தமிழ்ப் பெரியார்கள் Reviewed by Momizat on . ஒவ்வொரு நாட்டிலும் மனிதர்கள் பிறக்கிறார்கள், வளர்கிறார்கள், வேலைகளுக்குச் செல்கிறார்கள், வியபாரம் செய்கிறார்கள், நிறைய பணம் சம்பாதிக்கிறார்கள், தானங்கள் செய்கிற ஒவ்வொரு நாட்டிலும் மனிதர்கள் பிறக்கிறார்கள், வளர்கிறார்கள், வேலைகளுக்குச் செல்கிறார்கள், வியபாரம் செய்கிறார்கள், நிறைய பணம் சம்பாதிக்கிறார்கள், தானங்கள் செய்கிற Rating: 0
You Are Here: Home » இலக்கியம் » தமிழ்ப் பெரியார்கள்

தமிழ்ப் பெரியார்கள்

வ்வொரு நாட்டிலும் மனிதர்கள் பிறக்கிறார்கள், வளர்கிறார்கள், வேலைகளுக்குச் செல்கிறார்கள், வியபாரம் செய்கிறார்கள், நிறைய பணம் சம்பாதிக்கிறார்கள், தானங்கள் செய்கிறார்கள், கோயில் பள்ளிக்கூடம் கட்டுகிறார்கள், சிலர் தன் காலத்து அரசியல், சமூக நிலைகள் மீது அதிருப்தி கொண்டு அவற்றை ஒழிக்கவும், மாற்றியமைக்கவும் தங்களையே அர்ப்பணித்துக்கொண்டு காரியங்கள் செய்கிறார்கள். மற்றும் சிலர் நாடகம், சினிமா, இசை, நடனம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டு ஆடியும் பாடியும் மக்களைக் களிப்படைய செய்கிறார்கள். அதில் ஆண்களைப் போலவே பெண்களும் இருக்கிறார்கள். எனவேதான் ஒன்றுபோல் இருக்கும் மனிதர்கள் எல்லோரும் ஒன்றில்லை. ஒவ்வொருவரும் தன் அளவில் வித்தியாசப்பட்டவர்கள். அந்த வித்தியாசமே வாழ்க்கை என்பதை சுவாரசியமாகவும் வாழ கூடியதாகவும் வைக்கிறது.vochidambaram-large kalaivanar Periyar sundarambal Va.Raa

ஒவ்வொரு காலத்திலும் பெரியார்கள் தோன்றி வாழ்ந்து அறிய செயல்கள் புரிந்து இறந்து போகிறார்கள். அது தொடர்ந்து நிகழ்வதாகும். சில பெரியார்கள் தங்கள் வாழும் காலத்திலேயே மற்றவர்களால் அறியப்பட்டுப் போற்றப்படுகிறார்கள். பலர் மறைவுக்குப் பிறகு மதிக்கப்படுகிறார்கள். எப்பொழுது அறியப்பட்டாலும் பொரியார்கள் பெரிய மனிதர்கள்தான்.
இந்தியா ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலத்தில் தமிழ்நாட்டில் பிறந்தவர்களில் சிலர் மகத்தான சாதனை புரிந்தார்கள். அவர்களில் பன்னிரெண்டு பேர்களைக் தேர்ந்தெடுத்து, ‘தமிழ்ப் பெரியார்கள்’ என்று வ.ரா எழுதியுள்ளார். அதில் சிறப்பு அம்சம் பன்னிரண்டு பேர்களும் உயிரோடு வாழ்ந்த காலத்தில் எழுதினார் என்பது தான். தமிழ்ப் பெரியார்கள் என்ற பெயரிலான கட்டுரைகள் டி.எஸ்.சொக்கலிங்கம் நடத்திய காந்தி என்ற பத்திரிகையில் வெளிவந்தன. 1943&ஆம் ஆண்டில் புத்தகமாக வெளிவந்தது.
வ.ரா.வே ஒரு தமிழ்ப் பெரியார்தான். அவர் முழு பெயர் வ.ராமசாமி ஐய்யங்கார். தமிழ் மீதும், தமிழ்ச் சமூகத்தின் மீதும் அதன் முன்னேற்றத்தின் மீதும் ஈடுபாடும் அக்கறையுங்கொண்டவர். 1889&ஆம் ஆண்டில் பிறந்த அவர் சிறுவயதிலேயே சுதந்திர வேட்கை கொண்டிருந்தார். படிப்பதும், எழுதுவதும் அவர்க்குப் பிடித்தமானதாக இருந்தது. பிரெஞ்சு காலனியான புதுச்சேரிக்குச் சென்று அரவிந்தர், பாரதியார், வ.வே.சு.ஐயர் ஆகியோரிடம் பழகினார். அந்தப் பழக்கம் கலைகள் மீது அதிகமான அக்கறை கொள்ள வைத்தது. அதில் முக்கியமானது சனாதன தர்மத்தின் திவீரமான எதிர்ப்பாளரானார். பெண்கல்வி, பெண்கள் முன்னேற்றம், விதவை மணம் ஆகியவற்றின் ஆதரவாளராக இருந்தார். ‘சுந்தரி’, ‘கோதைத்தீவு’ என்று இரண்டு நாவல்கள் எழுதினார். எழுத்து என்பது சமூக மாற்றத்திற்கானது என்று நம்பி எழுதினார்.

