தெய்வங்களின் துணைகொண்டு ஆட்சி நடத்தியவர் இனி தெய்வமாக இருந்து வழி நடத்துவார் Reviewed by Momizat on . தெய்வங்களின் துணைகொண்டு ஆட்சி நடத்தியவர் இனி தெய்வமாக இருந்து வழி நடத்துவார் உலகத் தமிழர்களையெல்லாம் மீளாத் துயருக்குள் ஆழ்த்திவிட்டது முதல்வர் செல்வி ஜெயலலிதா தெய்வங்களின் துணைகொண்டு ஆட்சி நடத்தியவர் இனி தெய்வமாக இருந்து வழி நடத்துவார் உலகத் தமிழர்களையெல்லாம் மீளாத் துயருக்குள் ஆழ்த்திவிட்டது முதல்வர் செல்வி ஜெயலலிதா Rating: 0
You Are Here: Home » slider » தெய்வங்களின் துணைகொண்டு ஆட்சி நடத்தியவர் இனி தெய்வமாக இருந்து வழி நடத்துவார்

தெய்வங்களின் துணைகொண்டு ஆட்சி நடத்தியவர் இனி தெய்வமாக இருந்து வழி நடத்துவார்

தெய்வங்களின் துணைகொண்டு ஆட்சி நடத்தியவர் இனி தெய்வமாக இருந்து வழி நடத்துவார்

தெய்வங்களின் துணைகொண்டு ஆட்சி நடத்தியவர்
இனி தெய்வமாக இருந்து வழி நடத்துவார்

லகத் தமிழர்களையெல்லாம் மீளாத் துயருக்குள் ஆழ்த்திவிட்டது முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் மரணம். மக்கள் நலனுக்காக துணிச்சலான முடிவுகளை எடுப்பதிலும், தன்னலமற்ற பொதுச் சேவைகளிலும் தனக்கு நிகர் தானே என்று பெயரெடுத்தவர் முதல்வர் செல்வி ஜெயலலிதா. தெய்வங்களின் துணைகொண்டு ஆட்சி நடத்தியவர் 2016 டிசம்பர் 5ம் தேதி தெய்வமாகவே மாறிவிட்டார்.  இனி, தமிழகத்தையும், தமிழக மக்களையும் தெய்வமாகவே இருந்து வழி நடத்துவார்.

வாழ்க்கை வரலாறு

முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் இயற்பெயர் கோமளவள்ளி. இவருடைய தந்தையார்  பெயர் ஜெயராம். தாயார் பெயர் வேதவள்ளி என்கிற சந்தியா. 1948ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதி மைசூர் அருகேயுள்ள மேல்கோட்டை என்ற ஊரில் பிறந்தார். அப்போது, மைசூர் நீதிமன்றத்தில் அரசு மருத்துவராக பணியாற்றி வந்தார் இவருடைய தாத்தா.

செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு இரண்டு வயது ஆகும்போது, தந்தை ஜெயராம் இறந்துபோக,  அதன் பிறகு, அவரின் அம்மா வேதவள்ளி அவர்கள், இரண்டு மாதக் குழந்தையான ஜெயலலிதாவோடு பெங்களூருவுக்குச் சென்றார். காரணம், வேதவள்ளி அவர்களின் தாயும், தந்தையும் அப்போது பெங்களூருவில் வசித்து வந்தனர்.

இரண்டு வயது முதல் பெங்களூருவில் வளர்ந்து வந்த செல்வி ஜெயலலிதா அவர்களின் தொடக்கக் கல்வி பெங்களூருவில்தான் ஆரம்பிக்கப்பட்டது.   பெங்களூரில் ‘பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலை பள்ளி’யில் ஆரம்பக் கல்வி பயின்றார்.

பின்னர், தாயார் வேதவள்ளி அவர்களுக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு வந்ததால்,  சென்னையிலுள்ள ‘சர்ச் பார்க் ப்ரேசெண்டேஷன் கான்வென்ட்டில்’ தனது கல்வியைத் தொடர்ந்தார் செல்வி ஜெயலலிதாவின்.

