எங்கே செல்கின்றன தொலைக்காட்சி விவாதங்கள்? Reviewed by Momizat on . தொலைக்காட்சிகளில் ஒரு காலத்தில் அரசியல் விவாதங்கள் என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று. அப்போதெல்லாம் தூர்தர்ஷன் மட்டும்தான். தேர்தல் சமயத்தில் மட்டும் க தொலைக்காட்சிகளில் ஒரு காலத்தில் அரசியல் விவாதங்கள் என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று. அப்போதெல்லாம் தூர்தர்ஷன் மட்டும்தான். தேர்தல் சமயத்தில் மட்டும் க Rating: 0
You Are Here: Home » கட்டுரைகள் » எங்கே செல்கின்றன தொலைக்காட்சி விவாதங்கள்?

எங்கே செல்கின்றன தொலைக்காட்சி விவாதங்கள்?

தொலைக்காட்சிகளில் ஒரு காலத்தில் அரசியல் விவாதங்கள் என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று. அப்போதெல்லாம் தூர்தர்ஷன் மட்டும்தான். தேர்தல் சமயத்தில் மட்டும் கட்சிகளுக்கு 15 நிமிடம் தருவார்கள். சிறுவயதில் யாரோ ஒருவர் டி.வியில் தோன்றி அரசியல் பேசுவதை மக்கள் ஆர்வத்துடன் பார்ப்பார்கள். மற்றபடி மக்கள் அரசியல் பேசுவதற்கு தந்தி பேப்பரும் டீக்கடையும்தான் ஒரே வழி. இப்போதுதான் காலம் எவ்வளவு வேகமாக மாறிவிட்டது?! செய்திச் சேனல்களின் வருகைக்குப் பிறகு அரசியல் விவாதங்கள் பெரும் கேளிக்கையாக மாறிவிட்டன. எத்தனை எத்தனை செய்திச் சேனல்கள். தினமும் நான்கைந்து பேர் எதைப் பற்றியாவது ஒவ்வொன்றிலும் விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள்.

முதலில் இதை ஆரம்பித்தவை ஆங்கிலச் செய்திச் சேனல்கள்தான். அவற்றிற்குக் கிடைத்த கவனமும் வரவேற்பும் தமிழ்ச்சேனல்களில் விவாத நிகழ்ச்சிகளை வைப்பதற்கு தூண்டுதலாக இருந்தன. டி.வி சீரியல்களின் அதே இலக்கணம் இந்த விவாத நிகழ்ச்சிகளுக்கும் பொருந்திப் போனது. சண்டை, கூச்சல் ஆகியவை எதில் அதிகம் இருக்கிறதோ அந்த நிகழ்ச்சிக்கு டி.ஆர்.பி. கிடைப்பதை உணர்ந்த சேனல்கள், அதற்கான சூழலையும் ஆட்களையும் தயார் செய்ய ஆரம்பித்தன.

மக்களுக்குத் தங்களைச் சுற்றியுள்ள பிரச்னைகள் விவாதிக்கப்படுவதில் இயல்பாகவே ஒரு ஆர்வம் உருவானது. விவாதிக்கும் மாற்றுத் தரப்புகளோடு தங்கள் தரப்புகளை ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்கினர். அந்த வகையில் இந்த விவாதங்கள் மக்களிடம் அரசியல் விவாதங்களைப் பரவலாக்கியது மிகவும் முக்கியமான ஒரு விஷயம். பெரும்பாலும் பத்திரிகைகள் சார்ந்து மட்டுமே இருந்த இந்த விவாதங்கள் இப்போது எல்லா தரப்பு மக்களுக்குமான ஒன்றாக மாறவிட்டது. இது ஒரு சமூகம் பரவலாக அரசியல்மயப்படுத்தப்படுவதன் அடையாளம். ஆனால், இந்த விவாதங்களின் வழியே மக்கள் அரசியல்மயப்படுத்தப்படுமளவு அரசியல் விழிப்புணர்வு பெறுகிறார்களா என்பதுதான் முக்கியமான பிரச்னை. பல நேரங்களில் மாறி மாறி வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் மூலம் மக்களிடம் பெரும் குழப்பம் ஏற்படுகிறதே தவிர பிரச்னைகள் குறித்த புரிதல்கள் ஏற்படுவது மிகவும் குறைவாகவே உள்ளது.