வ.ரா. பாரதியாரின் பரம பக்தர். பாரதியார் தன் கவிதைகளால் மட்டும் அறியப்பட வேண்டியவர் இல்லை, தன் வாழ்க்கையாலும் அறியப்பட வேண்டியவர் என்று சொல்லவே ‘மகாகவி பாரதியார்’ என்ற நூலை எழுதினார். 1933&ஆம் ஆண்டில் கே.சீனிவாசன், வ.ரா. உடன் சேர்ந்துதான் மணிக்கொடி பத்திரிகையைத் தொடங்கினார். வ.ரா அரசியல் போலவே இலக்கியத்திலும் முற்போக்கான சிந்தனைகள் கொண்டிருந்தார். நவீன இலக்கியம் படிப்பதுதான் தமிழின் பழம் இலக்கியத்தை அறிந்து கொள்ள ஆதாரமாக இருக்கும் என்பது அவர் கருத்தாக இருந்தது.

புரட்சிக்காரர்களுக்கெல்லாம் புரட்சிக்காரர் என்று அழைக்கப்பட்ட வ.ராவை ‘அக்ரகாரத்து அதிசய மனிதர்’ என்று அண்ணா குறிப்பிட்டார். தமிழ்ப் பத்திரிகைகளில் நவீன அம்சத்தையும், புதிய உரைநடையையும் கொண்டு வந்தவர் அவர்தான். அவரின் தீர்மானமான கருத்தின் வெளிப்பாடு என்று சாமான்ய மனிதர்கள் பற்றி எழுதிய ‘நடைச்சித்திரங்கள்’, ‘தமிழ்ப் பெரியார்கள்’ என்று இரண்டு புத்தகங்களையும் சொல்ல வேண்டும். நடைச் சித்திரங்கள் அவர் பார்த்த மனிதர்கள் நடவடிக்கைகள், பேச்சுக்கள் மீது ஆதாரப்பட்டிருப்பது, கற்பனை புனைவு கிடையாது. உண்மையான மனிதர்கள் செயல்பாட்டின் மீது சுவாரசியத்தையும் ஏற்றி எழுதினார். அதில் இருந்து முற்றிலும் மாறுபட்டது ‘தமிழ்ப்பெரியார்கள்’.
தமிழகத்தின் பெரிய மனிதர்கள் என்று தான் அறிந்து கொண்ட பன்னிரண்டு பேர்களைப் பற்றித் தான் அறிந்தவிதமாகவும் மற்றவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய விதமாகவும் எழுதியுள்ளார். தன் காலத்தில் வாழ்கிற மனிதர்கள் பற்றி எழுதுவது அபிப்பிராயம் சொல்வது விமர்சனம் செய்வது இடர்பாடுகள் கொண்டதுதான். அது பலரை எதிரிகளாக்கும். நான் தமிழ்ப் பெரியார் இல்லையா என்று சிலரை மனத்திற்குள் கேட்க வைக்கும். பலரை இவன் எல்லாம் தமிழ்ப் பெரியாரா என்று கேட்க வைக்கும்.