குழந்தைப் பருவத்திலிருந்தே, கல்வியில் சிறந்து விளங்கிய செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு சட்டம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. ஆனால், குடும்பம் நிதிச் சுமையால் சூழப்பட்டதால், 15 வயதில்  ஷங்கர்.வி.கிரி அவர்கள் இயக்கிய “எபிஸில்” என்ற ஆங்கில படம் மூலமாக தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். jaya-1 jayalalitha

திரையுலக வாழ்க்கை

1964ம் ஆண்டு திரையுலகில் தனக்கென்று ஒரு தனி பாணியை உருவாக்கி, ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார் செல்வி ஜெயலலிதா.  1964ம் ஆண்டு வெளியான ‘சின்னடா கொம்பே’ என்ற கன்னட படம் அவருக்கு பெரும் விமர்சனங்களையும், பார்வையாளர்களின் கைத்தட்டலையும் பெற்றுத் தந்தது.

ஒரு வருடம் கழித்து, ‘வெண்ணிற ஆடை’ என்ற படம் மூலமாக தமிழ் திரையுலகில்  தன்னுடைய நடிப்பைத் தொடங்கினார் செல்வி ஜெயலலிதா. அதன் பிறகு, தெலுங்கு சினிமாவில் தோற்றமளித்தார். அடுத்தடுத்த ஆண்டுகளில், அவர் பல தமிழ் படங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிக்கொண்டு வந்தார்.

தொடர்ந்து தமிழ்ப் படங்களில் மட்டும் நடிக்கத் தொடங்கிய செல்வி ஜெயலலிதா அவர்களின் திரைப்படங்கள் மாபெரும் வெற்றிகளைக் குவித்து பாக்ஸ் ஆபிஸில் இடம் பெற்றது.

எம்.ஜி.ஆருடன் செல்வி ஜெயலலிதா அவர்கள்  முதன் முதலாக இணைந்து நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் வரலாறு காணாத வெற்றியைப் பெற, தொடர்ந்து வெற்றியின் ஏறு முகத்தில் பயணிக்கத் தொடங்கினார். திரையுலக வாழ்க்கையின் பிற்பகுதியில் சிவாஜி கணேசன், ஜெய்ஷங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன் என பிற கதாநாயகர்களுடன் இணைந்து நடித்தார்.

ஒட்டு மொத்தமாக 127 திரைப்படங்களில் நடித்து முடித்தவருக்கு, தனது விருப்பத்திற்கு மாறாக சந்தர்ப்ப சூழலின் காரணமாக, அரசியலுக்குள் வரும் சூழல் ஏற்பட்ட காரணத்தால், ‘நதியை தேடி வந்த கடல்’ என்கிற திரைப்படத்தோடு தனது நடிப்புத் தொழிலுக்கு முற்றுப் புள்ளி வைத்தார். செல்வி ஜெயலலிதா அவர்களும், எம்.ஜி.ஆர் அவர்களும் இணைந்து 28 திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். இத் திரைப்படங்களில் ஒன்றுகூட தோல்வி அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. jayalalitha

அரசியல் வாழ்க்கை

திரைத்துறைக்கு முற்றுப் புள்ளி வைத்த செல்வி ஜெயலலிதா அதன் பிறகு எம்.ஜி.ஆர் அவர்களால் தொடங்கப்பட்ட அ.இ.அ.தி.மு.கவில், 1981ம் ஆண்டு தன்னை இணைத்துக் கொண்டு, கட்சியின் வளர்ச்சிக்காகவும், மக்களின் நல் வாழ்வுக்காகவும் தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தார்.

மக்களுக்காக, மக்களின் வாழ்க்கைக்காக தன் வாழ்க்கையை துச்சம் என மதித்து எவர் ஒருவர் வாழ்ந்து காட்டுகிறாரோ, அவர்தான் மக்களால் என்றென்றைக்கும் வாழ்த்தப்படுவார்.  பொது வாழ்க்கையில் நுழைந்தபிறகு தமிழ் நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழர்களின் வளர்ச்சிக்காகவும் எவ்வித சுயநலமும் இன்றி வாழ்ந்துகாட்டியவர் செல்வி ஜெயலலிதா.

