறுவது மொழி. எவ்வளவு பழமையான மொழியாக இருந்தாலும், ஒரு பத்தாண்டிற்குள் புதையல் புத்தகம் வெல்லும் தமிழ் ரசிகமணி டி.கே.சி. உலகத்தில் வேகமாக மாறிவருவதில்  முதலிடம் பெறுவது மொழி. எவ்வளவு பழமையான மொழியாக இருந்தாலும், ஒரு பத்தாண்டிற்குள் Rating: 0
You Are Here: Home » இலக்கியம் » புதையல் புத்தகம்

புதையல் புத்தகம்

புதையல் புத்தகம்

வெல்லும் தமிழ் ரசிகமணி டி.கே.சி.

உலகத்தில் வேகமாக மாறிவருவதில்  முதலிடம் பெறுவது மொழி. எவ்வளவு பழமையான மொழியாக இருந்தாலும், ஒரு பத்தாண்டிற்குள் பேச்சுமொழியில் பல அன்னியமொழிச் சொற்கள் அதனுள் சேர்ந்து விடுகின்றன. அம் மொழிக்கே உரிய, அரிய சொற்கள் வழக்கொழிந்து விடுகின்றன. பேசும் மொழியின் ஒலியும் மாறி விடுகிறது. தொழில், வணிகம், சினிமா, தொலைக்காட்சி, பத்திரிகைகள் போன்றவையே இந்த மாற்றத்திற்குக் காரணம்.  முன்னர் எழுதப்பட்ட பல புத்தக்கங்கள் கருத்தால், சொல்லப் பயன்படுத்தப்பட்ட சொற்களால் பழையதாகி விடுகின்றன. படைப்பிலக்கியத்தில் என்றுதான் இல்லை. அறிவு பூர்வமாக எழுதப்படும் கட்டுரைகளிலும் இம் மாறுதல்கள் உள்ளன. ஏனெனில், அவர்கள் மூளையால் எழுதாமல் இதயத்தால் எழுதியிருக்கிறார்கள்.

tkc

rasikamani tkc

ரசிக்கும் படியாகவும், படித்து மகிழும்படியாகவும் இலக்கியக் கட்டுரைகள் எழுதியவர் ரசிகமணி டி.கே.சி என்று அழைக்கப்படும் தீர்த்தாரப்ப முதலியார் என்கிற களக்காடு சிதம்பர நாத முதலியார். இவர் 1881 ஆம் ஆண்டில் பிறந்தார். தமிழ், ஆங்கிலம் படித்தார். இலக்கியத்தின் மீது ஈடுபாடு கொண்டு ரசனை அடிப்படையில் கூட்டங்களில் பேசினார். கட்டுரைகள் எழுதினார். அவர் கட்டுரைகள் வழக்கமான தமிழ்க் கட்டுரைகள் அல்ல. ரசித்து அனுபவிக்கும் படியான கட்டுரைகள். அவற்றைத் தொகுத்து ‘இதய ஒலி’ என்ற பெயரில் 1941 ஆம் ஆண்டில் வெளியிட்டார். கவிதை என்பதோடு இணைந்து போகும் கட்டுரைகள், படைப்பு இலக்கியம் என்பதோடு ஒன்றாகிவிடுகிறது என்பதை எழுதியே நிலை நாட்டியவர் டி.கே.சி. ஆனால், பழைய உரையாசிரியர்கள், புலவர்கள் வழி வந்தவர் இல்லை அவர்.

sa. kanthasamy

sa. kanthasamy

கம்பராமாயணத்தில் அதிகமான ஈடுபாடு கொண்டவர். அறிவு என்பதால் ரசனை என்பதை அறிந்து அனுபவிக்க முடியும் என்பதை எழுதியே நிலைநாட்டிவர் டி.கே.சி. இவரின் சொல்லும், சொல்லப்படும் விதமும் சொல்லுக்குத் தனியான இனிமையும் அழுகும் கொடுத்திருக்கிறது. கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் பெரும் புலவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் எழுதிய உயராய்வு நூற்கள் எல்லாம் படிக்க முடியாமல் போய்விட்டன. ஏனெனில், அவர்களுக்கு விதவிதமான மொழி என்பது கைவரவே இல்லை. மொழியால்தான் மனித அறிவு சொல்லப்படுகிறது என்றாலும், அந்த மொழியே அறிவு இல்லை என்பதுதான்.

