விடுதலை எப்போது? Reviewed by Momizat on . நான் இங்கு குறிப்பிடப் போகிற நான்கு சம்பவங்களை அநேகமாக நம்மில் பலரும் கடந்து வந்திருப்போம். சம்பவங்களில் உள்ள ‘இன்றைய இளைஞர் இளைஞிகளை’யும்தான்! சம்பவம் 1 : அந்த நான் இங்கு குறிப்பிடப் போகிற நான்கு சம்பவங்களை அநேகமாக நம்மில் பலரும் கடந்து வந்திருப்போம். சம்பவங்களில் உள்ள ‘இன்றைய இளைஞர் இளைஞிகளை’யும்தான்! சம்பவம் 1 : அந்த Rating: 0
You Are Here: Home » கட்டுரைகள் » விடுதலை எப்போது?

விடுதலை எப்போது?

நான் இங்கு குறிப்பிடப் போகிற நான்கு சம்பவங்களை அநேகமாக நம்மில் பலரும் கடந்து வந்திருப்போம். சம்பவங்களில் உள்ள ‘இன்றைய இளைஞர் இளைஞிகளை’யும்தான்!

dayamalar
சம்பவம் 1 :
அந்த வீட்டுக் குழந்தையின் முதல் பிறந்த தின வைபவம் அது!
முந்தின நாள் மாலையே வெளியூரிலிருந்து சில உறவினர்கள் வீட்டுக்கு வந்து விட்டனர். ‘ஹாஃப் எ டே’ லீவில் வீட்டுக்கு வந்து விடுவதாக உறுதி அளித்திருந்த குழந்தையின் அம்மாவோ இன்னும் வரவில்லை. ‘‘அவளுக்கு ஆஃபீஸ்ல திடீர் வேலை; செம பிஸி’’ என்று தன் உறவினர்களிடம் காரணம் சொல்லிக் கொண்டிருந்தான் குழந்தையின் அப்பா. ஒருவழியாக, ஏழு மணியளவில்.. வந்து சேர்ந்தாள் அம்மா. வந்திருந்தவர்களைப் பார்த்து லிமிட் ஆக ஒரு புன்னகை.. வாஷ் பேஸினில், ஃபேஸ் வாஷ். டவலைத் தேடி முகம் துடைப்பதற்குள் வந்துவிட்டது ஒரு ஃபோன். ஃபோனும் கையுமாக தன் அறைக்குள் நுழைந்தவள், வெளியில் வந்தபோது மணி 8.10.
‘‘ஏம்மா டென்ஷன் ஆகுற? அவளுக்கு ஆஃபீஸ்ல டென்ஷன் ஜாஸ்தி!’’
‘‘ஏண்டா.. வந்தவங்களை ‘வாங்க’னு கேக்கறதுக்குக் கூடவா டென்ஷன்? கால் இஞ்ச்சுக்கு ஸ்மைல் பண்றா உம் பெஞ்சாதி. இருந்தாலும் இவ்ளோ திமிர் ஆகாதுடா!’’
‘‘ஸ்ஸோ.. அம்மா.. அவ காதுல விழுந்துடப் போகுது.. மெதுவா பேசு!’’
‘‘நான் யாருக்குடா பயப்படணும்? அப்படி என்ன மண்ணாங்கட்டி வேலைங்கிறேன்? நாங்க மட்டுமா வந்திருக்கோம்? உங்க சித்தப்பா, சித்தி, உன் தங்கை குடும்பம்.. எல்லாரும் வந்திருக்கோமே.. அவங்களுக்கு என்ன மரியாதை? வந்ததே லேட்டு. இதுல ஒன்ற மணி நேரம் ஃபோன் வேற.. இல்ல கேக்குறேன்.. அவ மட்டும்தான் வேலை பாக்குறாளா?! உன் வீடு தேடி வந்திருக்குற இவங்கள்லாம் ஊர்ல வெட்டியா இருக்காங்க.. அப்டித்தான?’’
அடுத்து அந்த வீட்டில் என்ன நடந்திருக்கும் என்று உங்களால் யூகிக்க முடிகிறதுதானே! பர்த்டே பார்ட்டி என்ன பாடுபட்டதோ.. தெரியவில்லை!
சம்பவம் 2 :
கணவன் மனைவி இருவருக்கும் ஸாஃப்ட்வேர் வேலை. கர்ப்பம் தரிக்கும் முன்பாகவே புது வீடு வாங்கி.. அன்று கிரகப்பிரவேசம். வழிபாடு முடிந்து, காலை உணவுக்காகக் காத்திருக்கும் உறவினர் கூட்டம். அப்போது..
‘‘ஏ.. எரும மாடு.. கூப்பிடுறது காதுல விழுதா பாரு.. ஏ பஃபூனு.. உன்னத்தான்.. இங்க வாடா.. இந்த வாட்டர் கேனைப் போடுனு எவ்ளோ நேரமா சொல்றேன்.. ஏ ஷேக்கர்.. தடியா…’’
‘‘என்னடா பேபி.. நான் கவனிக்கலையே.. இதோ வந்துட்டேன்டா பேபி’’
எருமை மாடு, பஃபூன், தடியன் என்கிற உப பெயர்கள் அடங்கிய அந்த ‘சே(ஷ)(க்)கர்’.. புதுமனை புகுந்தவன்.. ஓடி வந்து, ‘பேபி’ என்று மறுபெயர் கொண்ட தன் புத்தம் புதிய மனைவி இட்ட பணியைச் செவ்வனே நிறைவேற்றுகிறான்.