அம்மா என தமிழக மக்களால் அன்போடு அழைக்கப்படும் ஜெயலலிதாவின் அரசியல் பொது வாழ்க்கை பெரும் போராட்டம் நிறைந்தது.

1981ம் ஆண்டு அ.தி.மு.கவில் அடிப்படை கட்சி உறுப்பினராகத்தான் தன்னை இணைத்துக்கொண்டார். அதன் பின்னர் இவருடைய சுறுசுறுப்பும், செயலாற்றலும், தன்னம்பிக்கையோடு எதையும் எதிர்கொள்கிற துணிச்சலும் எம்.ஜி.ஆர் அவர்களின் கவனத்திற்குச் செல்ல, ஜனவரி 1983ல் அ.தி.மு.கவின் கொள்கை பரப்பு செயலாளர் என்கிற பொறுப்புக்கு இவரை உயர்த்தியது.

எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது சத்துணவு திட்டத்தை மக்களிடம் கொண்டுபோய்ச்   சேர்க்க பெரும் உதவியாக இருந்தவர் செல்வி ஜெயலலிதா. தமிழகமெங்கும் சூறாவளியாய் சுற்றி, மேடைக்கு மேடை சத்துணவு திட்டத்தைப் பேசி, அத்திட்டத்திற்கு புகழ் சேர்த்ததோடு மட்டுமல்லாமல்,  அந்த திட்டத்திற்கு தன்னுடைய பங்களிப்பாகவும், நன்கொடையாகவும் ரூபாய் 40,000 வழங்கியவர். அன்றைக்கே மாணவ மாணவியர்மீது அளப்பறிய அன்பைக் கொண்டிருந்தவர்  செல்வி ஜெயலலிதா என்பது இதன்மூலம் நிரூபணமாகிறது.

சத்துணவு திட்டத்தின் மீது செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு இருந்த அக்கறையை உணர்ந்த எம்.ஜி.ஆர், அவரை சத்துணவுத் திட்டத்தின் உயர்மட்டக் குழுவிலும் இடம் பெறச் செய்தார்.

தனது அனல் தெறிக்கும் பேச்சுக்கள் மூலமும், பிரச்சாரங்கள் மூலமும் மக்களின் இதயங்களில் இடம்பிடித்தார் செல்வி ஜெயலலிதா. இவரின் அபாரமான ஆங்கில, இந்தி புலமையைக் கவனித்த எம்.ஜி.ஆர்., இவர்தான் டெல்லி அரசியலுக்கு சரியான ஆள் என்று தீர்மானித்து ராஜ்யசாபா உறுப்பினராக்கினார். மேலும், ராஜ்யசபா அ.தி.மு.க., துணைத் தலைவராகவும் நியமித்தார். ராஜ்யசபாவில் இவர் பேசிய பேச்சுக்கள் பிரதமர் இந்திராகாந்தியிடம் பெரும் பாராட்டை பெற்றது.

1984ம் ஆண்டு, எம்.ஜி.ஆர் அவர்கள் உடல்நலம் குன்றி, மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தபோது, தனியாளாக தேர்தல் பிரச்சாரத்திற்கு புறப்பட்டவர் செல்வி ஜெயலலிதா.  அவரின் நெஞ்சுரம் இந்த செய்கையின் மூலம் நிரூபனமானது.  இதைத்தான் அ.தி.மு.க தொண்டர்களும் எதிர்பார்த்தனர்.  ஜெயலலிதா பிரச்சாரம் செய்ய வருகிறார் என்பதைக் கேள்விப்பட்ட தொண்டர்களை  உற்சாகம் தொற்றிக்கொண்டது.

டிசம்பர் 1984ல் ஆண்டிப்பட்டியில் தொடங்கியது ஜெயலலிதாவின் அனல் தெறிக்கும் தேர்தல் பிரசாரம். அடுத்தடுத்து நெல்லை, மதுரை, ராமநாதபுரம், கோவை, ஈரோடு, சேலம் என்று மொத்தம் இருபத்தியோரு நாள்களுக்கு இடைவிடாது பிரச்சாரம் செய்தார். மக்களிடம் நேரடியாக உரையாடினார். எம்.ஜி.ஆரைப் பற்றிப் பேசினார். எம்.ஜி.ஆரின் உடல்நிலை குறித்த தி.மு.கவின் தவறான பிரசாரம் பற்றிப் பேசினார். வாக்காளர்களிடம் கேள்விகேட்டுப் பதில் பெறும் வித்தியாசமான பிரச்சாரத்தை மேற்கொண்டார். உண்மையிலேயே சூறாவளி சுற்றுப்பயணம் அது.