 
ரசிகமணி டி.கே.சியின் ‘இதய ஒலி’ கருத்தாலும் மொழியாலும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பது அவர் ஆளுமையின் வெளிப்பாடு. நவீன தமிழ் இலக்கியப்பரப்பில் அதுவும் உரைநடையில் தன்னை ஸ்தாபித்தவர். அது ஒரு கட்டுரையில்தான் வெளிப்படுகிறது என்பதில்லை. அவரின் ஒவ்வொரு கட்டுரையிலும் அடிநாதமாக இருக்கிறது. அவர் தன் அத்தையைப் பற்றி எழுதினாலும் சரி, கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளைப்பற்றி எழுதினாலும் சரி, நாம் கல்வி கற்ற முறையை எதிர்த்து எழுதினாலும் சரி, அதில் தோய்ந்து போய்விடுகிறார். அதே தோய்பை சங்கீதம், சாகித்யம் பற்றி எழுதி இருப்பதிலும் காணமுடிகிறது.

 
தமிழ் என்றால் இன்பம் என்றும், இசையென்றும் சொல்லப்படுவதை உரைநடையில் எழுதி மெய்ப்பித்து இருக்கிறார் டி.கே.சி. அது அவரின் சிறப்பு அம்சம். இது அவருக்கு இயல்பாக வந்திருக்கிறது. பெரும் புலவர்கள், உரையாசிரியர்கள் மீதெல்லாம் கடுங்கோபம் கொண்டிருக்கிறார் டி.கே.சி. அவர்களின் எழுத்துகள் புத்தி பூர்வமாக இருக்கிறதேயன்றி இதயத்தைத் தொடவில்லை என்கிறார். அதனை எழுதியும் நிலைநாட்டியிருக்கிறார்.
டி.கே.சிக்கு தமிழ்மொழி மீது, தமிழ்க் கவிதைகள் மீது அபரிமிதமான ஈடுபாடு இருக்கிறது. அதே அளவு ஆங்கில மொழி படிப்பின் மீது எதிர்ப்பும் இருக்கிறது. வாழ்க்கை என்பது எல்லாத் துறைகளிலும் மக்கள் முன்னேற்றம் அடைந்திருக்க வேண்டும் என்பது அவர் இலட்சியமாக இருக்கிறது. படிப்புக்கு அவர் எதிரியில்லை. ஆனால், ‘‘தாய்மொழியை தமிழில் உள்ள மேலான கவிதைகளைப் படித்து அனுபவிக்க முடியாதவர்களை, படிப்பும் கல்வியும் ஆற்றுப்படுத்த வேண்டும்’’ என்றார். கல்வியும் படிப்பும் மனிதர்களின் இதயத்தை நெகிழ வைத்து, நல்வாழ்வு வாழ வைப்பது என்று சொல்லவே ‘இதய ஒலி’யை எழுதியிருக்கிறார்.

 
‘‘நல்வாழ்க்கை என்பது உத்தியோகம், பணம், அதிகாரம் கொண்டது மட்டுமல்ல. அவற்றோடு கலையுள்ளம் கொண்டு, கவிதைகள் படித்துக்கொண்டு, நடனம் பார்த்துக்கொண்டு, இசை கேட்டுக்கொண்டு வாழ்வதும்தான். அது ஒரு காலம் சார்ந்த வாழ்க்கை இல்லை. எல்லா காலத்திலும், எல்லோரும் வாழ்கின்ற வாழ்க்கை, வாழ வேண்டிய வாழ்க்கை’’ என்று திரும்பத் திரும்பச் சொல்கிறார்.

 
கலையின்றி வாழ்க்கை இல்லை. கலையென்பதில் பழையதோ புதியதோ இல்லை. எத்தனை நவீன காலத்தில் வாழ்ந்தாலும் மனிதர்களின் மனம் என்பது கலை சார்ந்தே இருக்கிறது. எது அசலான கவிதை, அசலான இசை என்பதை மனிதர்கள் தங்களின் உள்ளுணர்வால் அறிந்து கொண்டு விடுகிறார்கள்.

 
கலைக்கு பெரிய விஷயம், சின்ன விஷ்யம் என்கிற பேதமெல்லாம் கிடையாது. அதற்கெல்லாம் மேலானது. ஆனால், கலை என்பது எந்த மொழியில் சொல்லப்படுகிறதோ, அந்த மொழியில்தான் பாகுபாடுகள் வருகின்றன. இந்தப் பாகுபாடு கவிதையை விட உரைநடையில் அதிகம். ஆனால், டி.கே.சி.யின் உரைநடை, கவிதைக்கு நெருக்கமாகச் சொல்லப்படும் அம்சத்தைக் கொண்டு போய் விடுகிறது. ஏனெனில், அவர் கவிமனம் சார்ந்தே ஒவ்வொன்றையும் எழுதி இருக்கிறார். அவர் கவிதைகள் எழுதவில்லை. ஆனால், உரைநடையை உயிர்த்துடிப்புடன் எழுதியிருக்கிறார். அதில் எழுதப்பட்ட காலம் என்பது தெரியவில்லை.

