ஓவியர் ட்ராஸ்கி மருது – trotsky maruthu Reviewed by Momizat on . வண்டி வண்டியாக வசனம் பேசுவதே இன்றைய சினிமா! இன்று பிரபலமாக விளங்கும் கிராபிக்ஸ், அனிமேஷன் போன்றவற்றை 30 வருடங்களுக்கு முன்பே பத்திரிகைகளிலும், மேடைகளிலும் கையாண வண்டி வண்டியாக வசனம் பேசுவதே இன்றைய சினிமா! இன்று பிரபலமாக விளங்கும் கிராபிக்ஸ், அனிமேஷன் போன்றவற்றை 30 வருடங்களுக்கு முன்பே பத்திரிகைகளிலும், மேடைகளிலும் கையாண Rating: 0
You Are Here: Home » slider » ஓவியர் ட்ராஸ்கி மருது – trotsky maruthu

ஓவியர் ட்ராஸ்கி மருது – trotsky maruthu

வண்டி வண்டியாக வசனம் பேசுவதே இன்றைய சினிமா!

இன்று பிரபலமாக விளங்கும் கிராபிக்ஸ், அனிமேஷன் போன்றவற்றை 30 வருடங்களுக்கு முன்பே பத்திரிகைகளிலும், மேடைகளிலும் கையாண்டவர் ஓவியர் ட்ராஸ்கி மருது. கோட்டோவியத்திலும் இவர் மிகச் சிறப்பான திறமைகொண்டவர். மேலும், சினிமாத் துறைக்கான கலை வடிவமைப்பு, தொலைக்காட்சி அனிமேஷன் என இன்றும் உயிர்ப்புடன் இயங்கி வரும் அவரை சூரியகதிர் சார்பில் சந்தித்தோம்.trotsky marudu
நம் பண்பாட்டின் அடையாளமாக விளங்கும் ஓவியக் கலை இன்றைய அறிவியல் தமிழர்கள் மத்தியில் எப்படி இருக்கிறது?
‘‘இன்றைய தமிழ்  சூழல் என்பது காண்பியல் மொழி (விஷூவல் லிட்டிரசி) மூலமாக படித்தல்,  தொடர்பு கொள்ளுதல் போன்றவற்றின் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் உணராத ஒரு சமூகமாக இருக்கிறது. அதனால்தான், தமிழ் சினிமா வண்டி வண்டியாக வசனங்களைப் பேசிக் கொண்டே இருக்கிறது. சினிமா என்பது காட்சி ரீதியாக  உணர்த்த வேண்டிய ஊடகம். அதைத் தவிர,  காட்சி ரீதியாக சிறந்த தமிழ் படமாக கருதப்படும் படங்கள் எல்லாமே, மேலோட்டமாக உலகச் சினிமா என்று சொல்லக் கூடிய படங்களில் இருந்து காப்பி அடிக்கப்பட்ட படங்களாக இருக்கிறதே தவிர, அதைப் புரிந்து உள்வாங்கிக் கொண்ட படங்களாக இல்லை. காண்பியல் ரீதியாக கலையின் முக்கியத்துவத்தை பத்திரிகைகளும் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.’’