எம்.ஜி.ஆர் பிரச்சாரம் செய்யாத குறையை ஒற்றை ஆளாக நின்று ஜெயலலிதா ஈடுகட்டியதாகப் பத்திரிகைகள் எழுதித் தீர்த்தன. அந்தத் தேர்தலில் அ.தி.மு.கவுக்கு அபார வெற்றி. 153 இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க.,விற்கு 132 தொகுதிகள் கிடைத்தன. அதன் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு 62 இடங்கள் கிடைத்தது. இந்தத் தேர்தலில்தான் எம்.ஜி.ஆர்., அமெரிக்காவிலிருந்தே ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டார். ஜெயலலிதாவாலும், அ.தி.மு.க தொண்டர்களாலும் மறக்கமுடியாத பிரச்சாரம் அது. வெற்றியை தமிழக மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

எம்.ஜி.ஆரின் மறைவையடுத்து அ.தி.மு.க இரு கட்சியாகப் பிளவு பட்டு நிற்க, அதையும் பொறுமையுடன் சமாளித்து வெற்றிகண்டு, உடைந்த கட்சியை மீண்டும் ஒரே கட்சியாக்கி, பெரும் வெற்றியைக் கண்டவர் செல்வி ஜெயலலிதா.

1998ம் ஆண்டு ஜனவரி 1 மற்றும் 2ம் தேதிகளில் நெல்லை சீமையில் செல்வி ஜெயலலிதாவின் தலைமையில் நடைபெற்ற அ.தி.மு.கவின் 25-ம் ஆண்டு நிறைவு வெள்ளி விழா மாநாட்டில் இந்திய அரசியலில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சி தலைவர்கள் அத்வானி, டாக்டர் ராமதாஸ், வைகோ, கம்யூனிஸ்டு தலைவர்கள் ஆகியோர் பங்கேற்ற மாநாட்டை நடத்தி, மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சியை தமிழகத்தில் அமைத்துக் காட்டுவேன் என்று சூளுரைத்து 2001ல் மீண்டும் ஆட்சி அரியணையில் அமர்ந்தார்.

சுதந்திர இந்தியாவிற்குப் பிறகு, அ.தி.மு.க., என்கிற மாபெரும் மக்கள் இயக்கம் 27 ஆண்டுகள் தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் மக்களால் அமர்த்தப்பட்டு ஏழை, எளிய மக்கள் மட்டுமல்லாது விவசாயிகள், தொழிலாளிகள் உட்பட அனைத்து தரப்பினரும் மதிக்கும் ஓர் இயக்கமாக இன்னும் திகழ்ந்து கொண்டிருக்கிறது என்றால், அதற்கு முக்கிய காரணமாகத் திகழ்ந்தவர் செல்வி ஜெயலிதா அவர்கள்.

செல்வி ஜெயலலிதாவின் ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்ந்தது.  பெண்கள் பயமின்றி வாழ்ந்தனர். நாட்டின் பல பகுதிகளில் பயங்கரவாதம், பிரிவினைவாதம், தீவிரவாதம் தலைதூக்கி ஆடிக்கொண்டிருக்கும்போது, தமிழகத்தில் அப்படி ஒரு போராட்டமோ, வன்முறையோ  நடக்கா வண்ணம் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டி உள்ளார். வறட்சி மற்றும் சுனாமி போன்ற இயற்கை சீற்றத்தின்போது, துரித நிவாரணப் பணிகளால் தமிழக மக்கள் நிம்மதியாக சீரான வாழ்க்கை நடத்த முழுவீச்சில் அரசு எந்திரத்தை இயக்கியவர் செல்வி ஜெயலலிதா.

இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி கட்சியின் உள்கட்சித் தேர்தலை குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் நடத்தி முடிக்கின்ற ஒரே கட்சி என்ற சிறப்பை செல்வி ஜெயலலிதா நிலைநாட்டி உள்ளார். கட்சியின் உறுப்பினர் யாராவது அகால மரணமடைந்தால், கட்சியின் சார்பில் குடும்ப நிதி வழங்கி பாதுகாப்பதோடு, அவர்களின் குடும்பத்தில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு கல்வித் தொகை வழங்கி கழகத்தினருக்கு தாயாக விளங்கினார்.

பண்புகளின் சிகரமாய் விளங்கிய செல்வி ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்  அவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி ஏழை எளியவர்கள் நல்வாழ்வு வாழ்ந்திட தன் வாழ்நாள் எல்லாம் திட்டமிட்டு உண்மை, உறுதி, சத்தியம், நேர்மை, நிர்வாகத்திறமை, பொறுப்புணர்வு ஆகியவைகளின் மொத்த உருவமாகத் திகழ்ந்தவர்.

தன்னலம் கருதாத தனது சேவையால், தொண்டால் உள்ளத்தால், உயர்வால், கள்ளங்கபடமற்ற தன்மையால் தமிழக அரசியலில் தமக்கு நிகர் இல்லையென ஒரு தனிச்சிறப்பை பெற்றுத் திகழ்ந்தவர். எல்லோருக்கும் உணவு, உடை, வீடு, கல்வி, சுகாதாரம், வேலை போன்ற அடிப்படை வசதிகளை உருவாக்கிக் கொடுப்பதே தன் லட்சியம் என்ற கொள்கையில் உறுதியாக இருந்து ஏழை எளிய மக்களின் நல்வாழ்வுக்காகத் தன்னை முழுமையாக அற்பணித்துக்கொண்டு உழைத்துக் காட்டியவர்.

முதலமைச்சராக பொறுப்பேற்று ஆட்சிசெய்த  காலங்களில் ஏழை மக்களின் தேவைகளை உணர்ந்து அசுர வேகத்தில் அவர்கள் வாழ்வு உயர அயராது பாடுபட்டவர். அமைச்சர்களும், முதலமைச்சரும் மக்களின் தொண்டர்கள் என்பது ஜனநாயக பண்பாடு. இதை நடைமுறையில் செய்து காட்டிய ஒரே முதல்வர் செல்வி ஜெயலலிதா மட்டுமே. தமிழகத்தின்  முன்னேற்றத்திற்கும், மக்களின் நல்வாழ்விற்கும் அயராது உழைத்து மகத்தான தியாக வாழ்வு வாழ்ந்து காட்டியவர் செல்வி ஜெயலலிதா.

மக்கள் நலம், மக்கள் நலம் என்கிற சிந்தனையுடனே வாழ்ந்து காட்டிய செல்வி ஜெயலலிதா அவர்களை, இந்த நாடும், நாட்டு மக்களும் என்றென்றைக்கும் நேசித்துக்கொண்டே இருப்பார்கள். வரலாற்றின் நெடுங்கரங்கள் இவருடைய புகழை கட்டிக் காத்துக்கொண்டே இருக்கும்.

தமிழகத்தில் இல்லாமை இல்லாதொழிந்திடவும், ஏற்றத் தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்கிடவும், மக்கள் முழு வாழ்வு பெற்றிடவும், மக்களின் பண்பாடு பழக்க வழக்கங்களைப் பாதுகாக்கவும், தன்னையே அர்ப்பணித்துக்கொண்டவர். ஓயா பணியாற்றி வளர்ந்தவர். மக்களுக்காக அயராது பாடுபட்டவர், தன்னுடைய உடல் நலனை பாதுகாக்கத் தவறிவிட்டார் என்பதே உண்மை.

2016 டிசம்பர் 5ம் தேதி இயற்கையுடன் இணைந்துவிட்ட செல்வி ஜெயலலிதா அவர்கள், தெய்வமாக இருந்து, தமிழக மக்களுக்கு வேண்டிய அனைத்தையும் செய்து முடிப்பார்.

About The Author

Number of Entries : 53

Leave a Comment

© 2011 Powered By Wordpress, Goodnews Theme By Momizat Team

Scroll to top