 
பழமையான மனிதர்களின் குணநலன்கள் பற்றி நவீன மனிதனுக்குச் சொல்கிறார். ‘இயற்கை தன் மடிக்குள் ஒளித்து வைத்திருக்கிற அதிசயங்களைக் கண்டு பிடிக்க முயல்வதிலும், கண்டு பிடிக்கிற திறத்திலும், கண்டு பிடித்தவுடன் உண்டாகும் ஆனந்தத்திலும், மனிதன் தனித்தே நிற்கிறான். இதோடு நிற்கவில்லை. அந்த ஆனந்தத்தை மற்ற மக்களுடன் கூடி அனுபவிப்பதிலும், தலைமுறை தலைமுறையாக மக்கட் சமுதாயம் அனுபவிக்கும்படியான விழாக்கள் ஏற்படுத்துவதிலும், நூல்கள் எழுதி வைப்பதிலும் அப்படியே தணித்து நிற்கிறான். மற்ற ஜீவராசிகளை விட்டு எவ்வளவோ தூரத்தில் விலகி நிற்கிறான்.

 
இது பற்றி மேல் நாட்டு நிபுணர் ஒருவர் ‘‘பேரண்டத்திலுள்ள பொருள்களிளெல்லாம் சிறந்த பொருள் மனிதன். மனிதனிடத்தில் உள்ள பொருளில் எல்லாம் சிறந்தது மனசு’’ என்றார்.
‘டி.கே.சி இதயஒலி கட்டுரைகள்’ சொல்லப்படும் முறையால் மனிதர்கள் மனதிற்குள் சென்று மலர்ச்சியை உண்டாக்குகின்றன. அதனை தன் ரசனை எனும் பண்பால் செய்திருக்கிறார். இதய ஒலியில் இடம் பெற்று உள்ள கட்டுரைகள் புனைக்கதை மொழியினைக் கொண்டிருக்கின்றன. அவர் தன் கட்டுரைகளை, தான் ரசித்தது மாதிரியே வாசிக்கிறவர்களும் ரசிக்க வேண்டுமென்று எழுதியிருக்கிறார். அதில் பெரும் வெற்றியும் பெற்று இருக்கிறார்.

 
‘இதயஒலி’ கட்டுரைகள் ஒவ்வொன்றும் சிறப்பானதுதான் என்றாலும், சங்கீதமும் சாகித்தியமும் தனியாகக் குறிப்பிட வேண்டும். தமிழ்நாட்டில் சங்கீதத்திற்கு மொழி கிடையாது என்று சொல்லிக்கொண்டு, தெலுங்கு மொழியாக இருந்தபோது தெலுங்கு சாகித்தியங்கள் பாடினார்கள். சங்கீதத்தை அனுபவிக்க சாகித்தியம் புரிய வேண்டும். அதாவது, மொழி முக்கியம். தமிழ்நாட்டு சங்கீதத்தில் தமிழில் சாகித்தியம் பாடப்பட வேண்டும் என்பதை ஒரு பிரளாமாக எழுதி இருக்கிறார். அதனை பின்வருமாறு விளக்குகிறார்.

 
‘‘மனிதனுக்குக் கடவுள் எத்தனையோ சக்திகளைக் கொடுத்திருக்கிறார். விஷயத்தைத் தெரியப்படுத்த பாஷையைக் கொடுத்திருக்கிறார். ஆனால், உணர்ச்சி பாவங்களை பாஷை அவ்வளவாக எடுத்துச் சொல்ல உதவுவதில்லை எடுத்துச் சொன்னபோதிலும் இதயத்தில் நிறுத்துவதில்லை, பதிய வைப்பதில்லை. சங்கீதம் அதைச் சாதித்துவிடுகிறது’’ என்றார்.
ரசனை அடிப்படையிலான புத்தகம் எப்போதும் புத்தம் புதிதாக படிக்கக் கூடியதாகவே இருக்கிறது என்பதை ரசிகமணி டி.கே.சி.யின் ‘இதய ஒலி’ நிலைநாட்டி வருகிறது. வேகமாக மாறும் மொழியில் மாறாத முறையில் ‘இதய ஒலி’ எழுதப்பட்டிருக்கிறது. வாழ்நாள் முழுவதும் கவிதை, இலக்கியம், ரசனை என்பதைப் பரப்புவதையே இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்த ரசிகமணி டி.கே.சி. 1956 ஆம் ஆண்டில் காலமானார். ஆனால் அவர் எழுதிய ‘இதய ஒலி’ ஸ்ரீவிதமாக இருக்கிறது.

 

சா.கந்தசாமி

About The Author

Number of Entries : 53

Leave a Comment

© 2011 Powered By Wordpress, Goodnews Theme By Momizat Team

Scroll to top