இப்படிப்பட்ட கேள்விகளை எதிர்கொண்டு, பதில் சொல்லும் விதமாக, ‘இவர்களை ஏன் பெரியார்கள் கூட்டத்தில் சேர்க்கவில்லை?‘ என்று கேட்கலாம். அர்த்தமில்லாத செயலும், காரணம் இல்லாத காரியமும் இருக்க முடியாது. பெரியார்களை நான் எவ்வாறு பொறுக்கினேன் என்று சொல்கிறேன் என்று பதில் சொல்லி விட்டு எழுதுகிறார். ‘அனுகூலம் எதுவும் இல்லாமல், பிரதிகூலங்களுக்கு மத்தியில் வாழ்ந்தும் வீறுகொண்டு எழுதும் பேர்வழிகள் பெரியார்கல் என்பதில் சந்தேகமே இல்லை. நான் குறிப்பிட்டிருக்கிற அத்தனை பேர்களும் யாருடைய உதவியும் இல்லாமல் தங்கள் சொந்த முயற்சியால் முன்னுக்கு வந்தவர்கள். இவர்கள் எல்லோருமே ஒவ்வொரு அளவில் மேதாவிகள். சரித்திரத்தில் இடம் பெறக்கூடிய காரியங்களைக் செய்தவர்கள், எப்பொழுது பட்டியல் என்பது சர்ச்சைக்கு உட்பட்டதுதான். எனெனில், நியாயம் என்பது ஆளுக்கு ஆள் மாறுபடுவது. எப்படி இருந்தாலும் வ.ரா.வின் ‘தமிழ்ப் பெரியார்கள்’ கவனம் பெறுவதுதான். அதில் முதல் இடம் சக்ரவர்த்தி ராஜ கோபாலாச்சாரியார், இரண்டாவது இடம் ஈ.வெ. ராமசாமி நாய்க்கர், அதோடு சத்தியமூர்த்தி வ.உ.சிதம்பரம்பிள்ளை ஆகியோரைப் பற்றி எழுதியிருக்கிறார்.
அரசியல், சமூக முன்னேற்றத்தில் ஈடுபாடு கொண்டு உழைக்கிறவர்கள் எப்போதும் முன்னே இருக்கிறார்கள். ஏனெனில், அவர்கள் தங்கள் காலத்தின் பிரச்னைகளில் முக்கிய புள்ளியாக இருக்கிறார்கள். அதோடு அவர்களே பிரச்னையாகவும் இருக்கிறார்கள். அப்படி இருந்தவர்கள்தான் போராட்டங்கள் நடத்தியும், பத்திரிகைகள் நடத்தியும் பெரியவர்கள் ஆனவர்கள். அந்த வகையில் தமிழப் பெரியார்களில் திரு.வி.கல்யாணசுந்தர முதலியார், டாக்டர் பி.வரதராஜுலு நாயுடு, ஜார்ஜ் ஜோசப் சிறப்பிடம் பெறுகிறார்கள்.

தமிழ்ப் பெரியார்கள் என்று தான் பொறுக்கியெடுத்தவர்கள் பற்றி நம்பிக்கையோடும், பாராட்டும் விதமாகவும் வ.ரா. எழுதியுள்ளார். எல்லோர்க்கும் வாழ்க்கை என்பது ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரே இலட்சியத்தோடு ஒரே கட்சியில் சேர்ந்து உழைத்தாலும் ஒவ்வொருவர் வாழ்க்கையும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது. அவர் காலத்தில் காங்கிரசியில் சேர்ந்து தேச விடுதலைக்காகப் பாடுபட்டவர்களில் வேறு வேறு தளங்களில் இருந்து வந்தவர்கள். அவர்கள் வாழ்க்கை முறையும் வேறுபட்டுத் தான் இருந்தது. அதாவது ராஜாஜியும், ஈ.வெ.ராவும் ஒன்று கிடையாது. சத்திய மூர்த்தியும், வ.உ.சிதம்பரம் பிள்லையும் சேர்ந்து இருப்பது இல்லை. அது கால வித்தியாசம் என்பது இல்லை. கருத்து முரண்பாடுதான். அது இருக்கவே செய்யும் என்பது தான் வ.ராவின் தமிழ்ப் பெரியார்கள் என்ற புத்தகத்தின் அடிப்படையாக இருக்கிறது.