IMG_1066atamil-warrior

காட்சி ரீதியாக ஒரு விஷயத்தை புரியவைப்பதற்கும், வார்த்தை அல்லது சொல் அளவில் ஒரு விஷயத்தை புரியவைப்பதற்கும் உள்ள வேறுபாடு என்ன?
‘‘ஒரு வார்த்தையால் ஒரு விஷயத்தை உங்களால் அனுமானிக்க மட்டுமே முடியும். அதாவது புரிந்துகொள்ளல். காண்டாமிருகம் என்று நான் சொன்னால், நீங்கள் ஏற்கனவே காண்டாமிருகத்தை நேரிலோ, புகைப் படத்திலோ அல்லது காணொளி மூலமாகவோ பார்த்திருந்தல் மட்டுமே நான் சொன்ன வார்த்தை உங்களுக்குப் புரியும். உங்களுடைய அனுபவமும் என்னுடைய அனுபவமும் எங்கே ஒன்றிணைகிறதோ அப்போதுதான் நமக்குள் புரிதலும், தகவல்தொடர்பும் ஏற்படும். அதனால்தான் நமக்குள் தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்க வார்த்தைகளை கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். எனவே, காண்டாமிருகம் என்கிற வார்த்தையை நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே காண்டாமிருகத்தின் படம் உங்களுக்கும் எனக்கும் உடனடியாக தொடர்பை ஏற்படுத்திவிடும். நீங்கள் காண்டா மிருகத்தின் படத்தை பார்த்திருக்கவில்லை என்றால் அந்த வார்த்தைக்கு நான் என்னதான் விளக்கம் கொடுத்தாலும் உங்களால் புரிந்துகொள்ள முடியாது. எனவே, ஒரு விஷயத்தை காட்சி வழியாக தெளிவாகப் புரியும்படி சொல்கிற  படத்தைக் காண்பித்து விட்டால், அங்கே எந்த மொழியும், எந்த வார்த்தையும் தேவையில்லை என்பதே என் கருத்து.’’
உங்களது ஓவியங்களில் கோடுகளே பலம் வாய்ந்தவையாக  இருக்கின்றன. கோடுகளுக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்?
‘‘உருவம் அல்லது காட்சி ரீதியாக கதை சொல்கிற விஷயங்களே எனக்குப் பிடிக்கும். அதனால், காமிக்ஸ் புத்தகங்கள், சினிமா, அனிமேஷன்  படங்கள் போன்றவற்றில் சிறுவயதில் இருந்தே ஆர்வம். இந்தத் துறையில்  ஈடுபட விரும்பினால் ஓவிய ரீதியாக, கோடுகளைச் சிறப்பான வகையில் கையாளத் தெரியவேண்டும். இதற்குள் என்னை தயார்படுத்திக் கொள்ள விரும்பியதால், கோடுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறேன். ஆரம்ப காலத்தில் பெரிய அளவிலான கோட்டோவியங்கள் வரைந்து இருக்கிறேன்.  காலத்துக்கு  ஏற்றார்போல தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டே இருக்கிறது. அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  எனக்கு எந்தவிதமான கட்டுப்பாடும் கிடையாது. நான் தினமும் என்னுடைய ஸ்கெட்ச் புக்கில் பெயிண்டிங் செய்து கொண்டுதான் இருக்கிறேன்.  நான் புகைப்படம் எடுப்பேன். படம் வரைவேன். அனிமேஷனுக்காக படங்களை வரைவேன். இப்போது இவை எல்லாவற்றையும் ஒரே இடத்தில், செய்யக் கூடிய அளவில் தொழிற்நுட்பம் வந்துவிட்டது.  அதனால் வெறும் கித்தான், கேன்வாஸ் துணியில் வரைபவர்கள் மட்டுமே ஓவியர் என்று கூறுபவர்களை காலம் கைவிட்டுச் சென்றுவிடும்.’’marudu with film effect works
நீங்கள் வரைந்த சோழர் மற்றும் பாண்டியர்களின் உருவங்கள் மேற்கத்திய பாணியில் உள்ளது போல காணப்படுகிறதே?
‘‘ஓவியர் மணியம்,  கோபுலு போன்றவர்கள் சேர சோழ பாண்டியர்களின் உருவங்களை வரைந்து இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் வரைந்த மன்னர்களின் உருவங்களில் மராத்திய கலாச்சாரத்தின் தாக்கம் இருக்கிறது. ஆரம்ப காலத்தில், மராத்திய நாடகம் மற்றும் ஓவியர் ரவிவர்மா, தாதா சாகிப் பால்கே போன்றோர் வழியாக மாரத்தியத்தின் தாக்கம் தமிழகத்தில் புகுந்து, 1930களுக்கு பிறகு தமிழகத்தில்  தோன்றிய மன்னர் தொடர்பான உருவங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. அதனால்தான், நம்முடைய அந்தக் காலத்து சினிமாக்களில்கூட நம் சங்க காலத்து மன்னர்களை மாரத்திய பாணியில் காட்டியிருந்தனர்.  