‘‘எங்க ராஜசேகரு(???!) இந்தச் சின்ன வயசுலயே சென்னையில வீடு வாங்கிட்டான்.. வந்து பாருங்க!’’ என்று பெருமிதத்துடன் உறவுக் கூட்டத்தை அழைத்து வந்திருந்த பெற்றவர்கள், பேந்தப் பேந்த விழித்தபடி நின்றிருந்த காட்சி.. ரொம்பப் பரிதாபம்!
சம்பவம் 3 :
இவர்கள் கொஞ்சம் சீனியர் தம்பதி. இரண்டரை வயதில் ஒரு குழந்தை. தம்பியின் கல்யாணத்துக்காக முதல் முறையாக வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறார்கள். குழந்தைக்கு சாப்பாடு ஊட்டுவது முதல், டயபர் மாற்றுவது வரை எல்லாமே தன் மகனே செய்வதும், மருமகள் அவனை வேலை ஏவிக் கொண்டே இருப்பதும்கூட அந்த அம்மாவை.. அதாவது மாமியாரை.. அத்தனை பாதிக்கவில்லை. வீடு முழுக்க உறவினர்களும் அவர்களுள் சில விடலைப் பையன்களும் இருக்க.. டிஷர்ட்டும் ஷார்ட்ஸுமாக தன் மருமகள் நடமாடுவதும், ஹால், கிச்சன் என்கிற விவஸ்தைகள் தெரியாமல், ‘ஃபாரின் ஸ்டைலில்’ இருவரும் நடந்து கொள்வதும்தான் அவரது எக்ஸ்ட்ரீம் எரிச்சல்கள்!
‘‘எம் பையனையும் சேர்த்தேதான் மேடம் சொல்றேன்.. தமிழ்நாட்டுலதான ரெண்டு பேரும் பொறந்து வளர்ந்தாங்க. இல்ல.. லண்டன்லயே பார்ன் வித் சில்வர் ஸ்பூனா?’’
அந்தப் பெண்மணி என்னிடம் பகிர்ந்து கொள்ளாத இன்னொரு கேள்வியும் எனக்கு இருக்கிறது. 47 வயதே ஆகிற, இளம் வயதிலேயே கணவனை இழந்த.. தன் தாயின் மனம் என்ன பாடு படும் என்பதுகூடவா, அந்தப் பையனுக்கும் அவன் மனைவிக்கும் புரியாது?
சம்பவம் 4 :
அந்த வீட்டிலும் அன்று கிரகப் பிரவேசம்தான்.. அந்த மருமகளும் வேலைக்குச் செல்கிற பெண்தான்.. அந்த சம்பவமும் சமீபத்தில் நிகழ்ந்ததுதான்..
ஆனால், அவளைப் பெற்றவர்கள், அவளுடைய சகோதரர்கள்.. பண்ணையாரின் மாளிகைக்குள் நுழைகிற பாமரர்களைப் போல, தயங்கித் தயங்கி வாசலில் கால் வைக்க.. அவர்களைப் பார்த்தும் பார்க்காததுபோல, முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டு, தன் பக்கத்து உறவினர் ஒருவரை மிகுந்த மரியாதையுடன் வரவேற்கிறார் அந்த வீட்டு மாமியார்.
பிறந்த வீட்டு சொந்தங்களுக்கு, மாமியாரின் அனுமதியின்றி ஒரு வாய்த் தண்ணீர் தருவதற்குக்கூட பயந்து கொண்டு, சமையலறைக்குள்ளேயே பற்களைக் கடித்துக் கொண்டு, மனதுக்குள் கதறியபடி மறுகி நிற்கிறாள் அந்த மருமகள்.
இந்த 2013-&ம் வருடத்திலும்கூட, பெண்ணடிமைத்தனம் இருக்கிறதே என்கிற வேதனையோடு, ‘மனிதர்களுக்கான ஒட்டுமொத்த விடுதலை எப்போது?’ என்கிற கவலையும் மனதுக்குள் சேர்ந்து கொள்கிறது. அடிமையாகவும் வேண்டாம்.. அடிமையாக்கவும் வேண்டாம்! அனைவரையும் சக உயிர்களாக மதித்து நடக்கவும் நடத்தவும், இந்தக் கட்டுரை ஒரே ஒரு மனதுக்கேனும் உதவுமானால், நானும் ஒரு சிறு தீபத்தை ஏற்றி வைத்த சந்தோஷம் அடைவேன்!
‘அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று’
(இல்லற வாழ்க்கையையே இங்கு ‘அறன்’ என்று சிறப்பித்துச் சொல்கிறார் திருவள்ளுவர். அந்த இல்லற வாழ்க்கை, மற்றவர்கள் பழிக்கும்படியாக இல்லாதிருப்பதே நன்மை தரும்.)

 

தயாமலர்

About The Author

Number of Entries : 53

Leave a Comment

© 2011 Powered By Wordpress, Goodnews Theme By Momizat Team

Scroll to top