பொதுவாக அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் தொலைக்காட்சி விவாதங்களுக்கு வரும்போது அவர்கள் அதை தங்கள் கட்சிப் பிரச்சாரத்திற்கு பயன்படுத்த முயற்சிக்கிறார்களே தவிர அந்தப் பிரச்னையின்பால் அவர்களுக்கு எந்த அக்கறையும் இருப்பதில்லை. தங்கள் கட்சித் தலைவர்களுக்காகவும், தொண்டர்களுக்காகவும் மட்டுமே அவர்கள் பேசுகிறார்கள். அதில் மக்கள் நலன் சார்ந்த ஒன்று இருப்பதை அவர்கள் அறிவதே இல்லை. சாதி-மதம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தொடர்பான விவாதங்கள் ஆபத்தானவையாக மாறிவருகின்றன. சாதி-மதப் பற்றாளர்கள் பலர் சமூக துவேஷக் கருத்துகளை வளர்ப்பற்கு, பரப்புவதற்கு இந்த விவாதங்களைப் பயன்படுத்துகின்றன. உ.பியில் நடந்த மதக்கலவரங்கள் சிலவற்றிற்குத் தொலைக்காட்சி விவாதங்களும் தூபமிட்டன என்ற செய்திகள் வந்தன. தமிழகம் அந்த இடத்தை நோக்கிச் செல்லும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

இந்த விவாதங்களில் விஷயம் குறித்த புரிதலோடும் சமூக அக்கறையோடும் பேசுகிற பலர் இருப்பதுபோலவே எந்த அடிப்படை அறிவும் இல்லாமலும் பேசுகிறவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் விவாதங்களுக்கு தேவையான அறிவுசார் நிலைப்பாடுகள்கள் எதுவும் இல்லாதபோது நிகழ்ச்சியை உணர்ச்சிகரமானதாக மாற்றுகிறார்கள். சண்டையிடுகிறார்கள். எதிர்த்தரப்பினரை மோசமாக தனிநபர் தாக்குதல் செய்கிறார்கள். மாணவர் போராட்டம் பற்றி கேள்வி எழுப்பிய ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாளரை நோக்கி ஒரு காங்கிரஸ் தலைவர், ‘உன் முதலாளியையைக் கூப்பிடு… உங்க மேல சி.பி.ஐ. விசாரணை நடத்துவோம்’ என்று நேரடியாக மிரட்டியதை மக்கள் கண்டனர். இன்னொரு விவாதத்தில் ஒரு பா.ஜ.க. பேச்சாளர் என் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் ‘இவரையெல்லாம் ஏன் கூப்பிடுறீங்க?’ என்று நிகழ்ச்சித் தொகுப்பாளரைப் பார்த்துக் கேட்டார்.

தாக்குதல்கள் மட்டுமல்ல, தவறான பொய்யான புள்ளி விபரங்களைத் தருவது, ஏதோ ஒரு நாட்டில் இப்படி ஒரு சட்டம் இருக்கிறது என்று கற்பனையாக சொல்வது, நீதிமன்றத் தீர்ப்புகளைத் தவறாக மேள்கோள் காட்டுவது என்று பலவிதமான தவறான விஷயங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்தனை லட்சம் மக்களிடம் அரசியல் பேச ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருப்பது ஒரு அரிய வாய்ப்பு. அதை பொறுப்புடனும் நேர்மையுடனும் பயன்படுத்துவது முக்கியம். ஆனால், எந்த ஒரு சிறந்த வாய்ப்பையும் சீரழிப்பதுதானே தமிழனின் மரபு!

மனுஷ்ய புத்திரன்

மனுஷ்ய புத்திரன்

மனுஷ்ய புத்திரன்

About The Author

Number of Entries : 53

Leave a Comment

© 2011 Powered By Wordpress, Goodnews Theme By Momizat Team

Scroll to top