இதற்கு முக்கிய காரணம் கடந்த 150 வருட காலத்துக்குட்பட்ட ஓவியங்கள் மட்டுமே கையில் இருந்ததுதான். இதனால்தான் நான் மராத்திய பின்னணியைத் தவிர்த்தேன்.  நான் மருது பாண்டியர், கட்டபொம்மன் போன்றவர்களை வரையும்போது, ஒரு ஜமீன்தார் இருப்பது போலவும், அவரது போர்க்குணம் கொண்ட உடல் மொழியுடன் அவர்களைக் காட்சிப்படுத்தினேன். மேலும், சோழர்காலத்து சிற்பங்கள், நாயக்கர் காலத்து சிலைகள் போன்றவற்றை ஆய்வு செய்தும் இதை உருவாக்கினேன்.’’
சென்னை கவின் கலைக்கல்லூரியில் ஓவியக் கல்வியின் தரம் குறைந்துவிட்டதாக தற்போது கூறப்படுவது பற்றி?
‘‘கடந்த 20 முதல் 30 வருடங்களாகவே, கவின் கலைக் கல்லூரியில் இந்தப் பிரச்னை இருக்கிறது. மாணவர்களிடையே அரசியல் விழிப்புணர்வு இருக்கவேண்டியதுதான். ஆனால், ஒரு சிலர் தங்களது சுயநலத்திற்காக அரசியல்  மற்றும் ஜாதியை புகுத்தி மாணவர்களின் போக்கை திசை திருப்பிவிட்டார்கள். மேலும், ஒவியக் கல்வி, சமகால அளவில் அப்டேட் செய்யப்படாமல் இருப்பதால், பாடத் திட்டங்களின் தரம் குறைந்து இருக்கிறது. அதுதவிர, ஓவியர்கள் ஒவியம் மட்டுமல்லாமல், போட்டோகிராபி, பாரம்பரிய இசை, மல்டிமீடியா போன்ற துணை கலைகள் பற்றிய அடிப்படை விஷயங்களை அறிந்துவைத்துக் கொள்வது  அவசியம். ஆனால், நம் சூழலில் அவ்வாறு அமையாமல் போய்விட்டது.  ஒவியக் கல்வியின் தரம் குறைந்து விட்டது என்று தற்போது சிலர் கூறி வருபவர்களூம் இதை செய்தவர்கள்தான்!’’
எழுத்தாளர்களுக்கும் ஓவியர்களுக்கும் இடையேயான உறவு எப்படி இருக்கிறது?
‘‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்று  போடுபவர்கள்தான் தமிழ்நாட்டில் பெரிய ஆள். வசனம் எழுதியவர்கள் எல்லாம் அரசியல் தலைவர்களாகி விட்டார்கள். நம் சமூகத்தில் வார்த்தைகளுக்கும் எழுத்துகளுக்கும், பேச்சுத் திறமைக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.  அவர்களில் பலர், சமூகத்தில் பெரிய அந்தஸ்தை சினிமா மூலமாக பெற்றனர். அதனால்தான் ஒவியத்திற்கும், காட்சி வடிவத்துக்கும் மதிப்பு  தரப்படவில்லை. அதன் காரணமாகவே எழுத்தும் ஒவியமும் ஒன்றிணைந்து பணியாற்றும் சூழல் வரவே இல்லை. இது தவிர, எழுத்தாளர்கள் என்பவர்கள் தங்கள் மேடையை ஓவியர்களுடன் சேர்ந்து பகிர்ந்துகொள்ள விரும்புவதிலை. ‘எங்கே, தங்களது படைப்புக்கு ஓவியனும் பங்குகேட்டு விடுவானோ’ என்கிற பயம். வெளிநாடுகளில் இது போன்ற சூழல்கள் கிடையாது. காமிக்ஸ் எழுத்தாளர் சோடாஸ்கி மற்றும் காமிக்ஸ் ஒவியர் மோபியஸ் இணைந்து எண்ணற்ற கிராபிக்ஸ் நாவல்களை உருவாக்கி இருக்கிறார்கள். இவை உலகப் புகழ் பெற்றவையாக விளங்குகின்றன.’’
காமிக்ஸ் படப் புத்தகத்தில் படம் வரையும் ஒவியர்களைப் பற்றி?
‘‘ஒரு விஷயத்தை காட்சி ரீதியாக தெளிவாகக் கூற வேண்டும். அதற்கு வரையும் திறமை மிகவும் அவசியம். காமிக்ஸ் புத்தகத்தில் படம் வரையும் ஓவியர்களுக்கு இருக்கும் திறமை  பல நவீன ஓவியர்களுக்கு கிடையாது என்று என்னால் நிச்சயம் கூற முடியும். நவீன ஓவியர்கள், கடிமாக உழைப்பதை பல நேரங்களில் தவிர்க்கிறார்கள். வரையும் திறன் சிறப்பாக இருந்தால் மட்டுமே காமிக்ஸ் மற்றும் கிராபிக்ஸ் நாவல்களில் பிழைக்க முடியும். காமிக்ஸ் ஒவியர் மோபியஸ் இதற்கு தலைசிறந்த உதாரணம்.’’
நவீன ஓவியம், கோட்டோவியம், அரூப ஓவியம் போன்ற பல்வேறு பிரிவுகளில் இயங்கி வருகிறீர்கள். உங்களது ஓவியங்களை எப்போது கண்காட்சியாக வைக்கப் போகிறீர்கள்?