தமிழ்ப் பெரியார்களில் ஒருவராக அவர் எழுதியிருக்கும் சத்தியமூர்த்தி கலை ஆர்வலராகவும், நாடகம், சினிமா, நடனம் இசைமீது ஈடுபாடு கொண்டவராகவும், தேச சேவையில் முன்னனியிலும் இருந்தார். நிறைய சர்ச்சைகளில் சிக்கியவர். அவரைப் பற்றி வ.ரா. பின் வருமாறு எழுதியுள்ளார். ‘ஜீவனத்துக்கு வகையில்லாதவன், இந்த தேசத்தில் தேச சேவை செய்ய முன் வருவது ரொம்பவும் கடினமான வேலை. தியாகம் என்ற பகட்டு விளம்பரம் செய்து கொண்டு தேசத் தொண்டு செய்கிற ஜன சமூகத்தில் ஏழை சத்தியமூர்த்திக்கு வாழ்க்கையை பதம் அறிந்து அனுபவிக்க ஆசைப்பட்ட சத்தியமூர்த்திக்கு நல்ல பெயர் எப்படி கிடைக்கும்?’
சத்தியமூர்த்தியின் வாழ்க்கையில் மூளி இருப்பதாக சொன்னேனே அது இதுதான். படாடோபம் சத்தியமூர்த்திக்கு பிடிக்காது. ஆனால், அவரால் ‘ப்தவிகாக’ இருக்கவும் முடியவில்லை. அதனாலேதான் நல்ல பெயர் விரைவில் கிடைக்கவில்லை. அதனால் என்ன? ஜன சமூகம் சத்தியமூர்த்தியை கைவிட்டு விடலாம். ஆனால், சரித்திரம் கைவிட்டுவிடாது. தேச விடுதலைக்கென்றே வாழ்ந்து வீழ்ந்த உத்தமன் என்ற தீர்ப்பு சத்தியமூர்த்திக்கு கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

‘தமிழ்ப் பெரியார்கள்’ கவனிப்புப் பெற காரணமாக இருப்பது வ.ரா. தமிழகப் பெரியார்களை அரசியல், சமூக சீர்திருத்தம், பத்திரிகை, இசை, நடனம், சினிமா என்று பலதுறைகளிலும் சாதனை புரிந்தவர்களைக் கண்டு எழுதியிருப்பதுதான். அதில் ஆனந்த விகடன் எஸ்.எஸ்.வாசன், இசைவாணியும், நடிகையுமான கே.பி.சுந்தராம்பாள், நகைச்சுவை நடிகர் கலைவானர் என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரையும் சேர்த்து எழுதியிருப்பதுதான் தமிழ்ச் சமூகம் முழுவதையும் ஒன்றாகப் பார்த்து எழுத முடிந்தது என்பதும் அவர் சிறப்பு அம்சம்தான்.

வ.ரா.வின் தமிழ்ப் பெரியார்கள் எழுதப்பட்டு எண்பதாண்டுகள் சென்றுவிட்டன. அவர் எழுதியவர்களில் ஒருவர் கூட உயிரோடு இல்லை. ஆனால், அவர்கள் பெரியார்கள் என்பதில் ஐயமே கிடையாது. மனிதர்கள் இறப்பதால் இல்லாமல் போவதில்லை. அவர் வாழ்க்கை எழுதப்பட்டு உள்ளதால் ஜீவிதமாக இருக்கிறார்கள். அதனையே 1951&ஆம் ஆண்டில் காலமாகி விட்ட வ.ரா. எழுதிய ‘தமிழ்ப்பெரியார்கள்’ எனும் புத்தகம் நிலைநாட்டிக் கொண்டிருக்கிறது.

 

சா.கந்தசாமி

About The Author

Number of Entries : 48

Leave a Comment

© 2011 Powered By Wordpress, Goodnews Theme By Momizat Team

Scroll to top