‘‘1970களில் இருந்து நான் செய்து வந்திருக்கின்ற படைப்புகள் யாவும் கண்காட்சியாகவும் அனைத்து ஊடகங்களிலும் காணக்கிடைக்கும் வகையில் வந்திருக்கிறது. நான் எனது ஓவியங்களை தினமும் இண்டர்நெட் மக்கள் மத்தியில் காட்சிக்கு வைக்கிறேன்.  இதுதவிர கேலரி கண்காட்சியிலும் வைக்கவும் செய்கிறேன். மூன்று வருடங்களுக்கு முன்பு ‘பியூட்டி அன்டு பீஸ்ட்’ என்கிற தலைப்பில் நாற்பது ஓவியங்களை கண்காட்சியில் வைத்தேன்.  சிறு வயது முதலே நான் வரைந்த ஓவியங்களை கண்காட்சியாக காட்சிப்படுத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு திட்டமிட்டேன். அது இந்த ஆண்டு நடக்கும்.  கண்காட்சியில் வைப்பது என்பது ஒரு வகை வியாபாரம். நானும் எனது ஓவியங்களை விற்கிறேன். அது பலருக்கு தெரியாது (சிரிக்கிறார்).’’
உங்களுக்குப் பிறகு  அடுத்த தலைமுறை ஓவியர்களில் பிடித்தவர்கள் யார்?
‘‘பொதுவாக அனைவராலும் அறியப்பட்ட அளவில் ஆனந்த விகடனில் விஞ்ஞானக்கதைகளுக்கு படம் வரைந்த பாலா. அதன் பிறகு செந்தில். வேறு சிலரும் இருக்கிறார்கள்.  இதுதவிர, மக்களால் அறியப்படாத அளவில்  நிறைய பேர் இருக்கிறார்கள்.  ஒரு குறிப்பிட்ட நபரை மட்டும் கூறினால், அது மற்றவர்கள் மனதைப் புண்படுத்தி விடும்.’’

About The Author

Number of Entries : 53

Leave a Comment

© 2011 Powered By Wordpress, Goodnews Theme By Momizat Team

Scroll to top